(Reading time: 13 - 26 minutes)

அந்த வாழ்த்து அட்டையை கொடுத்தது சாத்விக், ரத்னா யாதவியை அடித்து இழுத்து வந்த இரண்டே நாளில் சாத்விக் சென்னைக்கு கிளம்புவதால், யாதவியை காண கல்லூரிக்கு வந்தான். அப்போது தேர்வுக்கு படிக்க அவர்கள் கல்லூரியில் விடுமுறை விட்டிருந்தனரே, இருந்தாலும் தோழிகள் அனைவரும் கல்லூரியில் இருந்தே படிக்கலாம் என்று முடிவு செய்திருந்தனர். அதனால் அனைவரும் அன்று கல்லூரிக்கு வந்திருந்தனர்.

ஆனால் யாதவியை ரத்னா கல்லூரிக்கு அனுப்பாததால், தோழிகளிடம் நான் வீட்டிலிருந்தப்படியே படித்துக் கொள்கிறேன் என்று அவள் தகவல் சொல்லியிருந்தாள். ஓரளவிற்கு அனைத்து தோழிகளும் வந்திருக்க, சக்தி தான் கடைசியாக வந்தவள், கல்லூரிக்குள் செல்வதற்கு முன் அந்த நேரம் சாத்விக் அவளை காண அருகில் வந்தான்.

அவன் முகத்தில் துணி கட்டி கூலரெல்லாம் போட்டிருக்கவும், அவள் பயந்து இரண்டடி பின்னால் நகர, "சக்தி நான் தான் சாத்விக்.." என்று சொல்லியப்படியே அவன் அருகே வரவும் தான் தெளிந்தாள்.

என்ன இருந்தாலும் திரைப்படங்களில் நடிப்பவன், அவனை இப்படி நேரில் பார்க்க முடியுமா? அப்படியே பார்த்தாலும் அவனோடு பேச தான் முடியுமா? அப்படிப்படவன் அவளை ஒரே நாள் அதுவும் அவள் தோழிகளின் பட்டாளத்தோடு நின்றிருக்க, கூட்டத்தோடு கூட்டமாக தான் அவளை பார்த்திருக்கிறான். அது அவனது ஞாபகத்தில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை, அதுவும் பெயரை கூட ஞாபகம் வைத்திருக்கிறானே, இதெல்லாம் சாத்தியமானது யாரால்? யாதவியால் தானே? அது இப்போதைக்கு சக்திக்கு ஞாபகம் வந்தாலும், அதை இன்னும் சிறிது நேரத்தில் மறப்பாள் என்று அவளே நினைத்திருக்க மாட்டாள்.

"சாத்விக் நீங்களா?"

"ஆமாம் நான் தான், ஆமாம் யாதவி இன்னைக்கு காலேஜ்க்கு வரலையா? ரொம்ப நேரமா வெயிட் பண்றேன் அவ வரலயே.."

"எங்களுக்கு இப்போ ஸ்டடி ஹாலிடேஸ்.. இருந்தாலும் காலேஜ்க்கு வந்து படிக்கலாம்னு தான் வந்தோம்.. ஆனா யாதவி அம்மா அவளை வீட்லயே படிக்க சொல்லிட்டாங்களாம்.. அவ வர முடியாதுன்னு சொல்லிட்டா.."

எதற்காக போக வேண்டாமென்று ரத்னா சொல்லியிருப்பார் என்பதை யூகித்தவனாக, "சக்தி எனக்கொரு ஹெல்ப் செய்றீயா? யாதவியை நீ பார்க்கும் போது அவக்கிட்ட நான் கொடுத்ததா சொல்லி இந்த கார்டை கொடு.. இப்போ அவசரமா நான் சென்னைக்கு போறேன்.. அந்த விஷயத்தையும் அவக்கிட்ட சொல்லிடு.." என்று சொல்லி ஒரு வாழ்த்து அட்டையை கொடுக்கவும்,

"சரி கண்டிப்பா கொடுத்திட்றேன்.." என்று அவள் வாங்கிக் கொண்டாள்.

பின் அவனிடம் விடைப்பெற்று கல்லூரிக்குள் நுழைந்தவள், அவன் சென்றுவிட்டானா? என்று ஒருமுறை வெளியில் பார்த்துவிட்டு, தன் தோழிகள் இருக்கும் இடம் செல்லாமல், தனியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே அமர்ந்தாள்.

அவளுக்கு இப்போது அந்த வாழ்த்து அட்டையை பார்க்க வேண்டும் அதற்காகவே வந்தவள், அதை உறையிலிருந்து எடுத்தாள்.

சுற்றி ரோஜா இதழ்கள் பரவியிருக்க, நடுவில் இரண்டு இதயங்கள் பின்னி பிணைந்து இருந்தது அட்டையின் முன் பக்கம், அதை பிரித்து உள்புறம் பார்க்க, அங்கங்கே அதேபோல் இரு இதயங்கள் பின்னி பிணைந்துக் கொண்டிருந்தது. அதற்கு நடுவில் இருந்த காலி இடத்தில், சாத்விக்கின் கையெழுத்தில்,

காண்பதெல்லாம் கானல் நீராக

கால் வைக்கும் இடமெல்லாம்

காய்ந்த சருகுகளாக மாறி போக

போகும் பாதை அறியா பயணத்தில்

உன் பாதச் சுவடுகள் பதிந்த நேரம்

காலம் அனைத்தும் வசந்த காலமாக மாற

வழியெங்கும் மழைச் சாரல் தூற

நட்பென்னும் உறவுக் கொண்டு

உன் கை கோர்த்து நடந்து

வாழ்வின் எல்லையை அடைய வேண்டும்

என்று அழகாய் ஒரு கவிதை எழுதியிருந்தது. அதன் கீழே விரைவில் உனை காண வருவேன், நன்றாக படி, இப்படிக்கு சாத்விக் என்று எழுதியிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.