(Reading time: 13 - 26 minutes)

அந்த கவிதையை படிக்கும் போது அதை ஒரு நட்பு ரீதியில் எழுதியதாக தான் தோன்றும், ஆனால் உன் கை கோர்த்து வாழ்வின் எல்லையை அடைய வேண்டுமென்றால் என்ன அர்த்தம்? சாத்விக் அவளை காதலிக்கிறான் என்று தானே அர்த்தம்,

ஆனால் அதை நினைத்து, சாத்விக், அதுவும் சினிமா நடிகன் சாத்விக், யாதவியை அதாவது தன் தோழி யாதவியை காதலிக்கிறானா? என்று சக்தி மகிழ்ந்திருக்க வேண்டும், உடனே அந்த வாழ்த்து அட்டையை யாதவியிடம் சேர்த்திருக்க வேண்டும், ஆனால் சக்தி அதை செய்யவில்லை,

எதனால்? அய்யோ இந்த காதல் சரி வருமா? சாத்விக் உண்மையில் தான் யாதவியை காதலிக்கிறானா? இல்லை ஏமாற்ற இப்படியெல்லாம் கவிதைகள் எழுதி பதின் வயதில் இருக்கும் பெண்ணின் மனதை திசை திருப்புகிறானா? என்றெல்லாம் யோசித்து அதை அவள் யாதவியிடம் காட்டாமல் மறைத்திருந்தாள் கூட பரவாயில்லை..

ஆனால், "என்னோட ஜகதீஷை என்கிட்ட இருந்து உன் பின்னாடி சுத்த வச்சல்ல யாதவி.. உன்கிட்ட எவ்வளவு எடுத்து சொல்லியிருப்பேன்.. அதுல நான் எவ்வளவு அளவு ஜகதீஷை  காதலிக்கிறேன்னு உனக்கு புரியவே இல்லல்ல..

அப்படிப்பட்ட நீ மட்டும் சாத்விக்கை காதலிச்சு உன்னோட வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கணுமா? கண்டிப்பா அது நடக்கக் கூடாது.. இந்த க்ரீட்டிங் கார்டை உன்கிட்ட காட்டவே மாட்டேன்.. உன்னை சாத்விக் காதலிச்ச விஷயம் கடைசி வரைக்கும் உனக்கு தெரியவே கூடாது.." என்று மனதிற்குள் முடுவெடுத்துக் கொண்டாள். அதன்பின் தான் சாத்விக்கை பற்றி யாதவியிடம் தோழிகள் முன்பு தவறாகவும் கூறினாள்.

முன்பு அப்படி ஒரு முடிவெடுத்தவள், அப்படியே இருந்திருந்தால் பரவாயில்லை, ஆனால் இப்போது கோவில் மண்டபத்தில் அமர்ந்திருந்தவள், "சாத்விக் உன்னை காதலிக்கிற விஷயம் கடைசி வரைக்கும் உனக்கு தெரியக் கூடாதுன்னு தான் நான் நினைச்சேன் யாதவி, ஆனா இப்போ உனக்கு அது தெரிஞ்சாகணும்.. ஏன்னா நீ சாத்விக்கை மனசளவில் தேடினதை அன்னைக்கு நம்ம ப்ரண்ட்ஸோட பேசினப்ப நான் புரிஞ்சிக்கிட்டேன்.. நம்ம உயிருக்கு உயிரா நேசிச்ச ஒருத்தர் நமக்கு கிடைக்கலன்னா அது எவ்வளவு வேதனைன்னு நீ உணரணும்.. அதுக்கு உன்மேல சாத்விக் வச்சிருக்க காதல் பத்தி உனக்கு தெரியணும்.." என்று வன்மத்தோடு சிரித்தவள்,  அந்த வாழ்த்து அட்டையை யாதவியிடம் காண்பிக்கும் முடிவில் இருந்தாள்.

தாலிக்கட்டியப் பின் இருக்கும் சடங்குகள் முடிவடைந்ததும் மணமக்களை தனியாக் கோவிலைச் சுற்றி வலம் வரச் சொல்லி இருவரின் அன்னையர்களும் அவர்களை அனுப்பி வைத்தனர்.

இருவரும் கோவிலை சுற்றி வர, அப்போது எதைச்சேயாக பார்ப்பது போல், "யாதவி.." என்று சக்தி குரல் கொடுத்தாள்.

இங்கு யாதவிக்கு தெரிந்தவர்கள் யார் என்பது போல் விபாகரன் பார்க்க, சக்தி குரல் போல் இருக்கிறதே என்று யாதவியும் திரும்பி பார்த்தாள்.

"ஹே யாதவி உனக்கு கல்யாணமா? என்ன திடிர்னு.." என்று சக்தி அருகில் வந்து கேட்க, விபாகரன் அவள் யார் என்று கேட்பது போல் யாதவியை பார்த்தான்.

"என்னோட ப்ரண்ட் சக்தி.. என் க்ளாஸ்மேட்டும் கூட.." என்று அவனிடம் அறிமுகம் செய்தவள்,

"சக்தி இங்க நீ எப்படி?" என்றுக் கேட்டாள்.

"செமஸ்டர் லீவ்னு பாட்டி வீட்டுக்கு போனேன் இல்ல.. இன்னைக்கு தான் திரும்ப பாண்டிச்சேரிக்கு போறேன்.. கார் எடுத்துட்டு வந்ததால இங்க இறங்கி கோவில் பார்க்கலாம்னு வந்தோம்.." என்று சக்தி விஷயத்தை சொல்லவும்,

"சரி நீங்க பேசுங்க.. நான் அங்க அந்த சன்னிதானத்துக்கிட்ட நிக்கறேன்.." என்று சொல்லி விபாகரன் தள்ளிச் செல்லவும், நினைத்த விஷயம் தானாகவே நடக்க, சக்தி நிம்மதியானாள்.

விபாகரன் சென்றதும் இன்னும் கொஞ்சம் தூரம் அவளை இழுத்து வந்த சக்தி, மீண்டும் இந்த திடீர் திருமணத்தை பற்றி கேட்கவும், யாதவியும் தந்தையால் ஏற்பட்ட பிரச்சனையை கூறினாள்.

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல யாது.. இப்படி ஃப்ரீயா இருக்க வேண்டிய வயசுல உனக்கு கல்யாணம் செய்து வச்சிட்டாங்களே.. அதுவும் உனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்க வேண்டியது, பெரிய சினிமா ஸ்டாரோட மனைவியா நீயும் ஒரு பிரபலம் ஆகியிருக்க வேண்டியது, ஆனா இப்போ ஒரு சாதாரண ஆளை கட்டிக்கிட்டு மாச சம்பளத்தை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கும் நிலைமை வந்துடுச்சே.." என்று சொல்ல வேண்டிய விஷயத்தை சொன்ன திருப்தியோடு சக்தி யாதவியை பார்க்க, அவள் முகம் குழப்பத்தை பிரதிபலித்தது.

"என்ன சொல்ற சக்தி.. நீ சொல்றது புரியல.." என்று அவள் சக்தியை பார்த்து கேட்டாள்.

"என்ன சொல்ல யாது.. இந்த விஷயத்தை முன்னமே உன்கிட்ட மறைச்சதை நினைச்சு குற்ற உணர்ச்சியா இருக்கு.. ஆனா அப்போ அந்த விஷயத்தை மறைக்க நினைச்ச காரணமும் உன் நல்லதுக்காக தான், நீ ஏமாந்து போயிடக் கூடாதுன்னு தான், ஆனா அது என்னோட மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சு.. திரும்ப உன்னை பார்த்ததும் அதை கண்டிப்பா சொல்லிடணும்னு மனசு துடிச்சுது.. ஆனா இனி அதை உன்கிட்ட சொல்லாம இருக்கறது தான் நல்லது.."

"அப்படி என்ன விஷயம் சக்தி.. சினிமா ஸ்டார் மனைவின்னுல்லாம் சொன்ன.. எந்த விஷயத்தை என்கிட்ட இருந்து மறைச்ச.."

"வேண்டாம் யாதவி அதை நீ தெரிஞ்சிக்கவே வேண்டாம்.. உனக்காக உன்னோட ஹஸ்பண்ட் காத்திருக்கார், அதனால நீ போ.. நானும் கிளம்பறேன்.." என்று அவள் நகர பார்க்க,

அவளை போக விடாமல் தடுத்து, அவள் கையை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்ட யாதவி, "என் மேல சத்தியமா என்னன்னு நீ சொல்லணும்.." என்று சொல்லவும், சக்தியும் தான் நினைத்தது நடந்துவிட்ட மகிழ்ச்சியில் சாத்விக் கொடுத்த வாழ்த்து அட்டையை காண்பித்து, சாத்விக் அவளை சந்தித்த விஷயத்தை சக்தி சொல்லி முடிக்கவும், யாதவி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.