(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 19 - தேவி

Kaanaai kanne

கிருத்திகா முதல் நாள் கண்ட கனவின் அடுத்த நிகழ்வு என்னவாக இருக்கும் என்ற எண்ணங்கள் சுழல மவுண்ட் அபு செல்ல தயார் ஆனாள்.

அதிகாலை வேளையில் புறப்பட்டு விட்டனர். காலை உறக்கம் கலைந்த மாணவர்கள் பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் உறங்க ஆரம்பித்தனர்.  கிருத்திகாவிற்கும் கனவு பிரச்சினைகளால் உறக்கம் சரிவர இல்லை.  அவளும் உறங்க ஆரம்பித்து விட்டாள்.

பொதுவாக இரவுகளில் மட்டுமே கிரண் தேவி பற்றிய கனவு வருவதால் தைரியமாகவே உறங்கினாள்.  ஆனால் அவளின் மனதைப் புரிந்தார் போல் இன்றைக்கு கனவு தொடர்ந்தத.

ராணாவின் பதில் கேட்டு பிரித்விராஜ் வெளியில் சமாதானம் ஆனாலும் உள்ளுக்குள் பயந்து கொண்டே தான் இருந்தான் . அவன் முகம் பார்த்து கிரண் தேவி ப்ரித்விராஜ் உடன் பேச விரும்பினாள். ஆனால் தயக்கமாக இருந்தது.

ராணாவிடம் நீண்ட நாள் தளபதியாக இருப்பவர்களிடத்தில் கூட கிரண் தேவி பேசுவதில்லை.  பிரிதிவிராஜை அறிந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில் நேரடியாக பேசுவதற்கு யோசித்தாள்.

ராணாவிற்குத் தெரிந்தால் என்ன சொல்லுவாரோ என்ற பயமும் இருந்தது.  ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது ப்ரித்விராஜ் தன் குடில் நோக்கிச் செல்லுகையில்,  அவனோடு நடந்தபடி தன் மனதில் நினைத்ததைக் கேட்டாள் இளவரசி.

“வீரரே தாங்கள் ஏதோ கவலைப்படுவது போல் தெரிகிறது.  அதன் காரணம் நான் அறியலாமா? “ என்று வினவினாள்

“தேவி,  வீரர்களின் குடியும் , கும்மாளமும் அளவு மீறுவதாகக் காண்கிறேன்.  மகாராஜா மீது பயமும்,  மரியாதையும் இருந்தாலும் இந்த குடி அவர்களின் வேகத்தை மந்தபடுத்துகிறதோ என்று அஞ்சுகிறேன் “

“நானும் இந்தக் கவலையை காஹூவிடம் பிரஸ்தாபித்தேன் வீரரே.  ஆனால் அவர்களின் சிறு மகிழ்ச்சியை கெடுக்க விரும்பவில்லை என்று கூறி விட்டார் “

“என் மனதில் ஏனோ நாம் சில இக்கட்டுகளைச் சந்திப்போம் என்று தோன்றுகிறது தேவி. “

“எனில் நம் தளபதிகளை விழிப்பாக இருக்கச் சொல்லுங்கள் வீரரே “

நான் சொல்வதை விட ராணா சொல்லுவதே சிறந்தது தேவி.  இல்லை அவருக்கு நிகரான தலைவர் சொன்னால் பலன் இருக்கும் “

“உண்மைதான் வீரரே.  தாங்கள் கூறினால் அதை அலட்ச்சியம் செய்வதோடு வீண் பொறாமை கொள்வார்கள். நான் எந்த விதத்தில் தங்களுக்கு உதவி செய்ய இயலுமெனின் தயங்காது கூறலாம் இளவரசே .”

“என்னுடைய கவலையைத் தாங்கள் உணர்ந்து கொண்டது பற்றி மிகுந்த மகிழ்ச்சி இளவரசி.  தங்களால் இயலும் எனில் தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான பதினைந்து வீரர்களை எனக்கு கீழே பணி புரிய ஏற்பாடு செய்ய வேண்டும் “

“தாங்களும் உபதளபதி தானே இளவரசே.  தங்கள் கீழ் உள்ள வீரர்கள் தங்களுக்கு கட்டுப்பட்டுத் தானே ஆகவேண்டும் “

“அவர்கள் ராணாவின் கட்டளை இல்லாமல் அசையக் கூட மாட்டார்கள் தேவி.  எனக்குத் தேவை என் கட்டளை கேட்பவர்கள் மட்டுமே “

“தங்கள் பிகானர் ராஜ்ஜிய வீரர்கள் தங்களுக்கு கட்டுப்படுவார்களே.

“அவ்வாறு நான் செய்தால் படைகளுக்குள் பிளவு ஏற்படுத்துபவன் ஆவேன் . என் செயல்கள் ராணாவிற்கு வெற்றித் தேடித் தர மட்டுமே.  அதில் எங்கேனும் தவறு ஏற்பட்டால் அந்த வீரர்களுக்கு என்னைக் கொல்லவும் அனுமதி உண்டு.  அது ராணாவின் வீரர்களால் மட்டுமே சாத்தியம்.

பிருதிவிராஜ் பேச்சைக் கேட்ட கிரண் தேவிக்கு அவன் மேல் மதிப்புக் கூடியது.

“இன்று இரவுக்குள் தங்கள் தேவைக்கேற்ப வீரர்களை ஏற்பாடு செயகிறேன் இளவரசே “ lஎன்று கூறிவிட்டுச் சென்றாள் இளவரசி.

அவள் செல்லும் திசையைப் பார்த்து கொண்டிருந்த பிரிதிவிராஜ்  மனதில் இளவரசியின் இனிமையான குரலும்,  தெளிவான புரிதலும் ஒரு மயக்கத்தைத் தோற்றுவித்தன.

இளவரசியை அறிந்த நாள் முதலாக  அவளின் செயல்களால் ஏற்பட்டு இருந்த மயக்கம்,  தற்போது அவளின் நளினங்களில் நிலை கொண்டு இருந்தன.  முகம் மறைத்து இருக்கும் அந்த தேவதையின் முகம் பார்க்கும் ஆர்வம் மேலோங்கியது.  ஆனால் தன் நிலை உணர்ந்து தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டான் பிகானர் இளவரசன்.

கிரண் தேவி கூறியபடி அன்றைய முதல் ஜாம முடிவில் இரு வீரர்கள் பிருதிவிராஜ் சந்தித்தனர்.

“தளபதி அவர்களை வணங்குகிறோம்.  தங்கள் உத்தரவுப் படி நடக்க இளவரசி ஆணை இட்டுள்ளார்கள்.

“நல்லது வீரர்களே.  என்னுடைய செயல்கள் அனைத்தும் ராணாவின் வெற்றிக்கும்,  நம் மண்ணின் உரிமை முழக்கத்திற்கும் உரியதாக மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கையைத் தங்கள் வீரர்களுக்கும் சேர்த்து உறுதி கூறுகிறேன். “

“தங்கள் மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது தளபதி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.