தொடர்கதை - காணாய் கண்ணே - 20 - தேவி

அந்த அம்பு பறந்து வந்தக் காட்சியில் அப்படியே கிருத்திகா திடுக்கிட்டு விழித்தாள். கண் விழித்ததும் சுற்றுப்புறம் திரும்பிப் பார்க்க, தன் நிலை உணர்ந்தாள்.
கிருத்திகா மற்றும் குழுவினர் மவுண்ட் அபு செல்வதற்காக ஜெய்சல்மரில் இருந்து அபு ரோடு வரை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர். முதல் இரண்டு மணி நேரம் பேசியபடி வந்த மாணவர்கள், காலை உணவை ஒரு ஹை வே ஹோடேலில் முடித்து இருந்தனர். நன்றாக சாப்பிட்டதும், காலை சீக்கிரம் எழுந்ததிலுமாக எல்லோரும் தூங்க ஆரம்பித்து விட்டனர்.
டிரைவருக்கு கம்பெனி கொடுக்கவென்று ப்ரித்விராஜ்ஜும் அவன் உதவியாளர்களும் மட்டும் விழித்து இருந்தனர். இந்த நேரத்தில் தான் கிருத்திகாவின் கனவும், விழிப்பும் தொடர்ந்தது. அவள் கனவில் கண்ட ப்ரித்விராஜின் அதிர்ந்த முகம் மனதிற்குள் வர, மீண்டும் கண்ணை மூடப் பயந்து, வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாள்.
தமிழ்நாடு , கேரளா இரண்டு மாநிலத்திலும் மலைப் பாதை என்பது பசுமையாக இருக்கும். பேர் தெரியாத மரங்கள், செடிகள் , புதர்கள் நிறைந்து கிடக்கும். கடும் வெயிலிலும் கூட அந்த மரங்களின் சருகுகள் மலை மீது இருக்கும்.
ஆனால் மவுண்ட் அபு மலைப் பாதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. வழக்கமான செடி கொடிகளோடு அங்கே அங்கே மொட்டைப் பாறைகளும் இருந்தன. மேலும் சிறு சிறு ஓடைகள் சலசலவென்று ஓடியது. பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது. இருவழிப் பாதையாக இருந்தாலும், நல்ல அகலமான சாலைகள்.
மலையைக் குடைந்து பாதைகள் போடப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் ஒவ்வொருவராகக விழிக்க, மற்றவர்களையும் எழுப்ப ஆரம்பித்து இருந்தனர். குகைக்குள் பஸ் செல்லும்போது அங்கிருந்த எல்ஈ.டி விளக்குகள் வெளிச்சம் கொடுத்தன.
நண்பகல் மூன்று மணி அளவில் அபு அடைவதற்கு இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கையில் ஒரு ஓடை அருகே வண்டியை நிறுத்தி சற்று இளைப்பாறினார்கள்.
அப்போது மாணவன் ஒருவன் “பாஸ், இந்த ஓடையில் குளிக்கலாமா?” என்று கேட்டான்.
“இப்போவா? “
“எஸ் பாஸ். ரொம்ப கசகசன்னு இருக்கு. “
“அன் டைமா இருக்கே?“
“அது எல்லாம் பார்த்துக்கலாம் பாஸ்.”
ப்ரித்வி எளிதில் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் கிட்டதட்ட எல்லோருமே கேட்கவும், அவனால் மறுக்க இயலவில்லை. சில போன் கால் பேசி, அந்த இடத்தின் தன்மையை நன்றாகத் தெரிந்து கொண்ட பின் தான், அனுமதித்தான். அப்போதும் மாணவர்களிடத்தில்,
“முக்கியமான கண்டிஷன். சின்ன ஓடைதான். நீச்சல் தெரியனும்னு அவசியம் இல்லை. ஆனால் இது காட்டாறு மாதிரி. தீடிர்னு தண்ணி அதிகமா வந்தா சமாளிக்கத் தெரியனும். அதனால் பொதுவான தண்ணீர் மேலே பயம் உள்ளவங்க ஓடையில் இறங்க வேண்டாம்.” என்று கூறினான்.
எல்லோரும் ஓ என்று கத்தினர்.
“ஒகே பாஸ்” என்றனர்.
முதலில் மாணவர்களை குளிக்கச் சொல்லி அனுப்பி வைத்தவன், அவர்களை தள்ளியிருந்து கண்காணித்தான். அதிக ஆட்டம் போட அனுமதிக்காமல், முக்கியமாக ஒருவரையொருவர் தள்ளி விட்டுக் கொண்டு இருந்தால் அதை எல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.
மாணவிகள் சற்றுத் தள்ளி இருந்த சிறு குன்றின் மீது ஏறிக் கொண்டு இருந்தனர். ப்ரித்விராஜ் அவர்கள் மீதும் ஒரு கண் வைத்து தான் இருந்தான்.
அரைமணி நேரம் ஆன பின் மாணவர்களை மேலே ஏறுமாறு அழைத்தான். முதலில் கொஞ்சம் விளையாடினாலும், எல்லோரும் ஏற ஆரம்பித்தனர்.
அவர்கள் எல்லோருக்கும் ஓடையிலிருந்து வெளியே வந்த பின், அருகே இருந்த டீ ஸ்டாலில் சூடான பானத்திற்கு ஏற்பாடு செய்தவன், மாணவிகளைத் தேடிச் சென்றான்.
சிறு குன்றுதான். மெதுவாக ஏறினாலே அரை மணி நேரத்தில் ஏறி விடலாம். இருட்டுவதற்குள் மவுன்ட் அபு சென்று விட வேண்டும் என்பதால், ப்ரித்வி மாணவிகளை அழைக்க வேகமாகவேச் சென்றான்.
இருபது நிமிடத்தில் அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தவன், அங்கிருந்த எல்லோரும் பதட்டமாக இருக்கவே என்னவென்று விசாரித்தவனுக்கு
“கிருத்திகாவைக் காணவில்லை சார்” என்றார்கள் மாணவிகள். அதைக் கேட்டுச் சற்று நேரம் ஒன்றும் ஓடவில்லை. பின் தலையைக் குலுக்கியவன் மீண்டும் அவர்களிடத்தில் விசாரித்தான்.
“என்ன ஆச்சு? “
உச்சிக்கு வந்ததும், மாணவிகள் அங்கேயே அமர்ந்து விட்டனர். கொஞ்ச நேரம் தங்களை ஆசுவாசப் படுத்தி விட்டுத் தான் மற்றவர்களிடம் பேசவே ஆரம்பித்து இருந்தனர். அதற்குப் பிறகே
“ஏய், எங்கடி இந்தக் கிருத்திகா? நமக்கு முன்னாடி ஏறினா. இங்கேயும் இல்லை. எங்கே போயிட்டா?” என்று ராகவி கேட்கவும், மற்றவர்களும் அதானே என்று ஆமோதித்து, அவளைத் தேடத் தொடங்கினர்.