,முதலில் அருகில் எங்காவது இருப்பாள் என்று எண்ணியவர்கள், சிறிது நேரம் ஆகியும் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆகவும் பதறத் தொடங்கினர். அப்போது ப்ரித்விராஜ் சரியாக வரவும், அவனிடத்தில் விஷயத்தைச் சொன்னார்கள்.
“ராகவி , நீங்க கிருத்திகா கூடப் போகலையா?” என்று கேட்டான்.
“பாதி தூரம் வரை நாங்க சேர்ந்து தான் வந்தோம் பாஸ். அவ வேகத்துக்கு என்னாலே ஈடு கொடுக்க முடியல. அதுக்குப் பின்னாடி ஸ்லோ ஆகிட்டேன்.” என்று கையைப் பிசைந்தாள்.
அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, அவர்கள் நின்ற இடத்தில் இருந்து மறுபுறம் பார்த்தான். குன்றின் மறுபுறம் தான் தெரிந்தது. இந்த இடத்தில் அவள் இறங்கி இருக்க வாய்ப்பு இல்லை என்று உணர்ந்து, சுற்றுமுற்றும் பார்த்தான்.
மாணவிகள் அவள் அருகில் எங்காவது ஒளிந்து இருப்பாள் என்று எண்ணியே தேடியிருந்தார்கள். ஆனால் ப்ரித்வி அவளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்ற எண்ணத்தில் தேடியதால், சற்றுத் தள்ளி ஒரு பெரிய மரத்தின் பின் பாதை மாதிரி செல்வதைக் கவனித்தான்.
அந்தப் பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கவும், மாணவிகள் பின்னே வர முயன்றனர். அவர்களிடம் திரும்பி வரவேண்டாம் என்றுக் கூறியவன், சற்று எச்சரிக்கையாகவே கீழே இறங்கினான்.
அவன் எதிர்பார்த்தது போல் அங்கே அங்கே கற்கள் எல்லாம் புரண்டு கிடந்தன. ப்ரித்வியின் மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டது. மேலும் முன்னேறிச் சென்றவன், இவர்கள் வந்த பாதைக்கு இன்னொரு கிளைப் பாதையாக இந்தப் பாதை செல்லுவதைக் கண்டான். சற்று யோசித்து விட்டு, ராகவியை அழைத்து அவர்கள் வந்த வழியே இறங்கச் சொன்னான்.
அவர்கள் கிருத்திகா இல்லாமல் இறங்க மறுக்கவே,
“என்னோட கணிப்பு, அவங்க பாதை மாறிப் போயிருப்பாங்கன்னு தோணுது. நீங்க பாதுகாப்பா இருந்தா தான் நான் அவங்களைத் தேட முடியும். அதனால் ப்ளீஸ் நீங்க எல்லோரும் நம்ம பஸ் இருக்கிற இடத்துக்குப் போயிடுங்க. பஸ் கிட்டே ரீச் ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க. உங்க பிரெண்ட் எங்கே வழி மாறி இருக்காங்கன்னு பார்த்துக் கூட்டிட்டு வரேன்.” என்றான்.
அவன் சொல்லுவதைப் புரிந்தவர்களாக கவலையோடு சென்றார்கள். அவர்கள் இறங்குவதைப் பார்த்து விட்டு, மற்றப் பாதை வழியாக ப்ரித்வி இறங்க ஆரம்பித்தான்.
கிட்டதட்ட அந்தக் குன்றின் நடுப் பகுதிக்கு வரவும், அங்கே ஒரு பெரிய கல்லில் கிருத்திகா கண் மூடி அமர்ந்து இருப்பதைப் பார்த்து முதலில் நிம்மதி அடைந்தான். பிறகே கோபம் எழ,
“கிருத்திகா “ என்று உரக்க அழைத்தான்.
அதில் கண் விழித்தவள்,
“தேங்க் காட். நல்லவேளை வந்துட்டீங்க பிரின்ஸ். “ எனவும்,
“உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? டூர்ன்னு வந்தப் பிறகு எல்லோரடவும் சேர்ந்து இருக்கத் தெரியாதா ? வந்து இருக்கிற எழுபது பேரும் ஆளுக்கு ஒருபக்கமா போனா, உங்களைத் தேடற வேலை மட்டும் தான் பார்க்க முடியும். டூர் போக முடியாது. இது எல்லாம் புரியாம இருக்க நீ என்ன குழந்தையா?” என்று பட படவெனப் பொரிந்து விட்டான் ப்ரித்விராஜ்.
அவனின் கோபத்தைக் கண்டுச் சற்றுப் பயந்தவள், அவன் முடிக்கவும்,
“நான் இப்போப் பேசலாமா?” என்றாள்.
அவள் கேட்கவும் தான், அவன் கோபத்தில் பேசியதையே உணர்ந்தான் ப்ரித்வி. என்னதான் தன்னுடைய பொறுப்பில் இருப்பவள் என்றாலும் அவளைக் கேள்விக் கேட்கும் உரிமை தனக்கு இல்லை உணர்ந்தான்.
“சாரி. உங்களைக் காணும்னு டென்ஷன்லே கொஞ்சம் கத்திட்டேன். “ என்றவன்,
“என்னாச்சு? வழி மாறிட்டீங்களா?” என்று கேட்டான்.
“சாரி பாஸ். தப்பு என் மேலே தான். அவங்க எல்லோரும் மெதுவா ஏறிட்டு வந்தாங்க இல்லையா? எனக்கு போர் அடிக்கவே நான் வேகமா வந்துட்டேன். அப்போ இந்தப் பக்கமா சிலர் போனதைப் பார்த்தேன்.” என்றவள், அப்போது நடந்ததைச் சொல்ல ஆர்மபித்தாள்.
தன் பிரெண்ட்ஸ் எல்லோரும் பின்னால் வர, கிருத்திகா வேகமாக ஏறியதில் மூச்சு வாங்க நின்று கொண்டு இருக்கும் போது தான், காற்றில் ஏதோ பேச்சு சத்தம் கேட்டது.
நம்மளத் தவிர வேறே யாருடா இங்கே இருக்கான்னு சுற்றிப் பார்த்தாள் கிருத்திகா. யாரையும் காணவில்லை எனவும்,
“உன்னோட மனப் பிராந்திக்கு அளவேயில்லாமப் போச்சு கிருத்தி. “ என்று தன் தலையில் தட்டிக் கொண்டாள்.
அப்போது மீண்டும் யாரோ நடக்கும் சத்தம் கேட்கவும், சத்தம் வந்த திசை நோக்கி நடந்தாள்.
இவர்கள் வந்தப் பாதை குன்றின் அடிவாரத்தில் இருந்தே யாரும் பார்க்கும் வண்ணம் இருந்தது. அது இல்லாமல் மரங்கள் அடர்ந்து இருந்தப் பகுதியில் வேறு ஒரு கிளைப் பாதை இருக்கக் கண்டாள் கிருத்திகா. அந்தப் பக்கமிருந்துதான் சத்தம் வந்ததைக் கண்டு மெதுவாக அருகில் போனாள்.