(Reading time: 8 - 15 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

அதைக் கேட்டதும் பற்களை “நற...நற”வென்று கடித்த தேவநாதன், “நல்லவேளை நீ இதைச் சொல்லும் போது என் பெரிய பொண்ணு இங்க இல்லை!...இருந்திருந்தா மனசே நொறுங்கிப் போயிருப்பா!” அவர் கண்கள் கலங்கியே விட்டன.

“உண்மைதானுங்கய்யா...யாராயிருந்தாலும் அப்படித்தானே இருக்கும்?” தரகர் ஒத்து ஊதினார்.

சில நிமிடங்கள் அமைதியாய் யோசனையில் ஆழ்ந்த தேவநாதன் திடீரென்று கேட்டார், “சரி...அவங்க கேட்டாங்க!...அதுக்கு நீரு என்ன சொன்னீர்?”

“நான் என்ன சொல்லுவேன்?..எனக்கும் சரியான கோபம்தான் வந்திச்சு!...ஆனது ஆகட்டும்னு ஏடாகூடமாய்த் திட்டிப் போட்டு வந்திடலாமா?ன்னு கூடப் பார்த்தேன்!...அப்புறம் என்னை நானே அடக்கிக்கிட்டு சும்மாவாச்சும் அவங்க திருப்திக்காக “சரி...கேட்டுட்டு வந்து சொல்றேன்”னுட்டு வந்திட்டேன்!...இல்லைங்கய்யா...விட்டுலாமுங்கய்யா!...இந்த வரன் இல்லேன்னா இன்னொண்ணு...அதுக்காக நீங்க மனசைப் போட்டு குழப்பிக்காதீங்கய்யா!”

“ம்ம்ம்” என்றவாறே தலையை மேலும், கீழும் ஆட்டிய தேவநாதன், எதையோ தீவிரமாய் யோசித்து விட்டு, தயங்கித் தயங்கிக் கேட்டார், “ஏன் கண்ணுசாமி...அவங்க ஆசைப்படற மாதிரியே அவருக்கு அந்த சின்னதைப் பேசி முடிச்சாத்தான் என்ன?...எப்படியும் இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறகு அவளுக்கும் ஒரு மாப்பிள்ளையைப் பார்க்கத்தானே போறோம்?...பேசி முடிக்கத்தானே போறோம்?..அதைக் கொஞ்சம் முன்னாடியே பண்ணிட்டதா இருக்கட்டுமே!”

தேவநாதன் வாயிலிருந்து அப்படியொரு வார்த்தை வர வேண்டும், என்பதற்காகவே காத்திருந்தவர் போல், தரகர் முகம் பிரகாசமானது. “சரியாய்ச் சொன்னீங்கய்யா!...இந்தக் காலத்துல அலையா அலைஞ்சாலும் வரன் அமையறது குதிரைக் கொம்பா இருக்கற நிலைமைல இப்படியொரு வரன்...வலியத் தேடி வரும் போது...சட்டுன்னு முடிச்சிடறதுதான் புத்திசாலித்தனம்!...” தரகர் தன் தொழில் புத்தியைக் காட்ட ஆரம்பித்தார்.

“நீ சொல்றது வாஸ்தவம்தான்யா!...ஆனா இதை எப்படி பொண்ணுக கிட்டே சொல்றது?...சொன்னா பெரியவ மனசொடிஞ்சு சோகமாயிடுவா!...சின்னவ பொங்கி எழுந்து கோவமாயிடுவா!...அதான்...எப்படி?” தேவநாதன் மனம் லேசாய் நிறம் மாற ஆரம்பித்தது. ஒரு பெண்ணுக்குத் தந்தை என்ற நிலையில் அவரால் வேறு எப்படி சிந்திக்க முடியும்?

“நீங்க ஏன் சாமி நேரடியாச் சொல்றீங்க?...வீட்ல சம்சாரத்து கிட்டச் சொல்லி நாசூக்கா...பக்குவமா...நிதானமா...புரியற மாதிரி எடுத்துச் சொல்லச் சொல்லுங்க!...அதிலெல்லாம் நம்மை விட பொம்பளைகதான் சாமார்த்தியசாலிக!...” சொல்லி விட்டு வெற்றிலைக் காவிப் பற்களை அசிங்கமாய்க் காட்டிச் சிரித்தார் தரகர்.

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.