வரச் சொன்னாங்க!” என்றபடி ஹாலிலேயே நிற்க,
“அடடே...பாத்திரங்கள் இன்னும் கழுவாமலேயே இருக்கே?” சொல்லியவாறே எழுந்த சம்பூர்ணம் தட்டுத் தடுமாறியபடி அவற்றைக் கழுவச் சென்றாள்.
“பரவாயில்லை நீங்க போய் உட்காருங்க...நானே கழுவி எடுத்திட்டுப் போய்க்கறேன்!” என்ற அர்ச்சனா சம்பூர்ணத்தின் பதிலுக்கு கூடக் காத்திராமல், தானே டைனிங் ஹாலுக்குச் சென்று, அங்கே மேஜை மீதிருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கிச் சென்றாள்.
சம்பூர்ணத்தால் நம்பவே முடியவில்லை, “என் கூட சரிக்குச் சரி சண்டை போட்டவ!...இப்படி மாறிட்டாளே?...”
அதே நேரம் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த அர்ச்சனாவின் மனம், “அன்னிக்கு என் அக்காவுக்கு அந்த வரன் அமையணும்...மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒரு நல்ல முடிவு சொல்லணும் என்பதற்காக...தன் கணவர் இறந்த துக்கத்தையே மனசுக்குள்ளார மறைச்சு வெச்சுக்கிட்டுக் காத்திருந்த இந்தப் பொம்பளைக்கு இந்த உதவி கூடச் செய்யலேன்னா எப்படி?” என்று தனக்குள் எண்ணிக் கொண்டது.
எப்போது, “டக்...டக்”கென்று ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு, உள் அறையிலிருந்து வெளியே வந்த சுரேஷ், சமையலறைக்குள் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கும் அர்ச்சனாவைப் பார்த்து விட்டு, தாயிடம் கேட்டான், “அவங்க யாரும்மா?...சர்வெண்டா?”
பதறிப் போன சம்பூர்ணம், “ச்சூ...மெதுவாப் பேசுடா...அவ காதுல விழுந்திடப் போகுது!” என்று அவசரமாய் அவனை அதட்டி, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாப்பாடு கொண்டு வந்தாங்களே?... அவங்களோட ரெண்டாவது பொண்ணு!...பேரு அர்ச்சனா!...எதோ ஆபீஸ்ல வேலை பார்க்கறா!”
“ஓ...ஸாரி...ஸாரி!” என்று தன் முன் நெற்றியில் அடித்துக் கொண்ட சுரேஷ் “டக்...டக்”கென்று ஊன்றுகோலை ஊன்றியபடி நடந்து வந்து ஹால் சோபாவில் அமர்ந்தான்.
கழுவிய பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அர்ச்சனா வெளியேறிய பின், தன் தாயை அருகில் அழைத்து, சோபாவில் தன் பக்கத்தில் அமரச் சொன்ன சுரேஷ், “அம்மா...நான் இனிமேல் இங்கதான் இருக்கப் போறேன்!...மடகாஸ்கருக்குத் திரும்பிப் போகப் போறதில்லை!” என்றான்.
அதைக் கேட்ட்தும் மகிழ்ச்சியின் உச்சிக்கே போனாள் சம்பூர்ணம். இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “அப்ப...அங்க நீ பார்த்திட்டிருக்கற வேலை என்னாகறது?” கேட்டாள்.
“ம்மா....ஆக்சுவலா...என்னோட காண்ட்ராக்ட் போன மாசமே முடிஞ்சிடுச்சு!...அதை தொடரலாமா?...வேண்டாமா?...ங்கற ஒரு குழப்பத்துல நான் இருந்தப்பதான் அப்பாவோட டெத் நியூஸ் வந்திச்சு!...யோசிச்சுப் பார்த்தேன்!...அப்பா போன பிறகு இங்க நீ தனியாத்தானே இருக்க வேண்டி வரும்?...பேசாம நானும் இங்கியே வந்திட்டா....உனக்கும் ஒரு துணையாகும்!...அதே