“இப்படி தினமும் லேட்டா சாப்பிட்டால் எப்படி தீபக்? கொஞ்சம் சீக்கிரம் வரக் கூடாதா?” என உணவு பரிமாறிக் கொண்டே மகனிடம் விசாரித்தாள் மாயா.
“என்ன செய்ய அம்மா, வேலை இருந்தது..”
“ம்ம்ம்... நீயும் இதையே தான் தினமும் சொல்ற... உனக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்து உன்னை கவனிச்சுக்க ஒருத்தி வந்தால் எனக்கு கவலையே இல்லை...”
தீபக் பதில் சொல்லாமல் அமைதியாக உணவு உண்ண தொடங்கினான்.
“இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடாத! நானும் மூணு வருஷமா கேட்டுட்டே இருக்கேன்... உனக்கு வயசு முப்பதாச்சு... உன் கூட படிச்சா பசங்களுக்கு எல்லாம் இரண்டு மூணு வயசில குழந்தையே இருக்கு...”
“விடு மாயா! அவன் சாப்பிடும் போது அமைதியா இரு, புலம்பாதே!”
மகனுக்காக பேசிய கணவர் வெங்கட்டை ஒரு பார்வை பார்த்த மாயா, பேச்சை மாற்றினாள்.
“தீபக் கேட்க மறந்துட்டேனே, நான் சொன்ன ஜான்சி ராணி வீட்டுக்கு போய் அந்த பணத்தை கொடுத்தீயா? அவளை பார்த்தீயா?”
தீபக்கின் மனதில் சில மணி நேரங்களுக்கு முன் கண்ட அந்த கண்ணீர் ததும்பும் முகம் நினைவில் வந்தது... அவன் முகத்தில் தானாகவே புன்னகை தோன்றியது...
“பார்த்தேன், பார்த்தேன்.. பணத்தை கொடுத்தாச்சு... ஆனால் உங்க ஜான்சி ராணிக்கு வீட்டுக்கு வெளியே தான் வீரம் எல்லாம் போலும்! வீட்டில் நான் பார்த்த போது அவங்க அம்மாவிடம் டோஸ் வாங்கி அழுதிட்டு இருந்தாள்...”
“அச்சச்சோ! பாவம்... பணம் தொலைந்ததற்காக இருக்கும்...”