(Reading time: 7 - 13 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 19 - முகில் தினகரன்

சுலோச்சனாவின் திருமண நாள் நெருங்க நெருங்க அந்தக் குடியிருப்பே களை கட்டியது. பக்கத்துப் போர்ஷன் நரசிம்மனும், அவன் மனைவி பானுவும் சுலோச்சனாவின் திருமண வேலைகளில் தாங்களாக வலிய வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள,

ஒரு துக்க காரியம் நடந்து முடிந்த அந்தக் காம்பௌண்டிற்குள் அடுத்ததாய் ஒரு நல்ல காரியம் உடனே நடந்தால், அது அந்த துக்க காரியத்தின் சோகச் சுவடுகளைத் துடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் சம்பூர்ணமும் தன்னை சுலோச்சனாவின் திருமண வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டாள்.

ஒரு கால கட்டத்தில், உள் நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் ஒரு பாவ பூமியைப் போல், பரிதாபமாகக் கிடந்த அந்தக் காம்பௌண்டு, இப்போது எல்லோரும் ஒருவரோடொருவர் சுமுகமாய்ப் பழக, ஒரு புண்ணிய பூமியாய் மாறியிருந்தது. எல்லோர் முகத்திலும் புன்னகையே தவழ்ந்தது. எல்லோர் மனத்திலும் புத்துணர்ச்சியே ஓங்கியிருந்தது.

கீரியும், பாம்புமாய் இருந்த அர்ச்சனாவும், சம்பூர்ணமும் மிகவும் அன்னியோன்யமாகி விட, அர்ச்சனா அடிக்கடி வந்து சம்பூர்ணத்திற்கு வீட்டு வேலைகளில் உதவ ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் சுரேஷிடமிருந்து விலகியே இருந்தவள், இப்போது சகஜமாய்ப் பேசிப் பழகத் துவங்கினாள். சுரேஷும் தான் புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் தொழில் குறித்து அவ்வப்போது அர்ச்சனாவிடம் கருத்துக் கேட்பான். ஒரு அலுவலகத்தில் செகரட்டரியாகப் பணி புரியும் அவள் தன் அனுபவத்தின் பலனாய்த் தரும் ஐடியாக்களிலிருந்து அவளது விஷய ஞானத்தையும், அறிவுக் கூர்மையையும், புரிந்து கொண்டு, பல முறை வியந்திருக்கிறான்.

“இவளை ஏன் நம்முடைய பிசினஸில் வொர்க்கிங் பார்ட்னராகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது?..இவ்வளவு டேலண்ட் வைத்துக் கொண்டு ஏன் ஒரு தனியார் கம்பெனியில் சொற்ப சம்பளத்திற்கு இவள் வேலை பார்க்க வேண்டும்?”

தன்னுடைய எண்ணத்தை அவன் தன் தாயிடம் தெரிவித்தான்.

“தாராளமாய்ச் செய்யலாம்!...உண்மையைச் சொல்லணும்னா...அந்த தேவநாதன் குடும்பத்துல இருக்கற எல்லோருமே ரொம்ப நேர்மையானவங்க!...நம்பிக்கைக்குப் பத்திரமானவங்க!..கோடி ரூபாயைக் கூட எந்த வித எழுத்தும் இல்லாமக் குடுக்கலாம் அவங்களை நம்பி!” சம்பூர்ணமும் நற்சான்றிதழையே தர.

“அப்ப...நான்...அவகிட்ட இதைப் பத்திப் பேசுட்டாம்மா”

“ம்...பேசு!...நீ இப்படி இருக்கற நிலைமைக்கு உன் கூட நம்பிக்கையான ஒரு பார்ட்னர் இருக்கறதுதான் உனக்கும் நல்லது!”

அன்று மாலையே தன் வீட்டிற்கு வந்த அர்ச்சனாவிடம், நேரடியாகவே கேட்டான் சுரேஷ்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.