(Reading time: 29 - 57 minutes)

09. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

து அதிர்ச்சி அடைந்ததை பார்த்த கார்த்திக், “சும்மா பயப்படாத மது, நிரு கூட சேர்ந்து என்னோட ட்ரீம் ப்ராடக்ட்டை  மார்க்கெட்ல லான்ச்  பண்ணி சக்ஸஸ் ஆகுற வரைக்கும் என் மனசுல காதல், கல்யாணம் இதுக்கு எல்லாம் இடமில்லை. சும்மா பொண்ணுங்க பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்ற ஆளு நான் இல்ல...அதுக்கு எனக்கு நேரமும் இல்லை. சந்தியா மானம் தான் பெருசுன்னு நினைக்கிற மிடில் கிளாஸ் ஆர்தோடெக்ஸ் (பழமைவாத கொள்களை பின்பற்றும்) பாமிலில பிறந்தவ. அவள இப்படி தான் டீல் பண்ண முடியும். அவளை பழி வாங்குற வரைக்கும் என் மனசு ஆறாது. “

 

மது “காதி .. நீ சொல்றத பாத்தா பயமா இருக்கு. ஒரு பொண்ணோட வாழ்கையில விளையாடாதடா...”

 

கார்த்திக், “அதெல்லாம் பாத்தா முடியுமா..ஏற்கனவே அவ மேல ஈவு, இரக்கம் எல்லாம் பாத்ததுக்கு தான் என்னை ஸ்ப்லிட் பெர்சனாலிட்டியா ஆக்கி வைச்சிருக்கா....இனிமே அவ விசயத்தில் எதுக்கும் இளகவே மாட்டேன் மது.பிஸ்னஸ்ல அவள வைச்சு ஜெயிக்கணும். பெர்ஸனலா அவள நோகடிச்சு ஜெயிக்கணும். சவாலான விஷயம் தான். ஆனா, ரெண்டுமே கண்டிப்பா நடக்கும்” என்று சொல்லி வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

 

மதுவிற்கு அவன் பேசுவதெல்லாம்  புரியாத புதிர் போல தோன்ற,  அவன் ஒழுக்கம் பற்றி அவளுக்கு தெரியுமாதலால் அவன் பெரிய தவறு எதுவும் செய்ய மாட்டான் என்று அதை பற்றி பெரிதாக எண்ணவில்லை. அவளுக்கு அவன் மேல் நம்பிக்கை இருந்ததோ இல்லையோ அவள் அத்தை சௌபர்ணிகா வளர்ப்பின் மீது அதீத நம்பிக்கை இருந்தது.

 

க்தியின் வீட்டிற்கு  மற்ற இரு தோழிகளும் வந்து சேர, ஒரு வழியாக மாடியில் இருந்து சக்தியுடன் இறங்கிய சந்தியா, “பட்டு   மாமி, நாங்க இங்க தான் நாலு மணி வரையும் இருப்போம். எங்களுக்கு தயிர் சாதம் கிண்ட முடியமா” என வினவ அதிர்ச்சி அடைந்த மற்ற தோழிகள் “பாவி...பிரியாணின்னு ஆசை காண்பிச்சு தயிர் சாதத்தை சாப்பிட சொல்லற “ என கடுப்பாக, “பிரியாணி வரும்.... ஆனா வராது” என சந்தியா சொல்ல, மற்றவர்கள் முழிக்க,  “இப்போ உடனே வராதுன்னு சொல்ல வந்தேன்...அதுனால மாமி கையால இந்த கொளுத்துற வெயிலுக்கு இதமா தயிர் சாதமும் ….மாவடுவும்.....அதோட விட்டுவாளா.... நம்ம உயிர் தோழி சக்தி...... நமக்காக குடு குடுன்னு ஓடி போய் தெரு முனை பெட்டி கடைல செல்வம் பட்டை ஊறுகாயை  வாங்கி அதை  நமக்கு செகண்ட் சைடு டிஷ்ஷா கொடுக்காமா சாப்பிடவே மாட்டா ....இல்ல சக்கு” என்றாள்.  அதற்கு சக்தி மற்ற தோழிகளிடம், “இந்த ஜந்துவை நம்பாதீங்கடி....ஏற்கனவே  சாப்பிட்ட பிரியாணி செறிச்சு, ஒரு காபியை அடிச்சு ...அம்மணி அடுத்த ரௌண்டடுக்கு தயாராகிட்டு இருக்கா” என்று சொல்ல மற்றவர்கள்,  “அடிப்பாவி நாங்க கெட்ட பசில இருக்கோம்" என முறைக்க “கேர்ல்ஸ், நோ கொலைவெறி. நாலு மணிக்கு நம்ம ஆஸ்தான காபி ஷாப்க்கு கூட்டிகிட்டு போறேன்...... சந்தியா நாக்கு தவறினாலும் வாக்கு தவற மாட்டாடி ….. இது நம்ம சக்கு  மேலஆணை ....” என கையை சக்தி தலையில் சத்தியம் பண்ண போக “ஆளை விடுடு. நான் எம்.எஸ். வாழ்கையில விளக்கேத்தனும்”  என்றவாறே தெறித்து ஓட வழக்கம் போல மற்றொரு குட்டி கலாட்டா அங்கே அரங்கேறியது.

 

கார்த்திக்கின் அப்பா சதாசிவத்துடன் பிறந்தது இரண்டு சகோதரர்கள், பரமசிவம், நல்லசிவம்; இரண்டு சகோதரிகள் கலைவாணி, கிருஷ்ணவேணி.

 

கலைவாணி சென்னையில் வசிக்கிறார். கிருஷ்ணவேணி அவர்களின் மகள் தான் மது. மது கல்லூரி முதலாண்டு படிக்கும் போதே கிருஷ்ணவேணி தவறி விட்டார். சதாசிவத்தின் சகோதரர்களில் பரமசிவம், திருமணம் முடித்த கையோடு தனிக்குடித்தனம் சென்று விட, நல்லசிவமோ அப்படி செல்ல விருப்பாமல் மனைவி மக்களுடன் சதாசிவத்துடனே இருந்து விட்டார். மூத்த மருமகளாய் வீட்டின் முழுப்பொறுப்பை ஏற்றிருந்த சதாசிவத்தின்  மனைவி சௌபர்ணிகா கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் அங்கு பரமசிவம் தனது குடும்பத்துடன் வருவார்.  

 

சற்று முன் கார்த்திக் அஞ்சியது அவரது அன்னை சௌபர்ணிகாவிற்கு தான். மிகவும் கடுமையும் கண்டிப்பும் மிகுந்தவர். வீட்டில் அனைவரும் அவரிடம்   பேசக்கூட பயப்படுவார்கள், சதாசிவம் உட்பட. அவர் வீட்டில் இருக்கும் போது குண்டூசி விழும் சத்தம் கூட தெளிவாக கேட்கும். அந்த அளவிற்கு அமைதியாய் இருக்கும். டிவி இருக்கும். ஆனால் கேபிள் டிவி இருக்காது. “உட்வார்ட்ஸ் கரைப் வாட்டர்” மாதிரி தலைமுறை தலைமுறையாக ஒரே முத்திரையுடன்,

…......டுன்ட்ன்டு....டுவைண்டு.....டுன்ட்ன்டு.....டுவைண்டு

............டுடுடுடோன்னடடை......டுடுடுடோன்னடடை

என்ற பின்னணி இசையில், திரையில் தோசையம்மா...தோசை..அம்மா சுட்ட தோசை போல  வட்டமிட்டு, அதில் தூர்தர்ஷன் என பெயரிட்டு  வரும்   “தூர்தர்ஷன்” தொலைக்காட்சியை  மட்டும் தான் காண முடியும்.  தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் பூச்செடிகள் இருக்கும். ஆனால் பூக்களை குழந்தைகள் கூட தொடக்கூடாது. சாப்பாட்டு மேஜையில் வைத்து தான் சாப்பிட வேண்டும். காலையில் 6 மணிக்கு மேல் ஒருவர் தூங்ககூடாது. இரவில் 9 மணிக்கு மேல் ஒருவரும் விழித்திருக்க கூடாது.......இன்னும் நிறைய கட்டுபாடுகள்.....கடுமையான விதிமுறைகள். சிறுவயதிலே கார்த்திக் போலவே அந்த வீட்டு பிள்ளைகள் அனைவரும் கண்டிப்பும் ஒழுக்கமும் நிறைந்த கான்வென்ட் பள்ளியில் படித்ததால் அவர்களுக்கு வீட்டு விதிமுறைகள்   பழகி போயிற்று. ஆனால் ஞாயிறு அன்று மட்டும் விதிவிலக்கு - குடும்பத்தினர் ஒன்று கூடும் அந்த நாள் தனது கட்டுபாடுகளை சற்று தளர்த்தி விடுவார் சௌபர்ணிகா.

 

சதாசிவம் சௌபர்ணிகாவிற்கு மாற்றாக அனைவரிடமும் நட்புடன் பழகுபவர். தனது பிள்ளைகள் சூர்யாவிற்கும், கார்த்திக்கிற்கும் அவர் நெருங்கிய தோழன் போல இருப்பார். கண்டிப்பும், அரவணைப்பும் பெற்றோரிடம் இருந்து சரி பாதியாக கிடைத்ததுனாலவே என்னவோ என்ன தான் அமெரிக்காவில் வசித்தாலும்  மேலை நாட்டு கலாச்சார மோகம் அவர்கள் இருவரையும்  ஈர்க்கவில்லை.

 

க்தியின் தாயார் சக்தி தோழிகளிடம் “எனக்கு கிச்சன்ல செத்த ஹெல்ப் பண்ணேல்னா நானே அரை மணி நேரத்தில் சைவ பிரியாணி செய்துடுவேன்“ என்றார்.

 

“மாமி... எனக்கு வெறும் தயிர் சாதம் போதும். என்னை அழைக்காதேள். சமையல் எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை”...என்றாள் சந்தியா.

 

சக்தியோ, “ஆமாமா.... சாப்பிடறது மட்டும் உனக்கு தான் தமிழ்ல தெரிஞ்ச ஒரே வார்த்தை...நீ வரவே வேண்டாம். வாங்கடி கிச்சனுக்கு போலாம்...” என மற்ற தோழிகளை அழைத்து செல்ல நாய்க்குட்டி போல சந்தியாவும் பின்னாலே ஓடி வர அவளின் பட்டு மாமி “சமைக்க பழகிக்கோடி...இப்படியே டேக்கா கொடுத்து விளாண்டுன்டு இருந்தேனா...போற ஆத்துல என்ன சொல்லுவா... ”, என சந்தியாவிடம் கேட்க,

 

அவளோ அடுப்பு மேடையில் ஏறி குதித்து உட்கார்ந்தவாறே  “அதெல்லாம் அண்ணா சமைச்சு சமாளிப்பார் ” என சொல்ல, அவள் தோழிகள் “உனக்கு தான் அண்ணனே  கிடையாதேடி” என கேள்வியுடன் நோக்க “மாமி நீங்க, ஹஸ்பண்டை அண்ணா ன்னு தான கூப்பிடுவேள்.... அவர் தான் சமைப்பார்” என்றாள்.

 

சக்தி, சந்தியாவிடம் “ஏய்...... இந்த ஆத்துல பிறந்த நானே சாதாரணமா தான பேசுறேன். உனக்கு என்ன.....என் வாயை கிளராம...... இங்க வந்து காயை கிளறு” என்று கரண்டியை சந்தியா கையில் கொடுக்க, அதை வாங்கியவாறே கீழே இறங்கி அடுப்பின் அருகில் வந்த சந்தியா , “என்ன.....ம்மா டாமேஜ் பண்ற. ஒவ்வொரு  டாமேஜ்க்கும் நஷ்ட ஈடா என் கேரண்டி கார்ட்ல  பத்து பத்து கிலோ கூட்டுவேண்ட. ஐம்பது கிலோ தாஜ்மஹால்லாக்க நான் எம்.எஸ்.க்கு கொடுத்த கேரண்டி... இப்போ உள்ள நிலவரப்படி தாஜ்மஹால் அறுபது கிலோவாயிடுச்சுி.....” என சொல்ல சக்தி அதற்கு, “இங்க பாரு ஜந்து, என்னை கல்யாணத்துக்கு முன்னாடி மெலிய வைக்கிறியோ இல்லையோ உன்னை கட்டிக்க போறவனனை சமைக்க வைச்சே ஓடா தேய வைச்சுடுவ” என சொல்ல,

 

மற்றொரு தோழி “அப்ப தாஜ்மகால் மாதிரி இருக்கும் மனுசன் குதுப்மினார் மாதிரி ஆகிடுவான்னு சொல்லு” என அனைவரும் சிரிக்க,

 

சந்தியாவின் மனதிற்குள் கார்த்திக் சோமாலியா பஞ்சத்தில் அடிப்பட்ட ஜீவனை போல் வந்து நின்றான். தோழிகளின் சிரிப்பு சற்று முன்பே அடங்கிவிட, சந்தியா மட்டும் இன்னும் சிரித்தவாறே கடனே என காயை கிண்டி கொண்டே,”....ஆனாலும் கார்த்திக் நீ திறந்த வீட்டிக்குள் நுழையுற மாதிரி என் மனசுக்குள் இப்படி காமெடி பீஸ்ஸா  வரக்கூடாது.....இனி நோ என்ட்ரி” என தனக்கு தானே சொல்லி சிரித்து கொண்டிருந்ததை அவள்  தோழிகள்  கிண்டலாக பார்த்தனர்.

 

“கேட் ஏன் இப்படி திறந்து கிடக்கு. யாராவது உள்ள வந்தா கூட தெரியாது...வாட்ச்மேன் எங்க” கார் வீட்டை அடைய, கார்த்திக் வாட்ச்மேனை தேடவும்,  அவனும் காரை பார்த்தவுடன் ஓடி வருவதும் சரியாக இருந்தது. “முதலாளி, மீராம்மா வீட்டில் இருந்து வந்துருக்காங்க. கொஞ்சம் லக்கேஜ் எல்லாம் எடுத்து வைக்க டிரைவர்க்கு உதவிக்கு போனேன். அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க” என்றான் வாட்ச்மேன். சரியென காரை நிறுத்தி விட்டு மது முன்னே செல்ல  வீட்டிற்குள் நுழைய முற்பட்ட கார்த்திக்கை தடுத்து நிறுத்தினான் சூர்யா.

 

சூர்யாவின் மனைவி மீரா  பெரிய தொழிலதிபரின் மகள். முந்தைய நாள் இரவு மீராவின் உறவினர் ஒருவரின் வீட்டு விஷேசத்திற்கு வந்த மீராவின் குடும்பத்தாரை மதிய உணவிற்கு அழைத்திருந்தார் சௌபர்ணிகா.

 

சூர்யா ரகசியமாய் “காதி... அம்மா உன் மேல ரெம்ப கோபமா இருக்காங்க. சந்தியாவை அவங்களுக்கு தெரியும் போல. நான் அறைந்தது எதுவும் சொல்லலை. சரி... சந்தியா உன் மேல கோப பட்டாளா? ஏற்கனவே மது மேல கெட்ட கோபத்தில இருந்தா. என்ன ஆச்சு?” என்றான்.

 

“அவளா....கோபமா ….....எனக்கு சமாதி எழுப்பி வைச்சிட்டுல வந்திருக்கா” என்றான் ஆதங்கத்துடன். பின் அவன் நடந்ததை எல்லாவற்றையும் இரத்தின சுருக்கமாக சொல்லி முடித்தான். அவன் சொன்னதை கேட்டதும்  சூர்யாவிற்கு சிரிப்பு தான் வந்தது. “சூர்யா...கூட பிறந்த தம்பியை ஒருத்தி கேனையனா சொல்லி வைச்சுட்டு வந்திருக்கா...கொஞ்சம் கூட கவலை படாம சிரிக்குறியே....” என்றான் கார்த்திக்.

 

சூர்யா அதற்கு, “சந்தியா, நல்ல பொண்ணுடா... என்ன..... குறும்பு கொஞ்சம் ஜாஸ்தி.....ஆனா அவ குறும்பெல்லாம் ரசிக்கிற படி இருக்கும். உன்னை விட அதிகமா பாதிக்க பட்டவங்கெல்லாம் இருக்கிறாங்க. அதை நினச்சு மனசை தேத்திக்கோ” என்றான்.

 

“நீ எதையும் ஈஸியா எடுக்கிற டைப். ஆனா நான் அப்படி இல்லை. என்னால அவ குறும்பை ரசிக்கவும்  முடியாது...சகிக்கவும் முடியாது” என்றான் கார்த்திக் சற்று வெறுப்பாக.

 

சூர்யா, “சின்ன பொண்ணு தான. விடு. நீ சீரியஸ் ஆனா ஆளு. அவ கூல்லான ஆளு. நீ முக்கியம்ன்னு நினைக்கிற விஷயங்கள் அவளுக்கு  அசட்டையா தெரியுது. நானும் நோட் பண்ணேன். எதிர் துருவங்கள். ஆனா அதுக்கு தான்  ஈர்ப்பு சக்தி அதிகம்” என சூர்யா சொல்லும் போது,

 

“என்ன டாக்டர் … ஈர்ப்பு சக்திய பத்தி பேசிகிட்டு இருக்கீங்க. அது இருந்திருந்தா  நான் வந்தவுடனே  என்னை தேடி இருப்பீங்கல்ல....எங்க வீட்டு ஆளுங்க வந்ததை கூட  கண்டுக்காமா என்ன சீரியஸ் டிஷ்கஸ்ஷன் ” என்று அவர்கள் பேச்சில் நுழைந்ததாள் மீரா.

 

“மலை வாழை ரெண்டு லோடு கம்மியா இருக்கு. அதான் என்ன ஏதுன்னு மாமனார்கிட்ட நாலு கேள்வி கேக்க சூர்யாகிட்ட போட்டு கொடுத்துகிட்டு இருக்கேன்” என புன்னகையுடன் கார்த்திக் சொல்ல ,

 

“சகுனி... சொன்னாலும் சொல்லுவ.....அப்புறம் ஒரு சின்ன ரிகொஸ்ட்...தயவு செய்து என் தங்கை அபிகிட்ட பேசிடாத. உனக்கு கோடி புண்ணியம்” என மீரா சொல்ல ,

 

“அவ என்ன நான் கடலை போடுறேன் வத்தி வச்சாளா” படபடத்தான் கார்த்திக்.

 

“எப்பா சாமி! நான் அப்படியா சொன்னேன்?. இதுக்கு முன்னாடி வந்தப்போ ஏதோ அவள விலகி போன்னு மிரட்டினியாம் ...” என மீரா சொல்ல,

 

“...நானா... எனக்கு  ஞாபகமே  இல்லயே.” என்றவன் பின் "ஓ....எப்பவோ ஒரு தடவ மாடிக்கு போறப்போ வழில நின்னா தள்ளி போக சொன்னேன். அதை தான் சொல்றாளோ “ என்றான் யோசனையுடன்.

 

“அதையே கொஞ்சம் சாப்ட்டா சொல்லியிருக்கலாம்ல. நீ எனக்கு கொடுக்கிற மரியாதை அவ்வளோ தானா?” என்றாள் மீரா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.