(Reading time: 29 - 57 minutes)

தை கேட்ட சூர்யா மீராவிடம், “ அப்படியெல்லாம் இல்லடா மீரா.......கொஞ்சம் பழகுனா நல்லா தான் பேசுவான். கான்பூர் IITல படிக்கிறப்போ பொண்ணுங்க இவனை துரத்துன  துரத்துல ....அவனுக்கு பொண்ணுங்கனாலே அலர்ஜி....“ என்றான் சூர்யா.

 

அவனின் கருத்தை ஆமோதித்தவாறு  கார்த்திக் தொடர்ந்தான், “ஆமா அண்ணி. அவங்க தொல்லையில் இருந்து தப்பிக்க திட்ட ஆரம்பிச்சேன். அப்படி கடிச்சு விட்டா திமிர் பிடிச்சவன்னு ஓடிடுவாங்க. அப்புறம் அதுவே என்னை காப்பாத்திக்கிற  சக்சஸ் பார்முலாவா ஆகிவிட்டது....அந்த பழக்க தோஷத்தில் தான் அபியை கூட சொல்லியிருப்பேன். ” என்றான் கார்த்திக்.

 

“வழக்கமா.....பசங்க தான பொண்ணுங்க பின்னாடி சுத்துவாங்க. நீ சொல்றது வித்யாசமா இருக்கு. .“ என்றாள் மீரா.

 

“அண்ணி, நீங்க காரைக்கால் அம்மையார் காலத்திலே இருங்க. ஒரு தடவை, எம்.டிவில இருந்து எங்க கேம்பஸ்க்கு  காலேஜ் கலாட்டா பத்தி ப்ரோக்ராம் பண்ண வந்தாங்க....எங்க பேட்ச் பொண்ணுங்க எல்லாம்  காலஜ்ல ஹான்ட்ஸமா மேன்லியா இருக்கிற பையன் இவன் தான்னு   கூச்சமே இல்லாம கேமரா முன்னாடி என்னை கை காமிக்க, கேமரா என் பக்கம் போகஸ் ஆகுறதுக்குல ஓடி போய் புதருக்குள ஒழிந்து கொண்ட கொடுமை எனக்கு தான தெரியும். பொண்ணுங்களா அதுங்க? உலகமே பாக்கிற ப்ரோக்ராம்ல, கூட படிக்கிற பயனை இப்படி காமிச்சு பேசுறத அதுங்க வீட்டில பாத்தா எதுவும் சொல்லமாட்டாங்களா? …..எங்க அம்மாவா இருந்தா தோலை உருச்சிருப்பாங்க” என்றான் கார்த்திக்.

 

“உங்க அம்மா யாரை தான் விட்டு வைத்தாங்க. அதை விடு.... அப்போ நீ  தான் காலேஜ்ல காதல் மன்னன்???” என்ற மீராவிடம் கார்த்திக், “அப்படி இனிமே தான் ஆகணும்....ஒரு பொண்ணை..” என்றவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு  ரகசியமாய்  “லவ் பண்ண வைக்கணும்”.

 

மீராவும் அதே ரகசிய குரலில் “அபி தான அது “ என்றவள் “கவலையே படாத. அத்தைக்கு கூட அவள பிடிச்சிருக்கு. உனக்கு நான் ஹெல்ப் பண்றேன். ”

 

அதை கேட்ட கார்த்திக் சூர்யாவிடம் “ஆசைய பாத்தியா சூர்யா...அந்த அழுமூஞ்சியை என் தலைல கட்டிட்டு அக்காவும் தங்கச்சியும் கூட்டணி சேர்ந்து நம்ம அம்மாவை ஓரம்கட்ட ப்ளான் பண்றாங்க...இது நம்ம மொட்டைக்கு தெரிஞ்சது செம கடியாயிடுவா” என கிண்டலடிக்க,

சூர்யாவிடம் திரும்பிய மீரா, “மது, நான் சொன்னா கேட்டுக்குவா. இருந்தாலும் பேச்சை பாத்தீங்களா உங்க தம்பிக்கு ....எங்க அபிக்கு என்ன குறைச்சல்?” என கேட்க மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி வாங்கிய சூர்யா “உன் அழகுக்கு முன்னால அவ கொஞ்சம் குறைச்சல் தான்டா...“ என்று தன்னால் முடிந்ததை சொன்னான்.

 

கார்த்திக் சிரித்தவாரே “ஒரு நாள் பிரிஞ்சதுக்கே இந்த இபக்ட்டா சூர்யா?” என்றவன் மீராவிடம் “  சோ சாரி அண்ணி. எனக்கு வாழ்க்கையில ஒரு ஆம்பிஷன்…. லவ் பண்ணா ….... ஒரு பைக் ரேசரை தான் லவ் பண்ணனும்ன்னு  “ உணர்ச்சிபூர்வமாக சொல்வது போல போலி பாவனை செய்தான்.

 

சூர்யா அதற்கு “டேய் அது சந்தியா தான?....அவ ஹெல்மெட்டை  உன் பைக்ல போய் எடுத்துட்டு வந்ததை பாத்தேனே....நிஜமாவே ரேஸ் பண்ணுவாளாடா? ”

 

“ம்......அவளே தான்...இன்னைக்கு மண் லாரிக்கோ ...மாட்டு வண்டிக்கோ ….என்னை பலி கொடுத்திருப்பா ... ஏதோ பிழைச்சுட்டேன்” என்றான் கார்த்திக்.

 

இவர்கள் பேச்சை கவனித்த மீரா, “சந்தியாவா ….யார்ரா அந்த பொண்ணு?” என கேட்ட வேளையில், சௌபர்ணிகா அங்கே வர அனைவரும் அமைதியானர்.

 

அவர், “வீட்டுக்கு வந்திருக்கறவங்களை கவனிக்காமா மூணு பேரும் வாசப்படில நின்னு என்ன என்ன பேச்சு? மீரா... டைனிங் டேபிள்ள ரெடி பண்ணிட்டியா?” என மீராவிடம் கேட்க,

“அல்மோஸ்ட் பண்ணிட்டேன் அத்தை, டெசெர்ட் மட்டும் தான் பாக்கி. கார்த்திக்கிட்ட எங்க இருக்குன்னு கேட்க வந்தேன்” என்றாள் பவ்யமாக.

 

“டெசெர்ட் கடைசில தான தேவப்படும்.... கார்த்திக்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். சூர்யாவும் நீயும் போய் எல்லாரயும் சாப்பிட கூப்பிடுங்க” என கார்த்திக்கை மட்டும் அங்கே நிறுத்தி விட்டு அவர்களை அனுப்பி விட்டார்.

 

“படியில் நிக்காத..... முதல்ல உள்ள வா” என்றவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் தாயின் முன் அட்டென்ஷனில் நின்ற கார்த்திக் மனதிற்குள் திக்....திக்......

 

“செயின்ட் ஜோசப் ஹாஸ்பிட்டல்ல காலைல யாரு மேல எல்லாம் கைய நீட்டின?“ என அழுத்தமான தொனியில் கேட்டார் சௌபர்ணிகா. தன் அன்னையிடம் பொய்யே பேசாத கார்த்திக்கிற்கு அப்பொழுதும் பொய் சொல்ல தோன்றவில்லை.

 

“மம்மி... அது வந்து....ச...சந்தியா.....அனாதை இல்லத்து பையனோட சாதாரண காயத்துக்கு, அவ கூட பிறந்த தம்பிக்கு  உயிருக்கே ஆபத்துன்னு சொல்லி, என்னை ரெம்ப அலைக்கழிச்சிட்டா…....அது விஷயமா அப்பா பேரை வேற யூஸ் பண்ண வேண்டியதாச்சு. அதான் கோபத்தில......” என சொன்ன கார்த்திக்கை இடைமறித்த சௌபர்ணிகா,

 

“கோபத்தில வயசு பொண்னு மேல கைய நீட்டுவியா? அதுவும் சந்தியா மேல... அவ கூட பிறந்த தம்பின்னா கூட பதறியிருக்க மாட்டா...அர்ஜுன்னால தான் அப்படி பயந்திருக்கா. அவளை எட்டு வருஷமா பார்க்கிறேன். எனக்கு அவளை பத்தி தெரியாதா” என்றார் சற்று உயர்ந்த தொனியில்.

 

பின்... சற்று நிதானமான தொனியில் முகத்தில் மட்டும் அதே கடுமையுடன் “ அவளுக்கு பதிமூணு …...பதினாலு வயசிருக்கும் போதே   லேடீஸ் கிளப்ல இருந்து அன்பு இல்லத்திற்கு  டொனேஷன் கொடுக்க போன என்கிட்ட வந்து “ஏன் ஆண்ட்டி இங்க வந்து டொனேஷன் கொடுக்குறேன்னு இந்த பிள்ளைங்க முன்னாடியே அனாதை...அனாதைன்னு சொல்றீங்க. விவரம் தெரியாத சின்ன குழந்தைங்க அனாதைன்னா என்னக்கான்னு கேக்குறப்போ ரெம்ப மனசு கஷ்டமாயிருக்கு” ன்னு சொன்னா...... அந்த அளவுக்கு அவங்க படுற கஷ்டம் அவளுக்கு நல்லா தெரியும். உன்னை  கான்வென்ட்ல படிக்க வைச்சு கஷ்டமே தெரியாம வளர்த்ததுனால உனக்கு இதெல்லாம் தெரியல. நீ படிக்கிற வயசுல எங்ககிட்ட பாக்கெட் மணி கேட்ப்ப....அதே வயசுல அவ அந்த பிள்ளைங்க படிக்கிறதுக்கு சம்பாதிச்சு கொடுப்பா.....காதி, நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு பேர் இருக்கு. ஆனா, நீயோ  கோபக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்றதை உண்மையாக்கிட்ட. நீ பண்ண காரியத்துக்கு ஊருக்குள்ள கண்ணு, காது, மூக்கு, வாய் எல்லாம் வச்சு பேசுறாங்க. அவுங்க வாயை என்னால அடைக்க முடியல. கெட்ட  பிள்ளைன்னு ஒரு நிமிஷத்தில் பேர் வாங்கிடலாம். நல்ல பிள்ளைன்னு பேரு வாங்குறது கஷ்டம். உங்க அப்பா நல்ல பேரை சம்பாதிச்சிருக்கார். நீ நல்ல பேரு  வாங்குறியோ இல்லையோ...அட்லீஸ்ட் அவர் பேரையாவது இனி கெடுக்காம இருக்க பாரு.....” என்றார்.

கார்த்திக் சந்தியாவிற்கு கொடுத்த அறைக்கு தண்டனையாக பத்து அறை தன்  அம்மாவிடம் வாங்கியது போல இருந்தது கார்த்திக்கிற்கு. தொங்கிய முகத்துடன் “சாரி மம்மி. இனிமே இது நடக்காது. இட்ஸ் எ ப்ராமிஸ்” என்றான் கர கரத்த குரலில்.

 

சௌபர்ணிகா கடுமை தணிந்து, “ம்.....உன்னையே இப்படி பேசுனாங்கன்னா சந்தியா.....பாவம் நல்லது செய்யணும்னு நினச்சா. நானே அவகிட்ட மன்னிப்பு கேட்கணும்...” என்றார். “மம்மி... எனக்காக நீங்க யார்கிட்டயும் மன்னிப்பு கேக்கிற அளவுக்கு விடமாட்டேன். நானே அவகிட்ட பேசிட்டேன். அவ அதெல்லாம் மறுந்துட்டா.  நம்ம கம்பனில தான் ஜாயின் பண்ணியிருக்கா ...” என்றான் கார்த்திக்.

 

சௌபர்ணிகாவின் கடுமையான குரலை கேட்டு அனைவரும் வந்து சுற்றி நின்றதை பார்த்த கார்த்திக்கிற்கு அவமானமாய் இருந்தது. அந்த நேரம் பார்த்து அவன் தோளை நட்பாக தட்டிய சதாசிவம் “சரி...சரி...அதெல்லாம் கார்த்திக் சொன்னவுடன் புரிஞ்சிக்குவான். அவன் என் புள்ள.” என்று சௌபர்ணிகாவிடம் சொல்லிவிட்டு “பந்திக்கு முந்துன்னு சொல்வாங்க. இன்னக்கு லஞ்ச் செப் கார்த்திக்  தான்... மிஸ் பண்ணாதீங்க...அப்புறம் ரெம்ப பீல் பண்ணுவீங்க “ என  அவர் சொல்லி முடிக்கும் போது அங்கே கார்த்திக் மட்டும் நின்று கொண்டிருந்தான்.

 

“எல்லாரும் அப்பவோ எஸ்கேப். இன்னைக்கு என் சமையலை மிஸ் பண்ண போறது நீங்க தான் டாடி..அதெப்படி  டாட் …..அம்மா எனக்கு  செம டோஸ் கொடுத்து முடிச்சதுக்கு பிறகு தான், நான் உங்க பிள்ளைன்னு தெரிஞ்சதா....மம்மி முன்னாடி டம்மியாயிடுறீங்களே” என்ற கார்த்திக்கிடம்

 

“அதெல்லாம் தாம்பத்திய இரகசியம் காதி...உனக்கு கல்யாணம் ஆனா..... தானா புரியம்” என்ற தன் தந்தையிடம்

 

“ஆமாமா  மண் குவாரிலே விழுந்ததாலும் உங்க நான்-ஸ்டிக் மீசைல மண்ணே  ஒட்டலை டாடி. என்னை உங்க கட்சில சேக்காதீங்க. நாங்கெல்லாம் கவுத்திவுடுற ரகம்....மண் குவாரி என்ன கல் குவாரியே ஆனாலும் விழவே மாட்டோம் ” என்று சொல்லிக் கொண்டிருந்த போது உதவிக்கு சமையலறைக்கு அழைத்தாள் மீரா.

 

“டெசெர்ட் எங்க காதி?.... என்ன ஸ்பெஷல்?” என்று மீரா கேட்க “உங்க பாவரேட் ப்ரூட் கேக்...சாம்பிள் பாக்குறீங்களா?” என ப்ரிட்ஜ்க்குள் இருந்த கேக்கை எடுத்த கார்த்திக் சொல்ல,

 

“அய்யோ..அத்தை உனக்கு கொடுத்த டோஸ்லே கலங்கிட்டேன். நல்லா தான் இருக்கும்....சீக்கிரம்...டைனிங் ஹால்க்கு போலாம்.” என்று சொல்லும் போது அங்கு சமையல் மேடையில் சுவர் பக்கம் திரும்பியிருந்த அபி அழுவது போல தெரிந்தது.

 

“ஏ அபி அழுறியா?” என மீரா கேட்க திரும்பிய பின் தான் தெரிந்தது அவள் வெங்காயம் நறுக்குகிறாள் என்று. “வெங்காயத்துக்கு வழிக்காது அபி... அண்ணி நீங்க ரெண்டு பேரும் சாப்பிட போங்க..நானே ரைத்தா கொண்டு வர்றேன்...ரைத்தா எதுக்கு? என் மெனுல பிரியாணி கிடையாதே...” என்று சொல்லிக்கொண்டே நொடிப் பொழுதில் வெங்காயத்தை நறுக்கி முடித்த கார்த்திக்கை, திறந்த வாய் மூடாமல் பார்த்த அபியிடம் “பாத்து அபி வாய்க்குள்ள  கொசு...கிசு போயிட போது. நான் தான் உனக்கு சொல்லியிருக்கேனே...காதி ஒரு மணி நேரத்தில் ஊருக்கே சமைச்சு போடுவான்னு. நீ போ நான் பின்னாடி வாரேன்” என்று சொல்லி அவளை அனுப்பி விட்டாள்.

 

பின் கார்த்திக்கிடம் “காதி, பிரியாணி உன் ஸ்ஸாண்டி கொடுத்தது” என சொல்ல “ஸ்ஸாண்டியா ..அது யாரு?” என கேட்டவாறே ரைத்தாவை கலந்த கார்த்திக், “ம்...நம்ம வீட்டு அந்நியன்னோட நான்டி தான் ஸ்ஸாண்டி....நீ தான் தமிழ் படம் பாத்து ரெம்ப நாளு ஆச்சே. தெளிவா கேளு...அந்த படத்தில விக்ரமோட ஒரு பெர்சனாலிட்டி “ரெமோ”ன்னு ரொமாண்டிக் பெர்சனாலிட்டி. அதுல ஹீரோயின் பேரு நந்தினி. அவளை  “நேண்டி”ன்னு ஸ்டைல்லா  கூப்பிட்டு ப்ரொபோஸ் பண்ணுவான் ரெமோ. உன்னை அவ ஸ்ப்லிட் பெர்ஸ்னாலிட்டின்னு சொன்னதா சூர்யா சொன்னாரு காதி. நீ ரெம்ப யோசிக்காம அந்த பார்முலாவை யூஸ் பண்ணிடு” என்ற மீராவிடம்

 

“நானும் அந்த படம் பாத்து இருக்கேன். ஆனா இப்படி ஒரு ஐடியா எனக்கு தோணவே இல்ல. இவள மடக்க தமிழ் சினிமாவையே கரைச்சு குடிக்கணும் போல இருக்கே. ஆனா நீங்க சும்மா பிச்சு உதறுறீங்க.... இனி கார்த்திக் தீயா வேல பாப்பான்...இன்னைக்கு 3 மணிக்குள்ள போன் பண்ண சொல்லி ஒரு நம்பர் கொடுத்திருக்கா...அந்த பேய் என்ன வேலை பண்ணி வைச்சிருக்காளோன்னு திக்கு திக்குன்னு இருக்கு. எனக்கு இந்த மாதிரி எல்லாம் பொண்ணுங்களை விரட்டி பழக்கமே இல்ல. நான் போன் பேசுறப்போ நீங்களும் கூட இருந்தீங்கன்னா மாரல் சப்போர்ட்டா  இருக்கும். ப்ளீஸ் அண்ணி” என்றான் கார்த்திக் கெஞ்சலாக.

 

“ஏன் காதி இப்படி கெஞ்சுற. பசங்க இப்ப தான் தூங்கிருக்காங்க. முழிச்சு என்னை தேடாத வரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. என் சப்போர்ட் உனக்கு தான். இன்னைக்கு கலக்கிடுவோம். சரி வா 2 மணியாச்சு சீக்கிரம்” என்று மீரா சொன்னபின், இருவரும் உணவறைக்கு சென்று  ஜோதியில் ஐக்கியமானார்கள்.

 

சூர்யாவின் அருகில் மீரா உட்கார, கார்த்திக் மதுவின் அருகில் உட்கார்ந்தான்.

மீரா சாப்பிட்டுவதற்கு  எளிதாக தட்டில் உணவை பரிமாறி ரெடியாக வைத்திருந்ததை பார்த்த  அவள், சூர்யாவிடம் “கவனிப்பு பலமா இருக்கே. என்ன விஷயம்?” என காதோரம் கிசுகிசுக்க, “ம்.. சந்தியா வீட்டிலே சாப்பிட்டதனால எனக்கு பசி இல்ல. இருந்தாலும் காஞ்ச மாடு நான். ஒரு வாரமா ஜெட் லாக்ன்னு காய போட்ட. சீக்கிரமா நீ சாப்பிட்டா தான் நம்ம குட்டீஸ் முழிக்கிறதுக்குள்ள அதே ஜெட் லாக்கை சாக்கா சொல்லி குட்டி தூக்கம் போட முடியும்..... “ என்றான் கண்ணடித்த படி கிசுகிசுப்பாக.

 

அப்பொழுது சௌபர்ணிகா “என்ன சூர்யா...எதுவும் வேண்டும்னா எங்ககிட்ட கேளு... மீரா இப்ப தான வந்தா...அவளை சாப்பிட விடு.” என மீரா சிரிப்பை அடக்கி குனிந்து கொள்ள, சூர்யா சமாளிப்பாக “இல்ல சந்தியா பிரியாணியும், காதியோட க்ரேவியும் காம்பினேஷன் நல்லா இருக்குன்னு  ட்ரை பண்ண சொன்னேன். அவ்வளோ தான்” என்றான் கார்த்திகை பார்த்த படி.

 

“இப்ப ஏன் என்னை கோர்த்து விடுற” என்கிற மாதிரி சூர்யாவிடம் பார்வையை  வீசி விட்டு  குடிக்க கோக்கை எடுத்தான்   கார்த்திக். “ஆமா அந்த காம்பினேஷன் சூப்பர். எங்களுக்கே இப்படி சாப்பாடு போட்டா, காதியை கட்டிக்க  போறவளுக்கு தினமும்  விருந்து தான்“ என அவன் சித்தி சொல்ல, கோக்கை  குடித்த அவனுக்கு  “விருந்தா...” என சந்தியா வேம்பையர் ரூபத்தில் தோன்றி மறைய அவனுக்கு புரையேறியது. “யாரோ உன்னை திட்டுறாங்க காதி “ என்றாள் மது அவன் தலையை தட்டிய படி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.