“மம்மி, நான் ஹெல்ப் செய்யட்டுமா?”
கயல்விழி காதில் சரியாக தான் விழுந்ததா என்ற சந்தேகத்துடன் ரித்விக்கை உற்றுப் பார்த்தாள்.
“நான் ஹெல்ப் செய்யவா மம்மி?” என் ரித்விக் மறுபடியும் கேட்டு அவளுக்கு காது சரியாக தான் கேட்கிறது என்பதை உறுதி செய்தான்.
கயல்விழி வேலை செய்யும் நேரத்தில் ரித்விக் எப்போதும் விடியோ கேம்ஸ் அல்லது டாய்ஸ் வைத்து விளையாடுவான் அல்லது படங்கள் வரைந்துக் கொண்டிருப்பான். அப்படி இருக்க, அவனே வந்து உதவட்டுமா என்று கேட்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.
“என்ன ஹெல்ப் செய்லாம்னு இருக்க?”
“தெரிலை, நீங்க சொல்லுங்க.”
“குக்கிங் வேலைல நீ எதுவும் செய்ய முடியாதே. நீ டாய்ஸ் எடுத்து விளையாடு, மம்மி வேலையை முடிக்கிறேன்.”
ரித்விக் உடனே போய் விட வில்லை. அதே இடத்தில் நின்று யோசிப்பது போல பாவனை செய்தான்.
மகனின் நடவடிக்கைகள் கயல்விழிக்கு சிரிப்பை வரவழைத்தது.
சரி, என்ன தான் செய்கிறான் என்று பார்ப்போம் என்று அமைதியாக இருந்தாள்.
“மம்மி, நான் டாய் கார் இங்கே எடுத்து வந்து விளையாடவா?” என அடுத்துக் கேட்டான் ரித்விக்.
“ஏன் இங்கே வந்து விளையாடுற? உன் ரூம்ல விளையாடு?”