செல்போன் ப்ளாஷ்லைட் பயன்படுத்தி பாதி இருட்டில் பூட்டை திறக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள் ஜனனி. திடீரென்று ஒரு கரம் அவளை சுற்றி வளைக்கவும் பயத்தில் கதி கலங்கி போனாள்.
“ஜானி!” என உமேஷின் குரல் ஒலிக்கவும் தான் அவளால் மூச்சு விடவே முடிந்தது.
“உம்மிஷ்! இங்கே என்ன செய்றீங்க?”
அவள் திறந்திருந்த கதவின் வழியாக உமேஷ் ஜனனியையும் உள்ளே அழைத்து வந்தான்.
“நீ பாட்டுக்கு திடீர்னு நம்ம மீட்டிங்கை கேன்சல் செய்துட்ட எனக்கு உன்னை பார்க்காம போக மனசு வரலை ஜனனி. சரி, நீ வர வரைக்கும் இங்கேயே பக்கத்துல காத்திருந்து உன்னைப் பார்த்துட்டு போகலாம்னு பைக்ல உட்கார்ந்திருந்தேன். உனக்கு பிடிச்ச பிட்ஸாவும் வாங்கிட்டு வந்தேன்.”
“மணி ஒன்பது ஆகப் போகுது உம்மிஷ்?? எவ்வளவு நேரமா இருக்க??”
“நான் வந்தப்போ ஆறு மணி இருக்கும்.”
“அவ்வளவு நேரமா இருந்த?” ஜனனி நம்ப முடியாமல் நின்றாள்.
“என் ஜானிக்காக மூணு மணி நேரம் காத்திருக்க மாட்டேனா??”
உமேஷின் காதல் மனதை மயக்க, ஜனனி உமேஷை கட்டிப் பிடித்தாள். அந்த அணைப்பும் கூட அவளின் மனதை எதிரொலிப்பதாக தோன்றாததால், அவனின் நெற்றியில் முத்தமிட்டாள், கன்னத்தில் முத்தமிட்டாள், இறுதியாக அவனின் உதட்டில் தன் உதட்டைப் பதித்தாள்.
ஜனனி அவனின் காதலுக்காக தந்த பரிசு உமேஷை மயங்க வைத்தது. அவளின் அணைப்பே அவன் எதிர்பார்த்திருக்காதது!