(Reading time: 30 - 59 minutes)

கார்த்திக் வீட்டில் சதாசிவத்தை பார்த்து நன்றி சொல்ல வந்தார் விபத்தில் அடிப்பட்ட சிறுவர்களில் ஒருவனின் தந்தை. “அய்யா...என் புள்ளைய காப்பாத்தி ஆஸ்பத்திரி செலவையும் சின்னய்யா தான் ஏத்துக்கிட்டாங்கன்னு சொன்னாங்க. உங்களால தான் என் புள்ள இன்னைக்கு உசுரோட இருக்கிறான். நான் தான் படிக்கல. என் புள்ளையாவது  நல்லா படிக்கனும்னு வாயக்கட்டி வயித்தக்கட்டி இங்க்லீஸ் மீடியம் பள்ளிக்கூடத்தில் படிக்க வெச்சா...கடசில….என் புள்ள சாக கிடக்கிறப்போ அவனுக்கு மருந்து வாங்க கூட காசில்லாம வக்கத்த  பயலா ஆகிபுட்டேன்” என்று கண்ணீரை செரிந்தவரிடம், “பிள்ளை தெய்வாதீனமா புழைச்சிருக்கு. அதை நினச்சு சந்தோஷப்படுவியா அதை விட்டுட்டு அழுதுக்கிட்டு இருக்க. செலவை பத்தி கவலை படாத. அவன் நல்ல படியா குணமாகி வந்தா போதும். போய், அவன கூட இருந்து கவனி.” என்று ஆறுதலை அன்பான கட்டளையாக அளித்தார் சதாசிவம்.

அவர்கள் பேசுவதை கேட்ட படியே உள்ளே நுழைந்த கார்த்திக்கிடமும் தன்  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து விட்டு சென்றார் அந்த தந்தை. அவர் சென்றவுடன் மகனை அதிசயமாய் பார்த்தார் சதாசிவம். “நீயும் மதுவும் மழைக்கு கூட GH பக்கம் ஒதுங்கினது கிடையாது. இன்னைக்கு எவ்வளோ பெரிய காரியம் பண்ணிருக்கீங்க. நீ யாரை மனசுல வைச்சு செய்தியோ...ஆனா நீ செய்த விஷயத்துக்காக நான் ரெம்ப பெருமை படுறேன் காதி ....” என்றார் சதாசிவம். அதற்கு சிரித்தவாரே, “யாருக்காக செய்தேன்னு நேரடியா கேக்குறதை விட்டு ஏன் டாடி இப்படி சுத்தி வளைச்சு கேக்குறீங்க” என்றான் கார்த்திக். அந்த  கேள்விக்கு புன்முறுவலை பதிலாக தந்த சதாசிவம் அவரை விட நெடிய கார்த்திக்கின் தோளில் சற்று எக்கி  கைபோட்டு, அவனுடன் நடந்த படியே

“சீக்கிரம் சாப்பிட்டு தூங்கப் போ. 9 மணிக்குள்ள படுக்காட்டினா உங்கம்மா அவ்வளவு தான். உன்னை கூட மன்னிச்சு விட்டாலும் விடுவா..என்னை விடவே  மாட்டா” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே சௌபர்ணிகா அங்கு வந்து,

“இப்போ தான் விடிஞ்ச மாதிரி அவன் கூட இப்படி சாவகாசமாக பேசிகிட்டு இருக்கீங்க...அவன் நாளைக்கு ஆபிஸ் போக வேண்டாமா ” என்றார் சதாசிவத்தை அதட்டுவது போல.

“ஆமா டைம் ஆச்சோ...நீ போ காதி” என்று சதாசிவம் அந்த கட்டளைக்கு கட்டுப்பட்டது போல சொன்னவுடன் சரியென்று தலையாட்டி விட்டு  கார்த்திக் ஓரிரு எட்டுக்கள் வைத்த பின் “காதி, அம்மாவும் நானும் சந்தியாவை பாக்கணும். அவளை வீட்டுக்கு கூப்பிட்டு வர்றியா? “ என சதாசிவம் கேட்டவுடன் திரும்பியவன் அவரையும்  சௌபர்ணிகாவையும் மாறி மாறி வினோதமாக பார்த்தான்.

“நேத்து அவளை  பாத்தீங்க தானே” என்று கேள்வியுடன் அவர்களை பார்க்க  

“ஆமா...நேத்து கூட்டத்தில சரியா பேச முடியல...அதோட மதுவும் நிறைய அவளை பத்தி சொன்னா. அவளை நேர்ல பாத்து பாராட்டணும்  அதான்” என

அவர் சொல்ல,

“நாளைக்கு காலேல நம்ம வீட்டுக்கு தான் வருவா டாடி.” என்று பின் சௌபர்ணிகாவிடம் “மம்மி, எனக்கு இந்த வாரம் US கிளம்புறதுக்குள்ள முடிக்க வேண்டிய நிறைய வேலை இருக்கு. சந்தியா தான் என் ப்ராடக்ட் டிசைன் பண்றதுக்கு ஹெல்ப் பண்றா. அவுங்க வீட்டில லேட் ஹவர்ஸ் வொர்க் பண்ண விடமாட்டாங்க போல. அதான் காலேல என்னோட ஹோம் ஆபிஸ்ல வைச்சு வொர்க் பண்ண வைக்கலாம்னு பாக்குறேன். இந்த வாரம் மட்டும் தான். உங்களுக்கு ஓகே தான?”  என கேட்டான்.

அதற்கு சௌபர்ணிகா,“எனக்கு ஓகே தான். ஆனா அதுக்கும் அவங்க வீட்டில ஏதாவது  சொல்லுவாங்களா? ” என யோசனையுடன் அவர் கேட்க, கார்த்திக் உதட்டை பிதுக்கி, தோளை குலுக்கியவாறு “தேட், ஐ டோன்ட் நோ... ” என கைவிரித்தவன், பின் “ஆனா நாளைக்கு கண்டிப்பா வருவா” என்று  உறுதியடன் சொல்லி விட்டு சென்றான்.  

ன்னடி, எங்க கூட படுக்க வரலையா” விந்தியா கேட்ட படியே மாடியில் உள்ள  ஹாலில் பாயை விரித்து அனைவருக்கும் படுக்கையை தயார் செய்து கொண்டிருந்தாள். “இல்லக்கா இந்த வாரம் முழுதும் வேலை இருக்கு. 1 மணிக்கு ஆன்லைன்ல செஸ் கிளாஸ் வேற சொல்லிக் கொடுக்கணும். .நான் இந்த ரூம்ல தூங்குறேன்.”  என்று விட்டு தனது அறைக்குள் சென்று, கார்த்திக்குடன் விவாதித்த விசயங்களை நினைவு கூர்ந்து அதில் உள்ள சந்தேகங்களை தனது மடி கணினியில் குறித்து கொண்டிருந்தாள்.

பதினோரு மணி அளவில் அவள் போனில் அழைப்பு வர எடுத்த சந்தியாவிடம், “ஏய்....ராக்கோழி என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என கேட்டவள் பூமா...அமெரிக்காவில் வசிக்கும் ஸ்ரீமாவுடன் பிறந்த இரட்டை சகோதரி.

அக்காவின் குரல் கேட்டு சந்தியா கால்கள் தரையில் இல்லை. பறந்தாள். இருந்தாலும், “லூசு...ஏன்டி இந்த நேரம்  போன் பண்ற. ஐ அம் பிஸி யு நோ..” என்று பந்தா காட்டினாள் சந்தியா. “வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பிஸியோ...உன்கிட்ட முக்கியமா 2 விஷயம் சொல்லனும்னு நினச்சேன்.” என்ற பூமாவிடம் “ஏய் பூ...நீ சொல்லப்போற முக்கியமான விஷயத்தை கேக்கிறதை விட பெரிய வேலை ஒன்னும் இல்லை.... மேட்டர் என்ன? சீக்கிரம்  எடுத்து விடு” என சந்தியா சொல்ல போகும் விஷயத்தை கேட்க  ஆர்வமானாள்.

“ஒன்னு நல்ல செய்தி ….இன்னொன்னு கெட்ட செய்தி...உனக்கு எது பர்ஸ்ட் வேணும்” என பூமா கேட்க “முதல்ல கெட்ட செய்தியை சொல்லிடு. ஆனா வழக்கம் போல பின் லேடன் செத்துடுட்டாருன்னு மட்டும் சொல்லாத...” என்றாள் சந்தியா.

“நம்ம டவுசர் பாண்டியும் பீப்பா குயினும் உன் வரவை ஏதிர்பார்த்து உசிலம்பட்டில சிவப்பு கம்பளம் விரித்து,  நீ வருவாயெனன்னு பாட்டு பாடிட்டு காத்துகிட்டு இருக்காங்களாம்” என்று  அவளை கிண்டலடிக்க “ஆறிப் போன நியூஸ்க்கு ஏன்டி இந்த பில்ட் அப் .....ம்...நீ சிக்க வேண்டியது...நான் மாட்டிக்கிட்டேன். இந்த இம்சைய கலைக்க ஏதாவது அப்பாகிட்ட சொல்லுடி ப்ளீஸ்” என்றாள் சந்தியா கெஞ்சலாக.

“நான் பேசுனேன்டி. ஆனா அப்பா ரெம்ப ஸ்ட்ராங்கா அதுலே நிக்கிறாங்க. அவங்களுக்கு பாண்டியனை என் பிரச்சினைல ஊர்ல அத்தனை பேரு முன்னாடியும் அடிச்ச கில்டி பீலிங்....அதோட நம்ம பீப்பா, பத்து வருசத்துக்கு முன்னாடி நடந்த என் பிரச்சனைனால தான் டவுசர் பாண்டிக்கு நல்ல வரன் எல்லாம்  தட்டி கழிஞ்சு போகுதுன்னும்,  நம்ம வீட்டிலே பொண்ணு எடுத்தா ஊர்ல ஒரு பையன் அவனை தப்பா பேச மாட்டான்னும் சொல்லி கண்ணை கசக்குன உடனே அப்பா இளகிட்டாங்க. அப்பா உன்கிட்ட இந்த அலையன்ஸ் விஷயத்தை பத்தி  சொல்ல வேண்டாம்ன்னு சொன்னாங்க.  நீ போய் அவங்க கிட்ட இதை பத்தி கேட்டு என்னை போட்டு கொடுத்துடாதடி ” என்றாள் பூமா.

“அப்பா ஏன் என்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்றாங்க?” என சந்தியா கேட்க,

“எனக்கு லவ் லெட்டர் கொடுத்த  பிரச்சினை தவிர்த்து அவனுக்கு கிராமத்தில நல்ல பேரு தான்டி. ஆனா மெட்ராஸ்ல அவன் சகவாசம் எப்படின்னு தெரியாதுல்ல. அதான் மெட்ராஸ்ல ஸ்ரீ வீட்டு மாமாகிட்ட அப்பா  விசாரிக்க சொல்லியிருக்காங்க. அதை விட, பர்ஸ்ட் ஜாதகம் பொருந்தணும். அதான் அப்பா இப்பவே அவனை பத்தி சொல்லி உன் மனசுல தேவை இல்லாம ஆசைய வளக்க வேண்டாம். எல்லாம் தெளிவான பிறகு பார்மலா பொண்ணு பாக்க வர்றப்போ சொல்லலாம்னு சொன்னாங்க” என்றாள் பூமா.

“அவன் மேல ஆசையா?....காமடி பண்ணாதடி....இப்போவே அப்பா சொன்னாங்கன்னா அந்த ஜோசியர் வேலையையும் மாமா வேலையையும் குறைச்சிருப்பேன்” என்றாள் சந்தியா.

“பொண்ணு பாக்க வர்றபோ கூட அப்பா உனக்கு இது தான் மாப்பிள்ளைன்னு  இன்பர்மேஷன் தான் சொல்லுவாங்க...உனக்கு மாப்பிள்ளை சம்மதமான்னு கன்பர்மேஷன் கேட்க மாட்டங்க. தெரிஞ்சிக்கோடி “ என சந்தியாவிற்கு பூமா எச்சரிக்கை விடுத்தாள்.

“அட்வைஸ் பண்றியா? உனக்கு பிடிச்ச மாதிரி  மாப்பிள்ளை கிடைக்கற வரைக்கும் நாம செய்த தில்லாலங்கடி வேலை எல்லாம் மறந்து போச்சா? ” என்று பூமாவை வினவினாள் சந்தியா.

“அதான் நான் சொல்றேன்....டோன்ட் வொரி. இந்த விஷயத்தை நாம ஈஸியா டீல் பண்ணிடலாம். ஆனா, எனக்கு ஒரு விஷயம் டவுட்டாவே தான்டி இருக்கு. நம்ம டவுசர் ரெம்ப பேமஸ் ஆன பிரஸ்ல இருக்கான். அவனுக்கு பொண்ணு கொடுக்க நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு வருவாங்க. இருந்தாலும் பீப்பா குயின் இப்படி  அப்பாகிட்ட ஸீன் எல்லாம் போட்டு உன்னை பொண்ணு கேக்குதுனா நம்ம  தண்டட்டி பாட்டி இப்போ இருக்கிற பூர்வீக வீட்டுக்காக தான் இருக்கும். உன்னை டவுசருக்கு கட்டி வைச்சு அந்த வீடை அபேஸ் பண்ண  திட்டம் போட்டிருக்கும்” என்றாள் பூமா.

“அது அப்படி நினைச்சாலும் இந்த டவுசருக்கு அறிவு எங்க போச்சு? எவனுக்காவது  இப்படி அசிங்க பட்ட பிறகும் அந்த வீட்டுக்கு மருமகனா போக ஆசை இருக்குமா? எனக்கு என்னமோ அவன் தான் ஏதோ ப்ளான் பண்றான்னு தோணுது” என்றாள் சந்தியா.

“அவன்  உன்னை கட்டிக்க  ப்ளான் பண்ணா நாம அதை கவுத்தி விட ப்ளான் பண்ணுவோம்...கவலையை விடு” என தங்கைக்கு தைரியம் அளித்தாள் பூமா.

“சரி..போதும்...அவனை பத்தி ரெம்ப நேரம் பேசி நம்ம டையத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்...என்ன குட் நியூஸ்?” என்றாள் சந்தியா.

“ம்....நான் அம்மாவாக போறேன்” என்றாள் பூமா.

“என்னடி சொல்ற?” சந்தோஷமும் குழப்பமுமாக கேட்டாள் சந்தியா.

“ம்....உங்க மாமா அப்பாவாக போறாருன்னு சொன்னேன் ” என்றாள் பூமா

“ஏய் நிஜமாவா சொல்லுற? வாவ்...இதை ஏன்டி முன்னாடியே சொல்லலை?” என்றாள் சந்தியா

“நீ எங்கடி சொல்லவிட்ட? பேட் நியூஸ் கேக்க தான் ஆர்வமா இருந்த” என்றாள் பூமா.

“ஆமா...ஆனா இப்படி ஒரு நல்ல நியூஸ் சொல்லுவன்னு நினச்சுக் கூட பாக்கலை...அம்மா எதுவும் என்கிட்ட சொல்லவேயில்லை” என்றாள் சந்தியா.

“லூசு..பெரிய மனுஷி உன்கிட்ட தாண்டி பர்ஸ்ட் சொல்லணும்ன்னு உனக்கு கால் பண்றேன். “ என்றாள் பூமா.

“இப்பவாவது என் அருமை தெரிஞ்சதே” என சந்தியா பீற்றிக் கொள்ள,

“குணா சொன்னாருடி, நீ உங்கம்மாகிட்ட சொல்றியோ இல்லையோ முதல்ல உங்க வீட்டு குட்டி சாத்தான்கிட்ட சொல்லிடு, இல்லாட்டி அதுக்கும் ஏதாவது கலாட்டா பண்ணி வைப்பான்னு அதான் உனக்கு முதல்ல சொல்லிட்டேன் தாயே” என்றாள் பூமா.

“நான் குட்டி சாத்தானா? அப்ப நிஜமாவே கலாட்டா பண்ணி உன் டெலிவரிக்கு நம்ம அம்மாவை அமெரிக்காவுக்கு அனுப்ப மாட்டேன்ன்னு குணா  மாமாகிட்ட சொல்லி வை” என மிரட்டினாள் சந்தியா.

“குணா சொன்னதுக்கு என்னை ஏன்டி  பழி வாங்குற” என்றாள் பூமா பரிதாபமாக.

“குணா மாமா அப்படி சொன்னா தலையாட்டிட்டு வந்து என்கிட்ட சொல்லுவியா?” என அவள்  தன் அக்காவை மிரட்ட,

“ இந்த பாரு ஓவரா மிரட்டுன டவுசர் பாண்டி விஷயத்தில அப்படியே பல்டி தான். தெரிஞ்சுக்கோ...நீ எங்களை கல்யாணத்தன்னைக்கு விடிய விடிய படுத்துன பாடுக்கு குணா எப்படா உன் கல்யாண வரும்..அதே மாதிரி உனக்கு திருப்பி கொடுக்கணும்னு காத்துகிட்டு இருக்காரு...” என்றாள் பூமா.

“அடிப்பாவி...பாக்க ஊமை மாதிரி இருப்பாரு. உள்ளுக்கள்ள நம்பியாராட்டம் சதி திட்டம் தீட்டி ரெடியா வச்சுருக்காரா...வூட்டுக்காரரை உன்னை மாதிரியே நல்லா ட்ரைன் பண்ணி வச்சிருக்கடி.. இதுக்கு  மட்டும் குறைச்சல் இல்ல. உங்க வீட்டு வசூல் ராஜா MBBS அதான் உன் டாக்டர் கொளுந்தன் இன்னும் அந்த மைதா மாவோட தான் குடும்பம் நடத்திகிட்டு இருக்கானா? நீயெல்லாம் ஒரு அக்கா? உன் தங்கச்சி மேல அக்கறை இருந்தா இப்படி நடக்க விட்டு இருப்பியா? என்னை உங்க வீட்டு சின்ன மருமகளாக்கி இருக்க மாட்ட இந்த நேரம்..குணா மாமாக்கு”  என்றவளை இடைமறித்த பூமா,

 “அய்யோ சந்து வேண்டாம் ..” என பூமா தடுக்க,

“என்னை பேச விடு பூ...நான் பேசியே தீருவேன்” என்றாள் சந்தியா.

“சொன்ன கேளுடி...பேச்சை விடு” என்ற பூமாவிடம்,

“ஏன்டி பயப்புடுற...இங்க எல்லாரும் தூங்கிட்டாங்க... ஆனா நீ தூங்கிகிட்டு இருந்த என் மனசாட்சிய தட்டி எழுப்பிட்ட...நான் சொல்லியே தீருவேன் “ என சந்தியா அடம்பிடிக்கவே,

“சரி சொல்லித் தொலை” என்றாள் பூமா எரிச்சலுடன்.

“எங்க விட்டேன்...ம்...குணா மாமா....குணா மாமாக்கு தம்பி இருக்கு...நாம ஒரே வீட்டுக்கு போக வழியிருக்குன்ற ஒரே காரணத்துக்கு தான  மாமாவுக்கு நீ ஓகே சொன்ன. நீ  ஜாலியா செட்டில் ஆகிட்டு, உன் கொழுந்தனுக்கு அல்ரடி வேற ஆள்  இருக்கிறான்னு சொல்லி என்னை கவுத்திவுட்டியேம்மா...கவுத்திவுட்டியே....இந்த கொடுமைய நான் யார்கிட்ட சொல்ல...எங்க போயி சொல்ல” என நடிகர் சிவாஜி பாணியில் சந்தியா புலம்ப,

“ஏய் மந்தி, எங்கிட்ட சொல்லு.... மைதா மாவை ட்ராப் பண்ணிட்டு கோதுமை மாவை பிக் அப் பண்ண நான் ரெடி...”என குரல் கேட்டு அதிர்ந்த சந்தியா

“நீங்க...யாரு? பூமா எங்க?” என கேட்க,

“வசூல் ராஜா எம்.பி பி எஸ், எம்.எஸ்  இன் ப்ராக்ரெஸ். இன்னைக்கு நாள் முழுக்க அண்ணிய கலாய்க்க நல்ல டாபிக் கிடைச்சிடுச்சு..ரெம்ப தேங்க்ஸ் மந்தி...யா?...அண்ணி  கேரி ஆன்...மந்தியா இஸ் வெயிட்” என அவன் சொன்னதும்,

பூமா தொடர்ந்தாள் “ஏ..வாலு உன் புலம்பலை எங்க வீட்டில எல்லாரும் கேட்டுட்டாங்க....உனக்கு போன் பண்ணி நானே எனக்கு சூனியம் வச்சுகிட்டேன். எத்தனை தடவை சிக்னல் கொடுத்தேன். விடாம பேசுற “  என்றாள் பூமா அதட்டலாக.

“ஸ்பீக்கர் போட்டிருக்கியா? மானம் போச்சு...ஆனாலும் அந்த வசூல் ராஜாவுக்கு சேட்டை அதிகம் தான்... நான் மந்தி யா?” என கேட்க,

“நீ மந்தி இல்ல குட்டி சாத்தான்” என்றான்  குணா, பூமாவின் கணவன்.

“குணா மாமா, நீங்களுமா...எங்க பாஸ் ஏற்கனவே எனக்கு பேய்ன்னு பேரு வச்சாச்சு..அக்கா தங்கைகுள்ள ஆயிரம் டீலிங்ஸ் இருக்கும். அதை ஏன் இப்படி ஸ்பீக்கர் போட்டு எங்க மானத்தை கப்பல் ஏத்துறீங்க” என்றாள் சந்தியா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.