(Reading time: 30 - 59 minutes)

...அப்ப பாஸ்கிட்டே உன் வேலைய காமிச்சிட்டியா? காரணமா தான் பூமாவை  உனக்கு போன் பண்ண சொன்னோம். நாங்க இப்போ தான் அவளுக்கு ஸ்கேன் பாத்துட்டு வந்தோம். குழந்தை நல்லா இருக்குன்னு பாசிடிவ்வா தான் சொன்னாங்க. இருந்தாலும் ஏற்கனவே இதுக்கு முன்னாடி இரண்டு தடவை  மிஸ்கேரேஜ் ஆனதுனால  பயந்து போய் இருந்தா...எப்பவும் உன்கூட பேசுனா மேடம் சுவிட்ச் போட்ட மாதிரி பிரகாசமா ஆகிடுவா. அதான் அந்த சுவிட்ச் இரகசியத்தை தெரிஞ்சிக்கலாம்ன்னு  ஸ்பீக்கர் போட்டோம். உங்க திட்டம் எல்லாம்  கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா என் தம்பிய பத்தி சொல்லி பூமாகிட்ட இருந்து விடுதலை வாங்கியிருப்பேன். தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு..இனி அதை பத்தி பேசி பிரயோஜனம் இல்ல. ஸ்பீக்கர் ஆப் பண்ணிட்டேன் ..இனி உங்க ப்ரைவசிய கெடுக்க மாட்டோம்...பூமாகிட்ட பேசு “ என்ற பின்  சிறிது நொடிகளில் பூமாவின் குரல் கேட்ட சந்தியா ,

“என்னடி ஸ்கேன் பாக்கிற அளவுக்குன்னா..உனக்கு எத்தனை மாசம்? ஏன் முன்னாடியே சொல்லலை பூ? பையனா பொண்ணான்னு இப்போ தெரியுமாடி?” என சந்தியா கேள்வி மழை பொழிய,

“இங்க என்ன குழந்தைன்னு ஸ்கேன்ல  சொல்லிடுவாங்க சந்து. ஆனா நாங்க சஸ்பென்ஸ்ஸா இருக்கட்டும்ன்னு தெரிஞ்சிக்க விரும்பலை. இப்போ மூணாவது மாசம் கிட்டதட்ட முடியப்போகுது. இதுக்கு முன்னாடி இப்படி தான் எல்லாருக்கும்  ஆசை காமிச்சு ஏமாந்து போயிட்டாங்க...அதான் இந்த தடவை வெயிட் பண்ணி மூணு மாசம் முடிஞ்ச பிறகு சொல்லலாம்ன்னு பாத்தோம். இன்னும் கூட பயமா தான்டி இருக்கு“ என்று பூமா சொல்லும் போது அவள் குரலில் கவலை குடிகொண்டது.

“லூசு...இப்படி தேவ இல்லாம் வொர்ரி பண்ணி பிள்ளையையும் கஷ்டபடுத்தாத. தினமும் சஷ்டி கவசம் படி. நானும் உனக்காக படிச்சுக்கிட்டு தான் இருக்கேன்...இனிமே உன் குட்டிக்கும் சேத்து  இரண்டு தடவை படிக்கணும். நம்ம சுப்ரமணியர் கோவில்ல உனக்கு ஸ்பெஷல் அர்ச்சனை பண்றேன்..பயப்படாம இரு” என தைரியம் சொன்னாள் சந்தியா.

“ஹ்ம்....சரி. நானும் நல்லபடியா குழந்தை பிறந்தா முருகன் சம்மந்தமான பேர் தான் வைக்கணும்ன்னு முடிவு பண்ணியிருக்கேன் “ என பூமா சொன்னவுடன் “அப்ப கார்த்திக்ன்னு வைய்யுடி” என உணர்ச்சி வேகத்தில் சொல்லிவிட்டு நாக்கை கடித்தாள் சந்தியா. “கார்த்திக் உன்  பாஸ் பேரு தான்ன?” என பூமா கேட்கவும் “ம்...உனக்கு தெரியுமா ?” என சந்தியா ஆர்வத்துடன் கேட்க ,

“ஆமா …..ஸ்ரீ சொன்னா..காலைல நீ யோகா கிளாஸ் போனப்ப போன் பண்ணேன்...நேத்து உன் சர்ப்ரைஸ் பார்ட்டி பத்தி சொன்னா. சொர்ணாக்கா பையனா அவன்? அது நல்ல குணம் தான் ஆனா கொஞ்சம் பணக்கார திமிர் இருக்கும். அதோட அதிகாரமா பேசுமே...உங்க பாஸ் எப்படி? அம்மா குணமா?” என பூமா கேட்க,

“கார்த்திக் ப்ரில்லியன்ட்...ஹேண்ட்சம்... கோபக்காரன், வொர்க்அஹாலிக், ஹெல்பிங் டெண்டென்சி...இதெல்லாம் இருந்தும் ஒரு காரியவாதி.. திமிர்... அதிகாரம் பண்றது இதுல கொஞ்சம் அம்மா மாதிரி தான் ஆனா வெளில தெரியாது  ….சரியான சகுனி....” என கட கடவென ஒப்பித்தாள்  சந்தியா. பின் அவளே “ஆனா சொர்ணாக்காகிட்ட  பழைய கெத்து இல்லடி. கார்த்திக் அப்பாக்கு கான்சர். அதான் அந்த கவலை அவங்க முகத்தில தெரிஞ்சது.” சொல்லும் போது சந்தியாவின் குரலிலும் அந்த கவலை வெளிப்பட்டது.

“ம்...வீட்டுக்கு வீடு வாசப்படி. வெளியிருந்து பார்க்க நல்லாயிருக்கிற மாதிரி தெரியுது ஆனா ...பாரு உள்ள எவ்வளவு பிரச்சினைகளோட  வாழ்க்கை ஓட்டிகிட்டு இருக்காங்க “ என்றாள் பூமா.

பின் சிறிது நேரம் அவளுடன்  பேசி விட்டு படுக்கைக்கு சென்றாள் சந்தியா. தனது கணினியில் அவளுக்கு மட்டும்  தெரிந்த சங்கேத வார்த்தை போட்டு பூட்டி வைத்திருக்கும் அவளின் இரகசிய குறிப்பேட்டில் முந்தைய நாள் அவள் பதித்திருந்த நிகழ்வுகளை வாசித்து ரசித்தாளா...இல்லை ரசித்து வாசித்தாளா...தெரியவில்லை...கண்களில் குறுகுறுப்பும், இதழ்களில் புன்முறுவலும் அவள் மனம் இனம்புரியாத சந்தோஷத்தை அனுபவிப்பதை கோடிட்டு காட்டின. இன்றைய நிகழ்வுகளை பதிக்க ஆரம்பித்தாள்

வேலையாய் இருப்பாய் என உன்னிடம்

கவலையை மறைத்து உன்னை

ரணமாக்கி விட்டேனடா  இந்த பேதை!

என் கவலையை களைவது தான்

உன் வேலையா? உன் ரணத்தில்

மயங்குதடா என் சிந்தை!

 

கவிதை எழுதி விட்டு மணியை பார்த்தாள்...மணி 12 ஐ கடந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. கார்த்திக்கை அழைத்தாள். பல முறை அழைப்பு மணி சென்ற பின் எடுத்த கார்த்திக்கிடம்

“ஹலோ கார்த்திக். நல்ல தூக்கமா?” - சந்தியா.

“அதை இப்படி எழுப்பி தான் கேக்கணுமா ?” தூக்கத்தில் கரகரத்த குரலில் கேட்டான் கார்த்திக்.

“ஒரு டவுட்...அதான் கால் பண்ணேன்” என சந்தியா கூற, “ம்....சொல்லு”  தூக்க கலக்கத்தில் பிரண்டு படுத்தவாறு.

“காலைலே எப்படி என் குரல் வைச்சே எனக்கு ப்ராப்ளம்ன்னு கண்டுபிடிச்சீங்க “ - சந்தியா

கட்டிலில் தலையணையை நிமிர்த்தி வைத்து அதில் முதுகை  சாய்த்தவன்,  போனை மற்றொரு கைக்கு மாற்றி தொண்டையை செருமிக்கொண்டே, “எப்படின்னு உனக்கும் தெரியும் தான...பதில் தெரிஞ்சிகிட்டே இந்த நேரத்தில ஏன் இந்த கேள்வி? உனக்கு தூக்கம் வரலையா?” என ஏதிர் கேள்வியை இரகசிய குரலில் குறும்பாக கேட்டான்.

“ப்ச்....கேள்வி கேட்டா பதில் சொல்லணும்...இப்படி எல்லாம் கேள்வி கேட்க கூடாது. அன்பு இல்லத்துக்கு போனா நான் ஹாப்பி ஆகிடுவேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என மற்றொரு கேள்வி கேட்டாள்.

“என் முன்னாடி தான அப்பாகிட்ட அங்க போனா உனக்கு மனசுக்கு நல்லா இருக்கும்ன்னு சொன்ன......யு ஆர் சோ ஸ்பெஷல் டு மீ சந்தியா. நீ கஷ்டப்பட்டா எனக்கு பிடிக்காது”  என்றான் கார்த்திக். அதில் பாதி உண்மை தானே. அவள் மேல் அவனையும் மீறி ஒரு அக்கறை உண்டானதே அவளின் குரலை கேட்டவுடன்...இப்போது அதையே அவள் மனதை கரைக்க அஸ்திரமாக்கினான்.

“பாஸ்...பதில் சொல்ற மாதிரியே அப்படியே பிட்டை போடுறீங்களே...உங்களுக்கு திறமை தான்...” என சந்தியா சொல்லி சிரித்தாள்.

கார்த்திக்கிற்கோ அவள் அலட்சியத்தில் அவள் மீதிருந்த வன்மம் கூடத்தான் செய்ததது. அவன் பதில் பேசவில்லை.

சந்தியா தொடர்ந்தாள், “பாஸ் மதுவை பத்தி முழுசா தெரிஞ்சா தான் நாம ஏதாவது ப்ளான் பண்ண முடியும். அப்புறம் நிரஞ்சன் பத்தியும் நிறைய தெரிஞ்சுக்கணும்”

கார்த்திக் அவளிடம் “மதுவை பத்தி அல்ரடி உன்கிட்ட சொல்லிட்டேன்...நாளைக்கு நிருவை ஸ்கைப்ல உனக்கு அறிமுகப் படுத்துறேன். நீயே அவன்கிட்ட் கேக்குறது எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கோ. திருப்தி தானே....உத்தரவு வாங்கிகிடட்டுங்களா வள்ளிக்கண்ணு...தூக்கம் வருது” என்றான் பவ்யமாக.

“என்ன பாஸ்...இப்படி தூங்குறதுலே இருக்கிறீங்க. நிரஞ்சனையும் மதுவையும் நேரில் மீட் பண்ண வைக்கணும். அதுக்கு முன்னாடி மதுவை நாம கன்வின்ஸ் பண்ணனும். மது ஏன் உங்க வீட்டை விட்டு வெளியேற பயப்படுறா? அவங்க அம்மா ட்ரக் அடிக்ட்ன்னு கேள்வி பட்டேன்...அதுனால ஏதாவது பிரச்சினையா? இதெல்லாம் தெரிஞ்சா தான் அவ இடத்தில இருந்து அவ ப்ராப்ளத்தை யோசிக்க முடியும்” என்றாள் சந்தியா.

“ம்...உனக்கு இப்போ மது பேக்க்ரவுன்ட் தெரிஞ்சிக்கணும். அவ்வளவு தான?”

- கார்த்திக்.

“ம்...” - சந்தியா.

“எங்க அத்தைக்கு பாரின்ல போய் படிச்சப்போ ப்ரண்ட்ஸ் சரியா அமையாம   எப்படியோ ட்ரக்ஸ் எடுத்துக்க ஆரம்பிச்சாங்க. அது வீட்டுக்கு தெரிஞ்சு பிறகு பாட்டியும் தாத்தாவும் அவங்களை ஊருக்கு வரவழைச்சு அவசரமா அவங்களுக்கு மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. கல்யாணம்,  குடும்பம்ன்னு  ஆன்னா திருந்திடுவாங்கன்னு நினச்சாங்க...அதே மாதிரி அவங்களும் கல்யாணம் ஆன பிறகு வந்த சேன்ஜ்ல  அந்த பழக்கத்தை எல்லாம் விட்டுட்டாங்க. ஆனா, மது வயித்தல இருக்குற சமயம் மாமாவை பத்தி கொஞ்சம் கொஞ்சமா அத்தைக்கு தெரிய ஆரம்பிச்சது. மாமாவுக்கு இன்னொரு பொண்ணோட தொடர்பு இருந்தது. தினமும் சண்டை நடக்கும். இந்த விவரம் தெரிஞ்சு பாட்டியும் தாத்தாவும் அவங்களை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க.

மாமா ஏமாத்துனதை தாங்க முடியாத அத்தைக்கு  மறுபடியும் ட்ரக்ஸ் மேல நாட்டம் வந்தது. ஆனா, அதுக்கு பாட்டியும் தாத்தாவும் “உனக்குன்னு குடும்பம் குழந்தைன்னு வந்த பிறகு அந்த நினைப்பே வரக்கூடாதுன்னு “ சொல்லி அவங்களுக்கு ட்ரக்ஸ் எடுத்துக்காத படி அவுங்களை கண்காணிப்புல வச்சிருந்தாங்க. அந்த வெறுப்பு எல்லாம் அத்தைக்கு மது மேல திரும்பிடுச்சு. மது வேற அச்சு அசல் அவங்க அப்பா சாயல். அதுனால அவங்க ஒரு நாளும் தன் பிள்ளைன்னு அவளை ஆசையா கொஞ்சினது கூட கிடையாது. மதுவுக்கு மூணு வயசு இருக்கும் போது  மாமா வீட்டில இருந்து சமரசம் பேசி, மாமா அத்தைய நல்லா  வச்சுகுவேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கூட்டுப் போனாரு. அவங்க டெல்லியில் இருந்தாங்க. எங்க வீட்டில எல்லாரும் அவங்க நல்லா தான் இருக்காங்கன்னு நினச்சுகிட்டு இருந்தாங்க.  

மூணு வயசு வரைக்கும் பாட்டிக்கிட்ட இருந்தப்போ இருந்த சந்தோஷம், கலகலப்பு எல்லாம் போய், மது அப்படியே யார்க்கிட்டயும் பேசாம ஒதுங்க ஆரம்பிச்சா..முதல்ல யாருக்கும் அது வித்தியாசமா தெரியல. புது இடம் அதுனால அப்படி இருக்கிறான்னு நினச்சாங்க. அத்தை டெல்லி போன பிறகு ஊருக்கு வருவதே கிடையாது. மதுவையும் அனுப்ப மாட்டாங்க. அதுனால எங்க வீட்டில இருந்து யாராவது மாச மாசம் போய் அவங்களை பாத்துட்டு வருவாங்க. அதுக்கும், மாமாவுக்கு அடிக்கடி வந்தா பிடிக்காதுன்னு அத்தை யாரையும் வரவிடலை. அப்படியே வந்தாலும் ரெம்ப நேரம் இருக்க விடமாட்டங்க. அதுக்கு மேல இருந்ததாலும், மாமா வந்து அசிங்கமா திட்டி அனுப்பி விட்டுடுவாங்க. ஒரு நாள் தாத்தா பிஸ்னஸ்   விஷயமா டெல்லி வந்தவங்க, அந்த இடத்தில இருந்து அத்தை வீடு ரெம்ப பக்கம்ன்னு ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்ன்னு  அவங்க வீட்டுக்கு வந்து பாத்தா மது ஜன்னியில் நடுங்கிட்டுயிருந்திருக்கா. அத்தையோ போதை மயக்கத்தில சுத்தி என்ன நடக்குதேன்னு தெரியாம இருந்தாங்க போல. தாத்தா அவளை ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போயிருக்காங்க. பிள்ளை இவ்வளோ சீரியசான நிலைமைக்கு வந்த பிறகு கூட்டிக்கிட்டு வர்றீங்கன்னு டாக்டர்ஸ் பயங்கரமா திட்டி போராடி பிழைக்க வைச்சாங்க. அதுக்கு பிறகு தான் எங்களுக்கு அங்க நடந்த உண்மையெல்லாம் தெரிஞ்சது. மாமாவோட அப்பா, அத்தை கூட சேந்து வாழ்ந்தா தான் சொத்துன்னு  சொன்னதுனால தான் அவரு அவங்களை கூட்டிட்டு வந்து, அவங்க வீக்னஸ் தெரிஞ்சு அதை தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டாரு. அவர் தன்னோட இன்னொரு குடும்பத்துக்கு காட்டின அக்கறைல ஒரு பெர்சென்ட் கூட மது மேல காட்டலை. மது ஒரு ஜீவன்னு கூட மதிக்கல. அத்தை ட்ரக்ல இருக்கும் போது  மாமா மேல உள்ள வெறுப்பு எல்லாம் மது மேல காமிச்சு இருக்காங்க...ஷி வாஸ் பிசிக்கலி அப்யூஸ்ட் பை ஹெர் மாம் ...சித்தி கொடுமை மாதிரி அம்மாவோட கொடுமைய அவ அனுபவிச்சிருக்கா …. சின்ன வயசுல அவ ரெம்ப கஷ்டப்பட்டுட்டா சந்தியா...” சொல்லும் போது கார்த்திக்கின் குரல் தழுதழுத்தது.

“இதுக்கு மேல என்னால பேச முடியல” என்றான் குரல் மங்க.

“பேச வேண்டாம். ஐ அம் சோ சாரி கார்த்திக். கேக்குறப்பவே வலிக்குது. மது ரெம்ப பாவம்...பெத்தவங்க இல்லாம கஷ்டப்படுற பிள்ளைங்களை தான் பாத்திருக்கேன்...ஆனா பெத்தவங்களால கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கா அவ. உங்ககிட்ட ஏன்டா கேட்டோம்ன்னு இருக்கு. உங்களையும் அப்செட் பண்ணிட்டேன்“ குற்ற உணர்ச்சியில் சொன்னாள் சந்தியா.

“தேட்ஸ் ஓகே. மதுக்கு உலகத்திலே பாதுகாப்பான இடம் பாட்டி வீடுன்னு மனசுல பதிஞ்சிடுச்சு. அவங்க அம்மா அப்பாவை பாத்து அவளுக்கு கல்யாணத்துல பிடிப்பும் இல்லாமா போச்சு சந்தியா” என்றான் கார்த்திக்.

“உங்க நிரு வீட்டோட மாப்பிள்ளையா வர ஒத்துக்குவாரா? “ என சந்தியா கேட்க,

“நீ சொன்ன ஆங்கிள்ல நான் யோசிச்சதே கிடையாது. ஆனா அவனுக்கு அது ரெம்ப கஷ்டம் சந்தியா. பாமிலி, பிஸ்னஸ் இதெல்லாம் விடுறது ஈஸி இல்லையே” என கார்த்திக் சொல்ல,

“கஷ்டம் தான் ஆனா முடியாதது இல்லையே “ என சந்தியா  கேட்க,

“நீ என் டையலாக்கை எல்லாம் ரெம்ப காபி  அடிக்கிற “ என கார்த்திக் சொல்ல சிரித்தனர் இருவரும்.

“சரி..போதும். மீதிய நாளைக்கு பேசிக்கலாம். நாளைக்கு யோகா கிளாஸ் முடிஞ்சவுடனே மீட் பண்றேன். ஒழுங்கா குளிச்சு நல்லா டிரஸ் பண்ணிட்டு வா. இன்னைக்கு மாதிரி குளிக்காம க்ளாஸ்க்கு வராத....” என்றான் கார்த்திக்.

“அய்யோ....இதையெல்லாம் எப்ப நோட் பண்ணீங்க? வெரி வெரி பேட் பாஸ் நீங்க.” என்றாள் சந்தியா.

“உங்க  தண்டட்டி பாட்டி சுடிதாரை எடுத்து தயவு செய்து மாட்டிட்டு வராத. கொஞ்சமாவது பிட்டா ட்ரெஸ் பண்ணிட்டு வா. நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கப் போறேன்” என்றான் கார்த்திக்.

“ஜொள்ளு பாஸ்ஸுங்க இருக்கிற இடத்தில பாட்டி மாதிரி  தான் ட்ரெஸ் பண்ணனும். என்ன சர்ப்ரைஸ்? ப்ரோபோஸ் பண்ண போறீங்களா பாஸ்?“ என வேடிக்கையாக வினவினாள் சந்தியா.

“சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்ஸா தான் இருக்கணும்...இப்போ உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் கொடுக்க போறேன் சந்தியா “என்றான் கார்த்திக்.

“இப்போ என்ன?” - சந்தியா கேட்க,

“உன்னோட ஒரு மணி செஸ் க்ளாஸ் கேன்சல் ஆகிடுச்சு..இனிமே மிட்நைட்ல ஆன்லைன் ட்யூஷன் கிளாஸ் எடுக்கிற வேலை  கிடையாது. நீ நல்ல தூங்கி எழுந்தா தான் பாஸ்க்கு ஒழுங்கா வேலை பாக்க முடியும் சரியா?” என கார்த்திக் சொல்ல,

“ஓ...மை காட்...இது பத்தி உங்களுக்கு எப்படி? ப்ச்....சக்தி சொன்னாளா? ஏன் கார்த்திக் செல்பிஷ்ஷா இருக்குறீங்க? என்னை ஏன் நம்ப மாட்டேன்றீங்க? உங்க ப்ராடக்ட் என்னோட முழு இபர்ட் போடுறேன்..ஆனா இந்த ஆன்லைன் க்ளாஸ் விசயத்தில தலையிடாதீங்க. எனக்கு பிடிக்கலை. இட் இஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ்” என எப்போதும் கோபத்தில் நிதானமாக செயல்படும் சந்தியா, அதிர்ச்சியில் பட படவென பொரிந்து விட்டு இணைப்பை துண்டித்தாள். வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்  எடுப்பதால் வரும் பணம் அவள் செய்யும் சேவைக்கு மிகவும் தேவை. அதை கார்த்திக் தடுக்க முயல்கிறான் என  இயலாமையில் ஆத்திரப்பட்டாள்.

சிறிது நொடிகளில்,

“when are you going to trust me? Do you know how much it  hurts? It is so painful my dear “

என்று அவன் வலிக்காமல் அனுப்பிய  குறுஞ்செய்தியை படித்தவளின் நெஞ்சம்  ஆயிரம் முட்கள் குத்தியது போல வலித்தது...

ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 12

Go to Episode 14

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.