நன்றாக திருப்தியாக சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு வந்தவள் படுத்து அன்றைய நாளில் அவள் சந்தித்த வேங்கையனையும் மூர்த்தியையும் ஒப்பிட்டுப் பார்த்தாள், ஜானகியின் நினைவும் வந்து நின்றது, அவளின் பேச்சு, அழுகை அனைத்தும் அவளை வாட்டியது, இருப்பினும் வேங்கையனை கண்டதில் இருந்து மஹதியின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது திருமணம், என ஒன்று நடந்தால் அது வேங்கையனோடுதான் என தீர்மானித்தாள்.
எப்படி ஜானகி மஹதிக்கும் மூர்த்திக்கும் திருமணம் ஆக கூடாதென தடுத்தாளோ அதே போல ஜானகியையும் வேங்கையனையும் சேர விடக்கூடாதென முடிவெடுத்தாள் மஹதி
”சலவைக்கல்லுக்கும் வைரக்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாம கிடைச்ச அழகான வாழ்க்கையை ஜானகி மிஸ் பண்ணிட்டா, எது எப்படியோ எனக்கும் மூர்த்திக்குமான உறவை அவளே கெடுத்துட்டதால நான் இப்ப ஃப்ரீயாயிட்டேன், எனக்கு மூர்த்தி வேணாம் வேங்கையன்தான் வேணும் ஆனா, இதுக்கு ஜானகி ஒத்துக்கிட்டாலும் வேங்கையன் ஒத்துக்க மாட்டாரு, ஏன்னா அவர் குணம் அப்படி, ஒருத்தனுக்கு ஒருத்திதான்னு நினைக்கறவரு. ஜானகி அவரை விட்டு போனாலும் அவளை நினைச்சிக்கிட்டே வாழ்வாரே தவிர இன்னொரு பெண்ணை ஏறிட்டுப் பார்க்க மாட்டாரு, அப்படி அவரை விடக்கூடாது
ஜானகி வாழ்க்கையில இருந்து வேங்கையனை பிரிக்கனும், அடுத்து வேங்கையன் மனசுல நான் இடம்பிடிக்கனும், வேங்கையன் என்னை கல்யாணம் செய்துக்கிட்டா தானாவே ஜானகி மூர்த்திகிட்ட போயிடுவா, அதுக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்வாங்க இல்லை ஜானகி மனசு மாறி வேங்கையனே போதும்னு நினைச்சிட்டா நமக்குதான் கஷ்டம், அப்படி விடக்கூடாது, அங்கிள் ஆன்ட்டி சொன்னது போல மூர்த்தி ஜானகிக்கு ஏத்தவன் இல்லைதான் ஆனா, அதே சமயம் ஜானகி வேங்கையனுக்கு ஏத்தவள் இல்லை, நான்தான் வேங்கையனுக்கு ஏத்தவள், அதை நான் நிரூபிக்கனும் வேங்கையன் மனசுல இடம்பிடிச்சி அவரோட வாழனும்
என் தோழிக்காக மட்டுமே இங்க வந்தேன், அவள் ஆசைப்பட்டபடியே எல்லாம் செஞ்சி அவளே எதிர்பார்க்காத சமயத்தில வேங்கையனை நான் எனக்கு சொந்தமாக்கிக்குவேன்,