“விவாகரத்து ஆனதால வந்திருக்கலாம் சக்தி!”
“ஒரு சின்ன பையனோட, எந்த வேலையும் இல்லாம, யாருமே தெரியாத ஒரு ஊருக்கு நேரா அப்படி யாராவது வந்து நிப்பாங்களா???”
“ஹ்ம்ம்!!! நல்ல கேள்வி”
“அஹல்யா எதனாலேயோ அவங்க பாஸ்ட் பத்தி பேச மாட்டேங்குறாங்க. அதுக்கும் இந்த சேகரனுக்கும் லிங்க் இருக்கான்னு தெரியலை.”
“ரொம்ப யோசிக்காதே சக்தி. வா நேரா அஹல்யா கிட்டேயே போய் கேட்டுடலாம்.”
“இன்ஸ்பெக்டர் வர டைம் ஆகுதே சத்யா? உனக்கு ஓகேவா?”
“அவர் இன்னைக்கு வர லேட்டாகும்னு சொல்லி இருக்கார் சக்தி. அதனால அது ஒரு தடை இல்லை. ஆனால் சப் இன்ஸ்பெக்டர் ஹீரோ சார் அஹல்யா வீட்டுல தான் இருப்பார். அவர் அவங்களை பேச விடுவாரான்னு தெரியலை!”
சத்யா நினைத்தது தான் அப்படியே நடந்தது!
அஹல்யாவும், அபினவும் மலர்ச்சியோடு அவர்களை வரவேற்றார்கள். அஹல்யாவின் கடந்த காலத்தைப் பற்றி சக்தி பேச்சை எடுத்தாளோ இல்லையோ அஹல்யாவின் முகம் மாறிப் போனது, அபினவ் அவர்களின் பேச்சுக்கு முட்டுக்கட்டைப் போட்டான்.
“சக்தி மேடம்! நீங்க ஹெல்ப் செய்ய ட்ரை செய்றீங்க. எனக்குத் தெரியும். ஆனால் அந்த பழைய கதை எல்லாம் வேண்டாமே. இங்கே நடந்ததைப் பத்தி மட்டும் பேசுவோமே,” என்றான் அபினவ்.
வேறு வழி இல்லாமல் வேறு திசையில் பேச்சைத் தொடர்ந்தாள் சக்தி.