“சொல்லுங்க விஜயன்,” என்றான் தென்றல்வாணன்.
“ரெக்கார்ட்ஸ்ல தேடிப் பார்த்துட்டேன் சார். அஹல்யாங்குற பேருல டைவர்ஸ் வாங்கி இருக்க யாரும் இங்கே நம்ம ஊருல இருக்க அஹல்யா ப்ரொபைல்க்கு மேட்ச் ஆகலை சார். எதுக்கும் இருக்கட்டும்னு நம்ம போலீஸ் ரெகார்ட்ஸ்ல தேடினேன் சார். அஹல்யான்னு நிறைய பேர் இருந்தாலும் மும்பைல இருக்க ஒரு கேஸ் இங்கே இருக்கவ வயசு, வருஷம் எல்லாத்தோடவும் சரியா மேட்ச் ஆகுது. நான் கேஸோட முழு விபரம் பார்க்கலை சார், நம்பர் நோட் செய்திருக்கேன்.” சின்ன பேப்பர் ஒன்றை தென்றல்வாணனிடம் நீட்டினார் விஜயன்.
“நல்ல வேலை செய்திருக்கீங்க விஜயன். குட் ஜாப்!”
முதல் முறை சந்தித்தப் போது மும்பையில் படித்து பட்டம் பெற்றதாக அஹல்யா சொன்னது தென்றல்வாணனுக்கு நன்றாக நினைவில் இருந்தது.
விஜயன் கொடுத்த கேஸ் நம்பரை வைத்து தேடி அந்த வழக்கின் விபரங்களை படித்தான்.
அஹல்யா என்ற நடிகை ஒரு தயாரிப்பாளரின் பணக்கார மகனின் மீது கொடுத்திருந்த வழக்கு அது. அந்த வாலிபன் தன்னிடம் தவறாக நடந்ததாக அஹல்யா புகார் செய்திருந்தாள். விசாரணை முடிவில் அஹல்யா விளம்பரத்துக்காகவும், பணத்திற்காகவும் நடந்ததை திரித்து சொல்லி இருப்பதாக கண்டனத்துடன் வழக்கு பைசல் செய்யப் பட்டிருந்தது.
மனசுக்குள் எதுவோ உந்த, மீண்டும் சேகரன் கேஸ் ஃபைலை எடுத்து அஹல்யா பற்றிய விபரங்களை பார்த்தான் தேன். மும்பை வழக்கு முடிந்த சில மாதங்களில் அஹல்யா மதியூருக்கு வந்திருப்பது புரிந்தது. பணத்திற்காக எதையும் செய்பவளா அஹல்யா? தென்றல்வாணனுக்கு அருவெறுப்பாக இருந்தது.
🌼🌸❀✿🌷
அன்று இரவு, தென்றல்வாணன் அவனுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது இரவு ஒன்பதை தாண்டி இருந்தது. வீட்டின் கேட் வழக்கத்திற்கு மாறாக திறந்து இருக்கவும் சுற்றிப் பார்த்தான்.