“சாரி இன்ஸ்பெக்டர் சார். அருண் சீசரை வாக் செய்ய கூட்டிட்டுப் போயிருக்கான். நானே கேட்டை பூட்டிடுறேன்.” காம்பவுண்ட் சுவர் ஓரமாக நின்றிருந்த அஹல்யா அருணையும் சீசரையும் சுட்டிக் காட்டி சொன்னாள்.
அஹல்யாவுடன் பேச பிடிக்காமல் முகத்தை திருப்பிக் கொள்ள நினைத்த தென்றல்வாணனின் பார்வை அஹல்யாவின் முகத்தில் பட்டு தயங்கி நின்றது.
அவளுடைய கண்களில் பொய் இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை.
எதுவோ சரியில்லை என்ற எண்ணம் மீண்டும் தோன்றியது. இவள் நல்லவளா? கெட்டவளா?
அந்த மும்பை கேஸ் பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டான்.
அதற்குள் அருண் சீசருடன் வந்துவிடவும், அஹல்யா கேட்டை மூடினாள்.
“குட் நைட் இன்ஸ்பெக்டர் அங்கிள்!” அருண் சீசரை தொடர்ந்து வீட்டுக்குள் ஓடினான்.
பேச்சுக் கொடுத்தும் பேசாமல் இருப்பவனிடம் குட் நைட் சொலவதா வேண்டாமா என்ற கேள்வியுடன் நின்றாள் அஹல்யா. அவளுடைய குழப்பம் தென்றல்வாணனுக்குப் புரிந்தது.
“குட் நைட் அஹல்யா!” சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று மறைந்தான் தென்றல்வாணன்.
வேகமாக வீட்டுக்குள் வந்த தென்றல்வாணன், ஷாலினியுடன் பேசிக் கொண்டே எதிரே வந்த சத்யா மேலே இடித்துக் கொண்டான்.
டின்னர் என்ற பெயரில் ஒரு மணி நேரமாக சாதத்தை அலைந்து, கலைந்து பொறுமையை சோதித்துக் கொண்டிருந்த ஷாலினியின் மேலே ஏற்கனவே கடுப்பில் இருந்த சத்யா, கோபத்தை மொத்தமாக தேன் மீது காட்டினாள்.