சக்தி அவனை SD என்று மறுபடியும் அழைத்ததைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் சாந்ததுரை. அவனுடைய அம்மாவிடம் அவன் எழுதிய கவிதையை காட்டி பேசியது அவனின் நினைவில் வந்தது.
“என்னப்பா இது SD, SDன்னு கிறுக்கி வச்சிருக்க? உன் பேரை எழுது!”
“இது கவிதைக்கான செல்லப் பேரும்மா அது!”
“அதான் ராஜான்னு உனக்கு செல்லப்பேரு இருக்கே. அப்புறம் என்ன?”
“இது இன்னும் செல்லம். என் வருங்கால பெட்டர் ஹாஃப் என்னை கூப்பிடுறதுக்கான ஸ்பெஷல் பேரு...”
“எதை மிஸ் செய்றேன்???” சக்தியின் குரல் பழைய நினைவுகளில் இருந்து சாந்ததுரையை வெளியே கொண்டு வந்தது.
சக்தியை கூடுதல் ஆர்வத்துடன் பார்த்தான்.
இத்தனை வருடங்களில் இவ்வளவு சிம்பிளான பெண்ணை அவன் பார்த்ததே இல்லை. கேஷுவல் காக்கி பேன்ட், காட்டன் டீ ஷர்ட். முகத்தில் பொட்டு கூட இல்லை. தலை முடியை சரியாக வாராமல் பெயருக்கு ஒரு ஹேர் பேன்ட் போட்டு வைத்திருந்தாள்!
பாகுபலி படத்தில் ஷிவு அவந்திகாவிடம் செய்வதுப் போல இவளிடம் செய்தால் என்ன என்று யோசித்தான் சாந்ததுரை!
அடுத்த வினாடியே கண்ணை தொட்டுப் பார்த்துக் கொண்டான். இன்னுமொரு இடி மின்னல் அடியை தாங்க அவனுக்கு சக்தி இல்லை!
ஆனாலும் சக்தியின் பக்கம் இருந்து பார்வையை அவனால் திருப்ப முடியவில்லை.