யாரால் முடிகிறதோ இல்லையோ அவள் அப்படி தான் வாழ்கிறாள்...!
அவளுக்கு தெரிந்ததெல்லாம் கடந்த ஆறு மாதங்களாக நடக்கும் விஷயங்கள் மட்டுமே!
அவள் யார், அவளின் நிஜ பெயர் என்ன? எங்கிருந்து வந்தாள் எதுவுமே அவளுக்கு நினைவில்லை! அவளுக்கு அதை எல்லாம் சொல்லவும் ஆளில்லை...!
வேரூரில் ஓடும் ஆற்றின் கரையில், தலையில் காயத்துடன் கரை ஒதுங்கி இருந்த அவளை முதலில் கண்டுபிடித்தது வெற்றி பவனின் உரிமையாளன் வெற்றி.
ஆற்றின் அருகிலேயே இருந்த சர்ச்சில் இருக்கும் கன்னியாஸ்திரீகள் உதவியுடன் அவளுக்கு முதலுதவி அளித்து, டாக்டர் மோகனின் நர்சிங் ஹோமில் அவளை சேர்த்தான் அவன்..
அவளுக்கு நினைவு திரும்பிய போது, எல்லாமே வெறுமையாக இருந்தது...!
அவள் யார், என்ன, எதுவும் புரியவில்லை! எப்படி அந்த ஆற்றில் விழுந்தாள்? எதுவும் தெரியவில்லை!
அவளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அவளின் நிலைக்கு பெயர் அம்னீஷியா என்றார்! நடந்த விபத்தில் அவளுக்கு அவளுடைய பழைய வாழ்க்கை மொத்தமாக மறந்து போயிருந்தது.
டாக்டரும் அவரின் மனைவி லதாவும் அவளை அன்பாக கவனித்துக் கொண்டனர். அவளின் முகம் வெண்ணிலவு போல அழகாக இருக்கிறதென்று லதா அவளுக்கு 'நிலா' என்று பெயர் வைத்தாள்!
ஆனால் ஒரு அழகிய இளம்பெண் யாரென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாள் என்ற செய்தி பரவிய உடன் பரிதாபம் மட்டும் பட நாம் என்ன குறையே இல்லாத நல்லவர்கள் நிறைந்த உலகிலா வாழ்கிறோம்?