“பிரின்சஸ், நீ தானா? நீயே தானா? இங்கேயா இருக்க? எங்களை எல்லாம் இப்படி பயமுறுத்திட்டீயே” என்றான்.
நிலா திரு திருவென விழித்த படி நிற்க, அவன் பேசிக் கொண்டே போனான்.
“சித்தி, சித்தப்பா, ஷிவா எல்லோர் கிட்டேயும் சொல்லனுமே. கீதாக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப் படுவா... தியாகு...”
வெற்றி எழுந்து வந்து நிலாவிற்கும் அந்த புதியவனுக்கும் நடுவே நின்றான்.
“சார், இது என் தங்கச்சி. நீங்க தப்பா நினைச்சு ஏதோ பேசிட்டு இருக்கீங்க!”
“இல்லை, இது என் தங்கை! இருங்க இருங்க...”
அந்த புதியவன் பரபரப்புடன் தன் பேன்ட் பாக்கட்டில் கை விட்டு பர்சை எடுத்து அதில் இருந்த படத்தை காட்டினான். அது ஒரு குடும்ப போட்டோ.
அதில் பற்கள் தெரியும் பளிச் சிரிப்புடன் நடுவே நின்றிருந்தது நிலாவே தான்!
வெற்றி அந்த படத்தை உற்று பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கு பின் நின்றிருந்த நிலா ஆர்வம் மின்ன எட்டி அந்த படத்தை பார்த்தாள்.
நாற்காலிகளில் இரண்டு பெரியவர்கள் அமர்ந்திருக்க அவர்களுக்கு பின்னே ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே நின்றிருந்தது. வலது பக்கம் இங்கே இருக்கும் அந்த புதியவன் நின்றிருந்தான். அவனருகே அவனை ஒட்டியபடி ஒரு பெண் நின்றிருந்தாள். அவனின் மனைவி போலும். அவளின் கையில் அழகான சிறிய குழந்தை.
நடுவில் நிற்பது அவள் தானா???? நிலாவால் நம்பவே முடியவில்லை...