விவேக் நரேந்திரன் பேசியது புரிந்தது என்ற பாவனையில், “சரிப்பா...” என அமைதியாக சொல்லவும், நரேந்திரனின் பார்வை பாரதி மீது பதிந்தது...
அவரின் பார்வை தன் மீது இருப்பதை மூளை உணர்த்தவும், திகைத்து நின்றிருந்த பாரதி, அவசரமாக சமாளித்து,
“சரி மாமா... சாரி... எனக்கு தலைவலின்னு நான் ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன். அது அவருக்கு தெரியாது... அது தான் கோபப்பட்டார்... மத்தபடி பெரிசா எதுவும் இல்லை...” என்றாள்.
“சரிம்மா... விவேக் சில விஷயங்களில் குழந்தை போல தான்... நீயும் அதை மனசுல வச்சுக்கோ... தோளுக்கு மேல வளர்ந்த பசங்க என்பதால நான் தேவை இல்லாம அவங்க விஷயங்கள்ள தலையிடுறது இல்லை. ஆனால் உனக்கு எப்போ எந்த விதமான உதவி வேணும்னாலும், நீ தயங்காம என் கிட்டேயோ கற்பகம் கிட்டேயோ கேட்கலாம்...”
பாரதி சரி என தலை அசைத்தாள்...
நரேந்திரன் நகர்ந்து செல்ல, கற்பகமும் அவசரமாக அவர் பின்னே சென்றாள். நிரஞ்சனும் அமைதியாகவே அவனின் அறை நோக்கி நகர, உமா பாரதியிடம் கண்களால் சைகை செய்துவிட்டு கிளம்பினாள். விவேக்கும் பாரதியை உஷ்ணமாக ஒருமுறை முறைத்து விட்டு அவர்கள் அறை பக்கம் சென்றான்!
கடைசியாக இருந்த மதுவை பார்த்து புன்னகைத்த பாரதி,
“குட் நைட் மது,“ என்றாள்.
“குட் நைட் அண்ணி... ஆனால்...” என தயக்கத்துடன் இழுத்தாள் மது.
“என்ன ஆனால்?”