கிருத்திகாவை சூழ்ந்துக் கொண்டார்கள்...
“கண்ணம்மா, என்னடா இப்படி செய்துட்ட? இந்த அம்மாவை இப்படி தவிக்க விட உனக்கு எப்படி மனசு வந்துச்சு?”
“சிவகாமி, சும்மா இரு... குழந்தையே குழப்பத்துல இருக்கா... விஜய் சொன்னது நினைவில்லையா?”
பெரியவர்கள் இருவர் மாறி மாறி பேச... கிருத்திகாவின் மனதினுள் மெல்லிய குற்ற உணர்வு தோன்றியது...!
விஜய் தியாகுவை பற்றி சொன்னது முதலே அவளின் மனதில் அவனை பற்றியே கேள்விகளும், ஆர்வமும் நிறைந்து இருந்தது... அவளின் பெற்றோர் என்று சொல்லும் இவர்கள் இருவரைப் பற்றி அவள் நினைக்க கூட இல்லை...
இந்த எண்ணம் மனதில் ஓடினாலும், கிருத்திகாவின் கண்கள் தயக்கத்துடன் மீண்டும் தியாகுவின் பக்கம் தான் சென்றது...
மற்றவர்களை போல் அவன் அவளின் அருகே வரவில்லை... நின்ற அதே இடத்தில் நின்றிருந்தான்... ஆனால், அங்கே இருந்து அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனின் முகம் கல்லைப் போல இறுகிப் போய் இருந்தது...
ஆனால் அந்த விழிகள் ஆர்வத்துடன் பளபளத்தன...
அந்த பார்வை மட்டுமே போதும் என நினைக்கும் அளவிற்கு அவனின் பார்வை அவளை மயக்கியது... வசீகரித்தது...
அவளும் அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்...!!!
மற்றவர்கள் பார்வைக்கு தியாகு எந்த உணர்ச்சியையும் காட்டாமல் நிற்பதாக தோன்றலாம்...