“பிரின்சஸ், நீ தியாகு கார்ல ஏறிக்கோ...” என்றபடி க்ரே நிறத்தில் இருந்த டாடா நெக்சன் காரின் முன் கதவை திறந்து விட்டான் விஜய்.
மிருதுளா பக்கம் ஒருப் பார்வை பார்த்த கிருத்திகா, அவள் சரி எனும் அர்த்தத்தில் தலையை அசைக்கவும், வேறு கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்காமல் விஜய் சொன்ன காரில் ஏறி அமர்ந்தாள்! கிருத்திகா ஏறி அமர்ந்ததும் கார கதவை மூடிய விஜய், அதே காரில் ஏற முயன்ற வெற்றியை தடுத்து,
“அவங்க இரண்டு பேரும் தனியா வரட்டுமே... ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்குறாங்க பேச நிறைய விஷயம் இருக்கும்... நீங்க நம்ம கார்ல வாங்க...” என்றான்.
“அதெப்படி என் தங்கச்சியை தனியா அனுப்புறது????” வெற்றி துள்ளிக் குதித்தான்!!!
“தனி கார்ன்னு தான் பேரு... அவங்க காருக்கு முன்னாடி அத்தை, மாமா கார் போகும், பின்னாடி நம்ம கார் போகும்... அப்புறம் என்ன?”
விஜய் விளக்கம் கொடுத்தப் பிறகும், வெற்றி அரை மனதோடு நின்றான்.
“இவ்வளவு சொல்றார் இன்னும் என்ன உங்களுக்கு அடம்... வாங்க அந்த கார்ல ஏறலாம்...” என்றாள் மிருதுளா...
வேறு வழி இல்லாமல் அவளுடன் சென்று பின் நின்றிருந்த காரில் ஏறி அமர்ந்தான் வெற்றி.
🌼🌸❀✿🌷
கிருத்திகா காரை ஒட்டிக் கொண்டிருந்த ராஜை திரும்பிப் பார்த்தாள். அவன் மும்முரமாக சாலையை கவனத்துடன் பார்த்து காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
வெற்றி பவனில் இருந்து கிளம்பி கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி இருந்தது...