மாலையில் பவித்ரா பொதுவாக சொன்னதற்கே சட்டென்று உணர்ச்சி வசப்பட்ட பாரதி லாவண்யாவின் கண் முன் வந்துப் போனாள்!
“ஆமாம் விவேக், அது நிஜம் தான்...!” லாவண்யாவும் விவேக் சொன்னதை ஏற்றுக் கொண்டாள்!
“அதான் நான் பாரதி கிட்ட சொல்லலை லாவி... பாரதி என்னை வெறுக்குறது மாதிரி செய்தா அவளுக்கு நல்லதுன்னு நினைச்சு தான் இதை ஆரம்பிச்சேன்... ஆனால், நடிப்புக்காக கூட என்னால அவளை அப்படி கொடுமைப் படுத்த முடியலை லாவி...”
வருத்தம் மின்ன சொல்லிவிட்டு, தலையில் கையை வைத்துக் கொண்டான் விவேக்.
எப்போதும் சிரிப்புடன், கலகலவென இருக்கும் நண்பனின் சோர்வான தோற்றத்தை பார்த்தபடி ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள் லாவண்யா! பின், எதையோ யோசித்து, ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள்,
“நீ சொல்றது எனக்கு புரியுது விவேக்... ஆனால், நீ பாரதி கிட்ட உண்மையை சொல்லாமல் இருக்குறது சரி இல்லை... உனக்கு என்ன பிரச்சனைன்ற குழப்பமே பாரதியை கொல்லாமல் கொன்னுட்டு இருக்கு...” என்றாள்!
“என்னால அவக் கிட்ட இதை சொல்லவே முடியாது... பாவம் லாவி அவ...”
“எனக்கு அது புரியுது விவேக்... சரி, அதைப் பத்தி அப்புறம் பேசுவோம்... நீ டாக்டர் கொடுத்த மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிடுற தானே? எந்த டாக்டர்ஸ் கிட்ட எல்லாம் கன்சல்ட் செய்த? யார் ட்யூமர்ன்னு சொன்னது? என்னன்னு சொன்னாங்க?”
“தாமஸ்ன்னு லைஃப்கேர் ஹாஸ்ப்பிட்டல்ல ஒரு நியூராலஜிஸ்ட் இருக்கார்... அவர் தான் சொன்னார்...”
“சரி, வேற டாக்டர் கிட்டேயும் கன்சல்ட் செய்து கன்ஃபார்ம் செய்தீயா இல்லையா?”