விவேக்கின் அருகாமையில் தன்னை மறந்திருந்த பாரதிக்கு பவித்ராவின் முதல் இரண்டு அழைப்புகள் கருத்தில் பதியவே இல்லை. மூன்றாம் முறையாக அவளின் செல்ஃபோன் சத்தம் எழுப்பவும், ரிங்டோனை வைத்தே அது பவித்ரா என்பதை தெரிந்துக் கொண்டாள்.
“பவி கூப்பிடுறா ஆனந்த்! ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கும்...”
விவேக்கிற்கு மனைவியை விட்டு ஒரு இன்ச் நகரவும் மனம் வரவில்லை. அதனால், “ப்ச்... இவ்வளவு நாள் அவங்க கூட தானே இருந்த? அப்புறம் மெதுவா பேசலாம் ரதி...” என்றான் சிணுங்கலாக!
ஆனால் பாரதியின் செல்ஃபோன் மீண்டும், மீண்டும் சத்தம் எழுப்பவும்,
“பவி இப்படி எல்லாம் திரும்ப திரும்ப சும்மா கூப்பிட மாட்டா ஆனந்த். ஏதாவது முக்கிய விஷயமா இருக்கும்... இருங்க...” என்று சொல்லிவிட்டு, ஷெல்ஃபில் இருந்த ஃபோனை எடுத்து பேசினாள்.
“சொல்லு பவி, என்ன விஷயம்...”
“அம்மாடி, ஒரு வழியா ஃபோனை எடுத்தியா? விவேக்கோட ஃபேமிலி வந்திருக்காங்க பாரு...” என மறுமுனையில் மெல்லியக் குரலில் சொன்னாள் பவித்ரா! அவள் குரலை தழைத்துப் பேசுவது பாரதிக்கு புரிந்தது!
“ஃபேமிலினா??? யாரு வந்திருக்கது?”
“எல்லோரும்... விவேக்கோட அம்மா, அப்பா, உமா, மது...”
“ஓ!”
“உன்னை பார்க்க தான் வந்தாங்களாம்... சீக்கிரம் வா...”