“அம்மா செய்ற முறுக்கு ரொம்ப நல்லா இருக்கும் சாப்பிட்டு பாருங்க...” என கஸ்தூரியும் சேர்த்து சொன்னாள்!
அதற்கு மேல் ஆர்வம் தாங்காமல்,
“உனக்கு அத்தையை முன்னாடியே தெரியுமா கஸ்தூரி?” எனக் கேட்டே விட்டாள் கிருத்திகா.
“தெரியுமே... எனக்கு கல்யாணம் செய்து வச்சதே அம்மா தான்,” என்றாள் கஸ்தூரி மெல்லிய நாணத்துடன்!
“அதெல்லாம் இல்லைடா கிருத்திகா... கல்யாணத்துக்கு மாமா சின்னதா ஹெல்ப் செய்தார் அதை சொல்றா,” என்று சொல்லி கஸ்தூரியின் புகழ்ச்சியை மறுத்தாள் செவ்வந்தி.
“இரண்டு லட்சம் தரது உங்களுக்கு சின்னதாம்மா?”
“இப்போ எதுக்கு அதெல்லாம் கஸ்தூரி... விடு... நீ வா கிருத்திகா, வீட்டை சுத்தி காட்டுறேன்...” என்று செவ்வந்தி அழைக்க, அடுத்த வினாடி அவளுடன் செல்ல எழுந்து நின்றாள் கிருத்திகா.
ஒவ்வொரு அறையாக பொறுமையாக மருமகளுக்கு காண்பித்து பேசி வந்த செவ்வந்தி, ஒரு சிறிய அறையை காண்பித்து,
“இதுல இருக்கிறது எல்லாம் தியாகுவுடையது... அவன் சின்ன பையனா இருந்தப்போ வச்சிருந்த விளையாட்டு சாமான்ல இருந்து எல்லாமே இருக்கு...” என்றாள்.
ஆர்வத்துடன் கண்களை சுழற்றி அறையை பார்வையிட்ட கிருதிகாவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
சிறு குழந்தைக்கான கிலுகிலுப்பையில் இருந்து, சைக்கிள், குதிரை என ஏதேதோ விளையாட்டு பொருட்கள்...