தில்லையும் தனது வீட்டிற்கு வந்து சோபாவில் அமர்ந்து பலமாக யோசித்தான்.
”இவள் நல்ல நாள்லயே நான் சொல்றதை கேட்க மாட்டா, நான் சொன்னதுக்காகவே வேணும்னே மாத்தி பேசி வைப்பா, இப்ப என்ன முடிவெடுப்பாள்ன்னு தெரியலையே, நான் ஒண்ணும் அவளை ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கலையே, நம்ம நிலைமையே இங்க கவலைக்கிடமா இருக்கு, இந்த லட்சணத்தில இவள்கூட வாழறதா வேணாம், அது சரியா வராது, என்னிக்குமே நம்ம உயிருக்கு ஆபத்து அதிகம், நாம செத்தா அவள் விதவையாயிடுவா, அது தப்பு, அவள் வாழனும்,
இதை எதையுமே யோசிக்காம நாமதான் அவளுக்கு தாலிகட்டினோம்னா, அவளாவது இதைப் பத்தி யோசிச்சி தாலியை கழட்டித் தர சம்மதிக்கலாம்ல, முதல்ல இருந்து பிடிவாதமா இருக்காளே, முதல்ல நியாயம் வேணும்னு வீம்பு பிடிச்சா, இப்ப தாலி வேணும்னு வீம்பு பிடிக்கறா, இவளை எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலையே, இந்த தாலி விசயம் யாருக்கும் தெரியலை, மத்தவங்களுக்கு தெரியறதுக்கு முன்னாடியே இந்தப் பிரச்சனையை சரி செஞ்சிடனும், வரட்டும், எப்படியும் ஏதாவது ஒரு முடிவோட வருவாளே பார்த்துக்கலாம்,
இந்த முறை அவளே ஒரு முடிவு எடுக்கட்டும், அது எதுவாயிருந்தாலும் நாம கட்டுப்படலாம், போனா போகட்டும் ஒரு மன்னிப்புதானே, அவளுக்காக சென்னைக்கு போய் அவள் அப்பாகிட்ட சொல்லிட்டு வந்துடலாம் ஆனா, அவள் போகலைன்னா என்ன செய்றது, அவள்கூட எப்படி குடும்பம் நடத்தறது, அதை நினைச்சாலே பயங்கரமா இருக்கே, சே தாதா வாழ்க்கையை விட குடும்ப வாழ்க்கை ரொம்ப கலவரமால்ல இருக்கு, வேணாம் தில்லை அவளை எப்படியாவது பேக் பண்ணி அனுப்பிடு அதான் உனக்கு நல்லது” என முடிவுடன் காத்திருந்தான்.
ஒரு மணி நேரம் முடிந்ததும் புது கார் வாங்கிக் கொண்டு டிரைவர் வந்து நின்றான் தில்லையிடம்
”சார் கார் வாங்கிட்டேன்”
”நல்லது”
”சின்னம்மா எங்க சார்”