Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 07
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அதன் பிறகு புவனேஸ்வரியும், ஜெய்யும் ரகசியமாக சந்திப்பதற்காக அந்த பெஞ்சை கண்டுப்பிடித்தார்கள்! தினம் தினம் ஆறு மணி அளவில் வீட்டில் ஏதாவது சாக்கு சொல்லி விட்டு ஜெயை சந்திக்க புவனேஸ்வரி வருவாள். அவனும் வேலையின் நடுவே ஓய்வெடுத்து அவளைப் பார்க்க வருவான்.
இருவரும் என்ன பேசுவார்கள் என்று தெரியாது. ஆனால் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் அவனிடம் விடைப் பெற்றுக் கிளம்பும் போது அவளுக்கு எப்படியோ இருக்கும். மனமே இல்லாமல் விடைப்பெறுவாள்.
இப்படியே அவர்களின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது!
அப்படி ஒரு சந்திப்பின் போது, ஜெய் அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தியைக் கொடுத்தான்.
“இன்னைக்கு என் பர்த்டே ஈஷ்,”
“இன்னைக்கா? ஏன் நீங்க முதலேயே சொல்லவே இல்லை?” என்றாள் புவனேஸ்வரி.
“நானே என் பர்த்டே பத்தி பேச முடியுமா? நீ தான் கேட்கனும்!”
“நீங்க மட்டும் என் பர்த்டே பத்தி கேட்டு இருக்கீங்களா?”
“உன் கிட்ட கேட்கலை. ஆனால் எனக்குத் தெரியும்,”
“பொய் சொல்லாதீங்க!”