(Reading time: 60 - 120 minutes)

ந்தியா வீட்டில், தன்ராஜின் முடிவை கேட்டு வெகுண்டு எழுந்த பாண்டியனிடம், “ஆமா ராசா, தன்  உசுரை காப்பாத்தினாங்கிற எண்ணம் இல்ல, உன்னை பத்தி அவங்கப்பன்ட்ட அசிங்க அசிங்கமா சொல்லிருக்கா அந்த அமெரிக்கா சிறுக்கி.  இந்த பொடிக் கழுதை என்னடான்னா, இத்தன  வருசமா கட்டி வச்ச நம்ம கோட்டைய ஒரே ராத்திரில நோக்காடு வருதுன்னு  இடிச்சு தரை மட்டமாக்கிட்டா….மவ இஷ்டமில்லாம உனக்கு கட்டிக் கொடுக்க மாட்டானாம் அப்பங்காரன். மவ  அழுதா இவருக்கு தாங்காதாம். அன்னிக்கே அந்த பூமா சனியன் கிணத்துல செத்து பிணமா மிதந்திருக்கணும். அவளால நமக்கு வந்த  அவமானத்துக்கு தான் அவ வயித்துல புழு பூச்சி கூட தங்காம கழியுது. இவளுங்க அடிக்கிற கொட்டத்துக்கு இப்போ சுமக்கிறதுனாப்புல புள்ளையா வரும்ன்னு நினைக்குற? அதுவும் கழிஞ்சு தேன் போகும்” அங்காலாய்த்து கடுஞ்சொற்களால் சபித்தாள்.

 

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த அறையில் புயலென பாய்ந்த தன்ராஜ் ஆங்காரமாய் “வாயும் வயிறுமா இருக்கிற புள்ளைய சபிக்கிற நீயெல்லாம் ஒரு மனுஷியா து…..” என முகத்தை இடது புறம் திருப்பி துப்பி விட்டு , மீண்டும் வடிவு முன் திரும்பியவர் ஆள்காட்டி விரலை உயர்த்தி  கையை  ஆட்டியவாறு கண்டிப்புக் குரலில் வடிவு மீது தீப்பார்வை வீசி,

 

“இங்க பாரு, என் பொண்டாட்டிய, என் புள்ளைகளை என்னை வேணாலும் பேசு ஏதோ ஒன்னு விட்ட தங்கச்சின்னு பொறுத்துக்குவேன். ஆனா, என் பேரன் பேத்திய பேச உனக்கு அருகதையே கிடையாது. இதுக்கு மேல உன்னை வீட்டில வைச்சிருந்தேனா என்னை ஆண்டவன் கூட மன்னிக்க மாட்டான். “

 

என்றவர், இருமுறை  சொடக்கிட்டு பின் மறுபடியும் மிரட்டலாய் கையை ஆட்டிக் கொண்டே,

 

“அடுத்த அஞ்சு நிமிஷத்தில உன் மூட்டை முடிச்சியை கட்டிட்டு இந்த இடத்தை விட்டு காலி பண்ணியிருக்கணும்.” என கடுமையான குரலில்  முழங்கினார்.  

 

வடிவையும் பாண்டியனையும் கையும் களவுமாக  காட்டிக் கொடுக்கவென்றே சிவாவிடம் பேசி விட்டு, பாண்டியனை பின் தொடர்ந்த சந்தியா, தூங்கிக் கொண்டிருந்த தந்தையை எழுப்பி அவர்கள் இருந்த அறையின் வெளியில் மறைந்து நின்று அவர்கள் பேசுவதை கேட்க வைத்தாள். வடிவின் உண்மையான் சுயரூபம் தெரிய வர, கோபமாய் பாய்ந்த தன்ராஜை பார்த்து மிரண்டு அவர் பின்னே ஓடி வந்த சந்தியா அவர்  அருகில் நின்று கொண்டாள்.

 

வடிவை பிலுபிலுவென பிடித்து விட்டு, அவள் அருகில் நின்ற பாண்டியனிடம்,

 

“நீ படிச்சவன் தான… அவ இப்படி பேசுறா பாத்துகிட்டு சும்மா நிக்கிற?” அதே கோபத்தோடு உரிமையாய் தன்ராஜ் கத்த, அவனோ,

 

“யோவ்...நீ போடுற சோத்த திங்க வந்த கூட்டம்ன்னு நினைச்சியா எங்களை? பொண்ணு கொடுப்பன்னு தான் பொறுமையா இருந்தேன். பச்சோந்தி மாறி மாத்தி மாத்தி பேசுற நீயெல்லாம் பெரிய மனுஷனாயா? உன்னை ஊரே காரித் துப்பும். எங்க ஆத்தாவை பாத்து துப்ப உனக்கு என்ன அருகதை இருக்கு? ஒரே நாள்ல மனசை மாத்திகிட்ட? அந்த ஆடி காரை பாத்தவுடனே பெரிய மீனா பிடிக்கலாம்ன்னு ஆசை வந்துடுச்சா? பணக்காரனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்ன்னு பாத்தியா? இல்….ல கூட்டிக் குடு” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தன்ராஜ்ஜின் கரம் அவன் கன்னத்தை பதம் பார்க்க போக, ஓடி வந்து இடையில் விழுந்த சந்தியா கையை நீட்டி மரித்து  தந்தையை   தடுத்து   அவரை  பார்த்து ,

 

“அப்பா வேண்டாம்ப்பா…. பத்து வருஷத்துக்கு முன்னாடி பூமா விஷயத்தில நீங்க கோபப்பட்டதுக்கு தான் என்னை கல்யாணம் செய்து  கொடுமை படுத்தி...அது மூலமா உங்களை நோகடிக்க திட்டம் போட்டு இங்க வந்திருக்காங்க. இப்போ மறுபடியும் பகையை வளக்க வேண்டாம். அவங்க பேசுறதெல்லாம் நடந்திடவா போகுது. ஆண்டவன் நம்மளை சோதிச்சாலும் கைவிட மாட்டான்.” கெஞ்சலாக ஆனால் தெளிவாக பெரிய மனுஷி போல   தந்தையிடம் சமாதானம் கூறினாள்.

 

ந்த நேரம் காய்ந்த துணியை மொட்டை மாடியிலிருந்து எடுக்க சென்றிருந்தார்கள் ஸ்ரீமாவும் லக்ஷ்மியும். தருண் தூங்கிக் கொண்டிருந்தான். ஸ்ரீமாவின் கணவர் வெளியே சென்று விட்டு வந்தவர், சத்தம் கேட்டு வடிவு இருந்த அறைக்குள் நுழைந்தார்.

 

சந்தியா பேசியவுடன், அவளை பார்த்து ஏளனப் பார்வை வீசிய பாண்டியன்  “இப்படி பேசுனாப்பல நடந்தது எல்லாம் மறந்து சமாதானமா போக நான் என்ன இழிச்ச வாயனா? “ என்று இளக்காரமாக சொல்லி விட்டு,

 

சந்தியாவிடமிருந்த பார்வையை தன்ராஜிடம் திருப்பி, “எப்படி? எப்படி? நீங்க  அறைந்தா எங்க கை மாங்காய் பறிக்குமா? என் மேல கைய வைச்சுப் பாரு அப்புறம் தெரியும். பெரிய மனுசன் கூட பாக்க மாட்டேன். எங்கிட்ட அடி வாங்கினா உனக்குத்  தான் அசிங்கம்” என்று பதிலுக்கு மிரட்டினான்.

 

அவனிடமிருந்து இதை எதிர்ப்பார்க்காத தன்ராஜ் உறைந்து போன அதே நேரம், அது வரை பொறுமை காத்த ஸ்ரீயின் கணவர், அதற்கு மேல் முடியாமல் பாண்டியனை நோக்கி நடந்தவாறு,  தனது கனத்த குரலை மேலும்  உயர்த்தி,  “என்ன மிரட்டுற? ஆம்பிளை பையன் இல்லாத வீடுன்னு பாத்தியா? உன் ஆட்டத்தை வேற எங்கயாவது வைச்சுக்கோ.  சீக்கிரம் இடத்தை காலி பண்ற வழியைப் பாரு. “ ஒரு அரட்டு போட, மாடியிலிருந்து வந்த ஸ்ரீயும், லக்ஷ்மியும்  சத்தம் கேட்டு அந்த அறை நோக்கி  ஓடி வந்தனர்.

 

“நான் அவர்கிட்ட பேசுனா நீ ஏன் துள்ளுற. ஓ….ஒரு பொண்டாட்டி பத்தலையோ? துணைக்கு மச்சினியும் கேக்குதா உனக்கு?” வாய்  கூசாமல்  குரலை உயர்த்தி பாண்டியன் கத்த, அதைக் கேட்டு வெறி  கொண்டது போல அவனை அடிக்க ஓடி வந்த ஸ்ரீமாவின் கணவரை அனைவரும் தடுத்து பிடித்தனர்.

 

அவரை தடுத்த  தன்ராஜ், பாண்டியனிடம் “இனி ஒரு செகன்ட் கூட இங்க இருக்கக் கூடாது. கெட் அவுட்” குரலில் கண்டிப்பும், முகத்தில் கடுமையையும் காட்டி உச்ச ஸ்துதியில் அவனை கழுத்தை பிடித்து விரட்டாத குறையாய்...

 

“ஹும்…. அதான் சொன்னேன்ல உன் எச்சுக்கல சாப்பாட்டை திங்க வரலை. ஆனா,  இதோட விடுவேன்னு பாத்தியா? எனக்கு கட்டிக் கொடுக்காதவளை ஒரு பய  திரும்பி கூட பாக்காத படி பண்றேன்னா இல்லையான்னு பாரு.  உன் மக நிலமையை  நினைச்சு நீ நிதம்  நிதம்  வேதனைப் படணும்.  பட வைப்பான் இந்த பாண்டியன்” என்ற சீறியாவாறு  சந்தியாவை  வெறித்தனமாய் பார்த்துக் கொண்டே  தன்ராஜை மிரட்ட,

 

“நீ என்ன வேணாலும் திட்டம் போடு. ஆனா உன் எண்ணமே உன்னை அழிச்சிடும். அப்பா இல்லாத பிள்ளை, சின்ன வயசுலே புருஷனை பறிகொடுத்தவன்னு  உனக்கும் உங்கம்மாவுக்கும் எங்கப்பா இரக்கப்பட்டு படிக்க வைச்சதுக்கு ரொம்ப நல்ல எண்ணம்.”  என்ற சந்தியா ஏளனமாய் உதட்டை சுழித்தாள். அவளின் அலட்சியம் அவனை இன்னும் உசுபேற்றி விட்டதை அவள் அறியவில்லை. அவன் மிரட்டலை கண்டுக்கொள்ளாத அவளை துன்புறுத்த வேண்டும் என்ற வெறி  அவனை வக்கிரக்காரனாய் மாற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுது தான் வாய்ப்பு கிடைத்தவளாய் தனது கொடிய வாயைத்  திறந்த வடிவு சந்தியாவைப் பார்த்து,

 

“யேய்.. பொட்டைக் கோழி கூவி விடிஞ்சிருக்கா? வாயை மூடுறி பொட்டை சிறுக்கி.” என்று கடுமையாக சாடிவிட்டு, தன்ராஜை பார்த்து,

 

“ இப்படி பொட்டச்சி பேச்சை கேட்டு ஆட்டம் போட்டவனெல்லாம் விளங்காம போயிட்டான். நிச்சயம் பண்றேன்னு கூப்பிட்டு எச்சை துப்பி அசிங்க படுத்துற நீயெல்லாம் ஒரு அண்ணன். இவ தாலியறுத்தவ, கேக்க நாதியில்லைன்னு ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை பேசுதீகளா? நான் வவுறு எரிஞ்சு சொல்லுதேன் கேட்டுக்கோங்க… நான் ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா அந்த அமெரிக்காகாரி வவுத்துல புள்ளையே தங்காம காலம் முழுக்கவும் மலடியாவே  போவா… இம்முட்டு வாயு பேசுத  இவ விளங்காமலே போவா” என ஆங்காரமாய் கத்தி  சபித்த வடிவின் கடுஞ்சொற்களை பெத்த மனதால் தாங்க முடியவில்லை. “என் பி...ள்ள...ங்க” கண்ணீர் மல்க, அந்த இரு வார்த்தைகளை வெளியிட திணறி படபடப்பில், ரத்த கொதிப்பு அதிகமாகி மயங்கி சரிந்தார்  லக்ஷ்மி.

ஆட்டம் தொடரும் ...

Go to Episode 19

Go to Episode 21

 

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.