(Reading time: 10 - 20 minutes)

04. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா 

மனதிலே ஒரு பாட்டு

தில் சொல்லவில்லை வசந்த். சாலையை பார்த்தபடியே காரை செலுத்திக்கொண்டிருந்தான்.

அவனது மௌனமே அவளுக்கு எதையோ சொல்லியது போலே இருந்தது.

மறுபடி கேட்டாள் "அப்பா எப்படி இருக்கார் வசந்த்?"

"ஓ! நல்லாஇருக்காரே ! மேலே" என்றான் சற்று அழுத்தமாய்.

"வசந்த்!"  அதிர்ந்தே போனாள் அர்ச்சனா. "எப்போ வசந்த்? "எப்படி? என்னாச்சு அவருக்கு?

"எப்படின்னா என்ன சொல்றது அர்ச்சனா? என்றான் பெருமூச்சுடன். "அவருக்கு மேலே போற நேரம் வந்திடுச்சு அவ்வளவுதான்."  என்றான் சாலையை வெறித்தபடி

"எப்போ வசந்த்?  எனக்கு எதுவுமே தெரியாது."

"ஆச்சு அர்ச்சனா" "ரெண்டு ரெண்டரை வருஷமிருக்கும்" என்றான் சரியாக ஞாபகம் இல்லாதது போல்.

இருக்கிறதே. தேதி, கிழமை, நேரம் உட்பட எல்லாமே நினைவில் இருக்கிறதே. மனோ திருமணம் முடிந்த இரண்டாம் நாள், 62 வயதில் அவர் எல்லாவற்றையும் முடித்துக்கொண்ட தினம், இன்னமும் ஈரம் காயாமல் மனதில் அப்படியே.....................

உடைந்தே தான் விழுந்தான் அப்போது. தாங்கிக்கொண்டார்கள் மனோவும், அவன் அப்பாவும்.

அப்போதே அர்ச்சனாவிடம் சொல்லிவிட வேண்டும் என்றுதான் கொதித்தான் மனோ. தடுத்து விட்டிருந்தான் வசந்த்.

"இப்போதுக்கூட கொட்டிவிடலாம் அவளிடம்.   மனம் லேசாகக்கூட ஆகிவிடலாம். ஆனால் அவளுக்கு மனதில் பாரம் கூடி அழுத்துமே? சுள்ளென வலிக்குமே . தேவையில்லை. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்."

பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டாள் அர்ச்சனா.

வசந்தின் அப்பாவின் கையால் எத்தனை  முறை சாப்பிட்டிருக்கிறாள்? சுடச்சுட சமைத்து அவர் கையாலே பரிமாறி இருக்கிறார். வரப்போகும் மருமகளுக்கு எத்தனை மாமனார்கள் செய்வார்களாம்? அவருடன் செஸ் விளையாடி, இருவருமாக சேர்ந்து வசந்தை தோற்கடித்து.......... எத்தனை இனிமையான நாட்கள் அவை.

அவள் மீது அத்தனை பாசம் அவருக்கு. அர்ச்சனாவின் கண்கள் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தன. பார்வையை ஜன்னலுக்கு வெளியே திருப்பிக்கொண்டாள் அர்ச்சனா.

லுவலகத்தை அடைந்து, செய்யவேண்டிய நடைமுறைகளை செய்து வேலையில் சேர்ந்தாகி விட்டது.

அத்தனையிலும் கூடவே நின்றான் வசந்த். முக்கியமானவர்களை அறிமுகப்படுத்தி வைத்தான். அவள் தன் இருக்கையில் சென்று அமர்வதற்கு முன்னால்,

"ஆல் தி பெஸ்ட்" அவளை நோக்கி கை நீட்டினான் வசந்த்.

இரண்டு........ நான்கு...., ஐந்து....., நொடிகள் தயங்கி விட்டு மெல்ல கை நீட்டி குலுக்கினாள் அர்ச்சனா.

சுளீரென வலித்தது அவனுக்கு. அந்த தயக்கம் சுளீரென வலித்தது. தன் இருக்கையில் சென்று கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தான் வசந்த்.

"இப்படி மூன்றாம் மனிதனாய் பார்க்கும் அளவுக்கு என்ன தவறு செய்தேன் நான்?"

ன் இருக்கையில் அமர்ந்தாள் அர்ச்சனா. அவள் தயக்கம் அவனுக்கு நிறையவே வலித்திருக்கும். தெரியும் அவளுக்கு.

வசந்துக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. அவன் எதிரில் அமர்ந்தால் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து மூடிக்கொள்வான். அதன் பிறகுதான் பேசவே துவங்குவான் அவன்.

மனோவின் திருமணதிற்கு ஒன்றாய் பெங்களூர் வந்தார்களே அப்போது கூட இப்படித்தான் அமர்ந்திருந்தார்கள்.

ந்த விமானத்தில், அவள் அருகே அமர்ந்துக்கொண்டு, அவள் கையை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டபடியே, சீட்டில் சாய்ந்துக்கொண்டு கண்மூடியிருந்தான் வசந்த்.

"வசந்த்........."

"ம்"   கண்களை திறக்கவில்லை அவன்

"நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்குமில்ல?"

"நிச்சியதார்த்தம் முடிஞ்சு நாலு மாசம் ஆச்சு. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். இன்னமும் உனக்கு என்ன சந்தேகம்?"

"நம்ம கல்யாணம் நின்னு போற மாதிரி கனவு வந்ததுன்னு சொன்னேனில்ல. அது பலிச்சிடுமோன்னு ரொம்ப பயம்மா இருக்கு வசந்த்."

கண்களை திறந்து அவள் முகத்தைப்பார்த்தான் வசந்த் " அர்ச்சனா, தேவையில்லாம மனசை குழப்பிக்காதேடா. நல்லதே யோசி. எல்லாம் நல்லபடியா நடக்கும்"

"பார்த்திட்டே இரு. இந்தக்கல்யாணம் மட்டும் நடக்காம போச்சுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்" என்றாள்

சட்டென்று பொங்கிவிட்டது அவன் கோபம். அவள் கையை உதறியே விட்டிருந்தான்.

"இப்படி பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். என்கிட்டே பேசாதே நீ. மனோ கல்யாணம் முடியற வரைக்கும் என்கிட்டே பேசாதே"

கைகளை கட்டிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டுவிட்டிருந்தான் வசந்த்.

றுநாள் மண்டபத்துக்கு செல்லும்வரை அவளிடம் பேசவில்லை அவன்.

மண்டபத்தில் ஸ்வேதாவின் அருகில் அமர்ந்திருந்தாள். கைக்கெட்டும் தூரத்தில் நாளிதழை புரட்டியபடி அமர்ந்திருந்தான் வசந்த்.

எல்லாரும் கைகளை மருதாணியால் அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள்.

"நீங்க போட்டுக்கலையா?" அர்ச்சனாவைக்கேட்டாள் ஸ்வேதா

"ஆமாம் என் கைக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்."

"ஏன்? என்னாச்சு?" என்றாள் ஸ்வேதா.

"எல்லாரும்தான் என் கையை உதறிட்டு போறாங்களே அப்புறம் இதெல்லாம் எதுக்கு போட்டுக்கணும்?"

நாளிதழின் பக்கத்தை திருப்பும் சாக்கில் அவள் முகத்தை ஆராய்ந்தான் வசந்த்.

"என்னது? புரியலை" என்றாள் ஸ்வேதா

"உனக்கு புரிய வேண்டாம். புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சாப்போதும்" எழுந்து சென்று விட்டாள் அர்ச்சனா.

ரவு பத்து மணி. தனியே அமர்ந்திருந்தவளின் அருகே வந்தமர்ந்து, அவள் கையை பற்றிக்கொண்டு அவன் வரைந்த மருதாணிக்கோலம்...........

அப்போதும் அவளுடன் பேசவில்லை. அவள் முகத்தைக்கூட நிமிர்ந்துப்பார்க்கவில்லை அவன். ரசித்து ரசித்து வரைந்துக்கொண்டிருந்தான். அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா

பதினைந்து நிமிடங்கள். அங்கே மௌனம் மட்டுமே நிலவிக்கொண்டிருந்தது. ஆனால் பல நூறு வார்த்தைகள் பேசிவிட்டதைப்போல்.......... அப்படியே ஒருவருக்குள்ளே ஒருவர் கரைந்து விட்டதைப்போல்.......

மறுநாள்  மனோவின் திருமணம். அது முடிந்ததும் எல்லாமே முடிந்துவிட்டிருந்தது.

தலையை குலுக்கிக்கொண்டு பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வேலைக்குள் தன்னை செலுத்திக்கொள்ள முற்பட்டாள் அர்ச்சனா.

மதிய உணவு இடைவேளை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.