(Reading time: 19 - 37 minutes)

07. காதல் பயணம்... - Preethi

Kaathal payanam

****சென்னை****

மேடம்...” என்று வகுப்பின் வாசலில் நின்று assistant ரகு அழைக்க சித்ரா திரும்பிப் பார்த்தார்.

அவரது அருகில் கைகளில் புத்தகத்துடன் சற்று அலட்சியமாக புதியவன் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். ஒரு முறை அவனைப் பார்த்துவிட்டு ரகுவிடம் பார்வை வீச அவர் “நியூ admission மேடம்” என்று கூறினார்.

ரகு சொல்லிவிட்டு அந்த புதியவனை விட்டுச் செல்ல சித்ரா அவனை உள்ளே அழைத்தார். “ஒரு செமஸ்டர் முடிஞ்சுடுச்சேப்பா இப்போ வந்து காலேஜ்ல சேருறியே?” என்று அக்கறையாக கேட்டார்.

“இல்லை மேடம் நான் வேற காலேஜ்ல தான் சேர்ந்தேன், ஆனால் அப்பாவுக்கு transfer அப்பறம் எனக்கு உடல் சரில்லாமல் போனதால பாதியில join பண்ண வேண்டியது ஆகிடுச்சு. ஆனால் என்னால படுச்சுட முடியும் மேடம் நான் 12th லயே district 1st வந்தேன்” என்று கூறியவனின் கண்களில் தன்னடக்கம் இன்றி தலைகனம் தெரிந்தது.

“ஓஹோ சரிப்பா போய் உட்காரு” என்று அவர் கூறியதும் புதியவன் சென்று அருண் அருகில் அமர்ந்தான், வகுப்பு துவங்கியது.

“ஹாய்” என்று அருண் கை நீட்ட பதிலுக்கு அவனை ஒரு முறை பார்த்துவிட்டு கை கொடுத்தான் புதியவன்.

“ஏன் இவன் இப்படி நம்பலை பார்க்குறான் ஒரு வேளை நம்ம குளிக்கலைன்னு தெரிஞ்சுருச்சோ?” என்று மனதில் எண்ணிக்கொண்டு திருதிருவென முழித்தான். புதியவன் பார்த்த பார்வையில் காலை 9 மணி வகுப்புக்கு 8.45க்கு கஷ்டப்பட்டு எழுந்து பல்துலக்கி குளிக்காமல் scent மூலம் அபிஷேகம் செய்து அடித்து புடித்து ஓடி வந்த பெரும்ப் போராட்டம் கண்முன் ஓடியது.

அருண் தன் தூக்கம் களைய யாராவது கிடைக்க மாட்டார்களா என்று தேடிக்கொண்டு இருக்கையில்தான் புதியவன் வந்தது எனவே கடவுளாய் பார்த்து அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு புதியவனிடம் மீண்டும் பேச்சை தொடர்ந்தான்.

“உன் பேரு என்ன?”

“தர்ஷன்” என்று ஒற்றை வார்த்தையில் நிறுத்திக்கொண்டான்.

“மீட் மிஸ்டர்.அஸ்வத் நம்ம கிளாஸ் topper, department topper எல்லாமே இவர் தான்” என்று அருகில் அமர்ந்து இருக்கும் அஸ்வத்தை பக்காவாக அறிமுகம் செய்து வைத்தான். அஸ்வத் தர்ஷனை பார்த்துப் புன்முறுவல் புரிய பதிலுக்கு வெறும் தலை அசைப்புடன் நிறுத்திவிட்டு அருணிடம் திரும்பிக்கொண்டான்.

“நானும் topper தான் எங்க ஊர்லையே நான் தான் 1st, என்ன மாதிரி புத்திசாலி யாரும் இல்லன்னு எங்க ஸ்கூல் ஃபுல்லா சொல்லுவாங்க” என்று அவன் தற்பெருமையாக கூறிக்கொள்ள, அருணுக்கு சிரிப்பாக இருந்தது. இதை கூறிவிட்டு தர்ஷன் திரும்பிக்கொள்ள அருண் அஸ்வத்தின் புறம் திரும்பினான்.

அவனுக்காகவே காத்திருந்தவன் போல் “உனக்கு இது தேவையா?” என்று கூறி மெல்லியதாக சிரித்தான் அஸ்வத்.

“இவன் என்னடா அல்ப்பமா சொல்லிக்காட்டிக்குறான்” என்று ஏளனமாக தர்ஷனை ஒரு முறை பார்த்துவிட்டு மெல்லிய குரலில் கூறினான். அருண் சொன்ன தோரணையில் அஸ்வதிற்கு மேலும் சிரிப்பு வந்தது.

நாட்கள் எப்போதும்போல் வேகமாக நகர அந்த வருட செமஸ்டர் பரிட்சையும் நெருங்கியது. படிப்பில் போட்டி துவங்கி இப்பொது தர்ஷனுக்கு அஸ்வத் என்ன செய்தாலும் போட்டிப் போட தோன்றியது. அவனிடம் அனைவரும் இயல்பாக பேசுவது ஒருவித பொறாமையாக இருந்தது, எந்தவித சந்தேகம் என்றாலும் அவனிடம் கேட்பதும் வகுப்பில் அஸ்வத்தை முக்கியமாக நடத்துவதும் பொறாமையை மேலும் வளர்த்தது.

ஞாயிறு விடியல் வெளியில் என்றும் போல் 6 மணிக்கே இருந்தாலும், விடுதி மாணவிகளுக்கு அன்றைய விடியல் என்னவோ 10 மணிதான். கண்கள் திறக்க மனமின்றி சிணுங்க, துறக்காதே என்னை அணைத்துக்கொண்டு இன்னும் சிறிது நேரம் என்னுடனே இரு என்று மெத்தை அழைக்க அதை மீற மனமின்றி மெதுவாக கண்திறந்தாள் பிருந்தா. அவள் கண் திறந்து பார்த்த காட்சியை அவளால் நம்ப முடியவில்லை.

“என்ன அனு? இவ்வளவு சீக்ரம் எழுந்துருச்சு எங்கே போற?” என்று வந்த தூக்கமெல்லாம் களைந்து போக கேட்டாள்.

“இன்னைக்கு அஸ்வத் data structure படிக்கப் போறதாய் சொன்னான் எனக்கும் கொஞ்சம் டவுட்ஸ் இருக்குனு சொன்னேன், சரிவா சொல்லித்தரேன்னு சொன்னான்” என்று பதில் அளித்தவாறு தயார் ஆகிக்கொண்டு இருந்தாள்.

அவள் கூறியதை கேட்டு “ம்ம்ம் ம்ம்ம் நடத்துங்க” என்று நக்கலாக சிரித்தாள் பிருந்தா.

அவளது சீண்டலில் சிரிப்பு வந்தாலும் “ஹே, நீ நினைக்குற மாதிரி ஏதும் இல்லை” என்று மென்மையாக பதில் கூறினாள்.

“அவள் என்ன நினைத்தாள்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று போர்வையில் இருந்து எட்டி பார்த்தவாறு கிண்டலில் சேர்ந்துக் கொண்டாள் ரியா.

“கரெக்டா சொன்னடி, அவனை பத்தி பேசாதிங்க எனக்கு பிடிக்கலை அவன் என்னோட எதிரி, அப்படி இப்படினு ஒருத்தி பேசிட்டு இருந்தாளே அவள் எங்கனு உனக்கு தெரியுமா ரியா?” என்று அனுவை பார்த்தவாறே ரியாவிடம் கிண்டல் செய்தாள்.

“ஹே போதும் விடுங்கடி” என்று சிரிப்பை கட்டுபடுத்திக்கொண்டு கெஞ்சினாள் அனு.

“அதெப்படி முடியும், இது என்ன மோதல் மூலம் வந்த காதலா அனு?” என்று மேலும் மேலும் கிண்டல் செய்ய அனுவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

“தெய்வங்களா போதும் நிறுத்துங்கப்பா, இது காதல் எல்லாம் ஒன்னும் இல்லை” என்று கைக்கூப்பி வணங்கினாள்.

“ஹ்ம்ம் பொழச்சுப்போ, நல்லா கத்துகிட்டு வந்து சொல்லிகொடு” என்று பிருந்தா அதட்டினாள். அவள் வாக்கியத்தை முடிக்க ரியா அவள் தலையை லேசாக தட்டி, “ஹே மண்டு அஸ்வத் அவளுக்கு சொல்லி தரதை எல்லாம் எப்படி அவள் நம்மளுக்கு சொல்லுவா?! அது அவங்க ரகசியம் ஆச்சே” என்று அனுவை பார்த்து கண்ணடித்து கூறினாள்.

விட்டால் இன்னும் எல்லை மீறும் என்று அனுவிற்கு புரிந்துப் போக, “எப்பா சாமிங்களா நான் கிளம்பிட்டேன் என்னை விட்டுடுங்க” என்று பெரிய கும்பிடுப் போட்டு நகர்ந்தாள். என்னதான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாலும் அவர்களது பேச்சு நாணத்தை தர தானாக புன்னகைத்தவாறு வகுப்பிற்கு சென்றாள். அங்கு அவளுக்காக அஸ்வத் காத்துக்கொண்டு இருந்தான். இவள் சிரித்துக்கொண்டே வருவதை பார்த்து ரசித்தவன், “என்ன மேடம் ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல?” என்று கேட்கவும்தான், தான் தனியாக சிரித்துக்கொண்டு இருக்கிறோம் என்று உணர்ந்தாள் அனு.

காரணமும் கூற முடியாமல் “இல்லை ஃப்ரிண்ட்ஸ் சும்மா ஜோக் பண்ணாங்க அதை நினைச்சு சிருச்சேன்” என்று கூறி சமாளித்தாள். என்ன ஜோக் என்று அவன் பதிலுக்கு கேட்கவில்லை ஏனென்றால் அதே ஜோக் தான் அவனது விடுதியிலும் சொல்லி அனுப்பினார்கள் என்று அஸ்வத் அறிந்ததே.

ஒருவழியாக பேசி முடித்து அவர்கள் பாடங்களை படிக்க துவங்கினர். ஒரு நொடி பார்வையில்  வந்த உணர்வினை வெளிபடையாக கூறி காதல் எனும் மழையில் நினைய நாணப்பட்டு, நட்பு எனும் குடைக்கு அடியில் பாதுகாப்பாய் பழகினர் இருவரும். இருவரும் சிரித்துப் பேசி படித்துக்கொண்டிருக்க அதை கண்ட ஒரு ஜோடி கண்களில் அப்பட்டமாக வன்மம் தெரிந்தது. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.