(Reading time: 22 - 44 minutes)

நானும் சாப்பிடனும் இல்ல”

“நீங்க சாப்பிடுங்க. உங்களை யாரு வேண்டாம்ன்னு சொன்னது”

“ஆனா என் பொண்டாட்டி சாப்பிடாம இருக்கும் போது நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன்”

லக்ஷ்மி ஏதும் கூறாமல் அமைதியாக வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

“சரி போ. சாப்பிடாத. ஆனா நானும் சாப்பிட மாட்டேன். எனக்கு சுகர் வேற. பசிக்குது தான். இருந்தாலும் நீ சாப்பிடாம நானும் சாப்பிட மாட்டேன்”

லக்ஷ்மிக்கு உள்ளுக்குள் பதைக்க ஆரம்பித்தது. இருந்தாலும் உணவு உண்ணவும் பிடிக்கவில்லை.

“ஏன் நான் சாப்பிடலைன்னா நீங்க ஏன் சாப்பிடாம இருக்கீங்க.”

அமைதியாக புன்னகைத்த அவர் “கல்யாணம் ஆன புதுசுல நான் சண்டை போட்டுட்டு வீராப்பா சாப்பிடாம என் கோபத்தை காமிப்பேன். என் பொண்டாட்டியும் சாப்பிட மாட்டா. ரொம்ப நாளைக்கு எனக்கு அது தெரியாது. ஆனா அது தெரிஞ்ச பின்னாடி நான் என் கோபத்தை அந்த மாதிரி சாப்பாடு விசயத்துல காமிக்கறதில்லை. இப்ப காலம் போன பின்னாடி என் பொண்டாட்டி நான் செஞ்சதையே செய்யும் போது நானும் அவ செஞ்சதை தானே செய்யணும்” என்றார்.

அவர் அப்படி கூறியதும் லக்ஷ்மியால் ஏதும் கூற முடியாமல் அமர்ந்திருந்தார்.

திருமணம் நடந்த புதிதில் அவர் கோபத்தை சாப்பாட்டில் காண்பித்து சாப்பிடாமல் இருப்பார் தான். அப்போது அவர் சாப்பிடாமல் இருக்க தனக்கும் உண்ண மனமில்லாமல் இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அதை தான் வெளியில் சொன்னது கிடையாது. பின்பு அந்த பழக்கத்தை அவர் விட்டுவிட்டார் தான். ஆனால் தானும் உண்ணாமல் இருப்பது தெரிந்து தான் அவர் அப்பழக்கத்தை விட்டு விட்டார் என்பது புதிய செய்தி.

எழுந்து சென்று தட்டுக்களை எடுத்து வந்து அவரிடமும் கொடுத்து விட்டு தானும் உண்ண ஆரம்பித்தார்.

மனைவியின் இந்த செயல் அவருக்கு நிம்மதியை கொடுத்தது.

எப்படியும் அவளை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் உண்ண ஆரம்பித்தார்.

இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவருக்கு தன் மனைவியை பற்றி நன்றாக தெரியும். லக்ஷ்மி செய்யும் எந்த ஒரு செயலிலும் நேர்மை இருக்க வேண்டும் என்று எண்ணுபவள். அவள் இப்போது இந்த திருமணத்திற்கு மறுப்பு கூறுவதற்கும் ஏதோ ஒரு நியாயம் இருக்க தான் செய்யும் என்று அவருக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இதை சரி செய்தாக வேண்டும் என்ற எண்ணத்துடன் மெளனமாக சாப்பிட்டார்.

ணவு உண்ண அம்மா வராததே இனியாவிற்கு அவ்வளவு மன வருத்தத்தை கொடுத்தது. திரும்பவும் மனதில் பாரம் ஏற ஆரம்பித்தது.

மனம் பல்வேறு கோணங்களில் எண்ணி எண்ணி அவளை மாற்றி மாற்றி பயமுறுத்தியது. குழப்பியது. அவளால் மேற்கொண்டு என்ன செய்வது என்றே முடிவு செய்ய முடியவில்லை.

ஒரு முறை, இத்தனை நாட்களாக திருமணம் செய்து கொள் என்று கூறிக் கொண்டிருந்த அம்மா இன்று தான் இளவரசனை விரும்பவது தெரிந்தும் இப்படி அதற்கு மறுப்பு கூறுகிறாரே என்று தோன்றியது.

இன்னொரு முறை, ஐயோ அம்மாவை பற்றி தனக்கு தெரியாதா, அத்தைகள் அவ்வளவு கொடுமை செய்த போதும் அவர்களை பற்றி குறை கூறாமல் தன் பங்கிற்கு அவர்களுக்கு பார்த்து பார்த்து செய்து அனுப்பும் அம்மா தன் விசயத்தில் மட்டும் தவறாக நடப்பார்களா என்று அவள் மனம் அவளையே திட்டியது.

டைனிங் டேபிளில் அமர்ந்தவாறே சாப்பிடாமல் இவ்வளவையும் யோசித்துக் கொண்டிருந்த இனியாவை பார்த்த ஜோதிக்கு என்ன செய்வது என்று புரியாமல் கவலையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகோபால் ஜோதியை பார்த்து புன்னகைக்க, அவளோ கண்ணால் இனியாவின் நிலையை காட்டினாள்.

நேராக சென்று இளைய மகளின் பக்கத்தில் அமர்ந்த அவர் “இனியா” என்று மென்மையாக அழைத்தார்.

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்த அவள் பின்பு தெளிந்து “என்னப்பா” என்றாள்.

“தேவை இல்லாம கவலை படாதம்மா” என்றார்.

அவரின் வார்த்தைகளை கேட்டும் நம்பிக்கை பெற இயலாத இனியாவிற்கு அவ்வளவு நேரம் இருந்த குழப்பங்களும் சேர்ந்து கொள்ள “அப்பா” என்று அழைத்தவாறே அவர் தோள் மேல் சாய்ந்து கொண்டு கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

ராஜகோபால் உடனே பதறி போனார்.

அவரும் ஜோதியும் என்னென்னவோ கூறியும் அவளை சமாதனம் செய்ய இயலவில்லை.

அவர்கள் கூறுவது எதுவும் இனியாவின் காதுகளுக்கு சென்றடையவே இல்லை. அவள் கண்கள் மட்டும் அதன் பணியை சரியாக செய்து கொண்டிருந்தது.

ஓரளவு பொறுத்து பார்த்து முடியாமல் அவள் முகத்தை நேராக நிமிர்த்தி “இனியா இனியா என்னை பாரு. நான் சொல்றது புரியுதா.” என்று கூறினார்.

சில நிமிடங்கள் கழித்து தான் இனியா சுய நினைவு பெற்றவளாக தந்தை சொல்வதை கவனித்தாள்.

“எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை மத்த எல்லா விசயத்தையும் விட முக்கியம். எனக்கு உன் மனசு தெரிஞ்சி தான் நான் அன்னைக்கு நீயே இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்ன உடனே நல்லா யோசிம்மான்னு சொன்னேன். எனக்கு நல்லா தெரியும் உனக்கு இளவரசனை தான் பிடிக்கும்ன்னு. நீ அன்னைக்கு எதுவுமே சொல்லாம அமைதியா இருந்திருக்கலாம். நானே பேசி கல்யாணத்தையும் முடிவு பண்ணியிருப்பேன். உங்க அம்மாவால கூட அப்ப ஒரு லெவல்க்கு மேல ஏதும் சொல்லி இருக்க முடியாது. ஆனா நீயே நடுவுல வந்து இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லி உங்க அம்மாவுக்கு இன்னும் தைரியம் கொடுத்துட்ட. இப்ப அது தான் பிரச்சனையே”

“இது தான்ப்பா பிரச்சனை. எனக்கு அம்மாக்கு பிடிக்காம இந்த கல்யாணத்தை பண்ணிக்கறதுல இஷ்டம் இல்லை. அத்தையும் வேண்டாம்ன்னு சொன்னாங்க. அம்மாவும் அப்படி தான் சொன்னாங்க. ஆனா நீங்க எல்லாத்தையும் மீறி கல்யாணத்துக்கு அவசர பட்டீங்க. அந்த டைம்ல அவசர அவசரமா ஏதும் நடக்காம இருக்க நான் அப்படி சொல்லிட்டேன். ஒரு அம்மாவா அவங்களோட விருப்பம் என் கல்யாணத்துல ரொம்ப முக்கியம்ப்பா” 

சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர் “நீ சொல்றது புரியுதும்மா. உன் அம்மா உன்னை நல்லா வளர்த்திருக்கா. நீ சொல்ற மாதிரியே உன் அம்மாவோட முழு விருப்பத்தோட உன் கல்யாணம் நடக்கும். இதுக்கு நான் காரன்ட்டி. சின்ன வயசுல இருந்தே இது வேணும், அது வேணும்ன்னு நீ என் கிட்ட கேட்கறதை விட்டுட்ட. அதுல எனக்கு எவ்வளவு வருத்தம் தெரியுமா. இப்ப ஒரு அப்பாவா உன் ஆசையை இதுல நிறைவேத்தி நான் சந்தோசப் படப் போறேன்” என்றார்.

இனியாவிற்கும் இதை எல்லாம் கேட்கும் போது சந்தோசமாக இருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ வருத்தமாகவே இருந்தது. வருத்தத்தை விட எல்லாம் சரியாக நடக்குமா என்ற பயம் இருந்தது.

ஆரம்பத்தில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை வந்துக் கொண்டே இருக்கிறது. ஒரு வழியில் இவர்கள் இருவருக்குள் பிரச்சனை, இல்லை என்றால் இப்படி பெரியவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் இந்த திருமணம் வேண்டாம் என்று. என்ன செய்து தான் எல்லாவற்றையும் சரி செய்வது என்று திரும்ப யோசித்து யோசித்து முடிவுக்கு வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இளவரசன் மட்டும் தான் தனக்கு கணவனாக வர முடியும் என்பது தான் அது.

சரியாக அந்த நேரத்தில் தான் இளவரசன் போன் செய்தான். போனை பார்த்த மாத்திரத்தில் எடுத்து விட்ட அவளால் பேச தான் முடியவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.