(Reading time: 13 - 26 minutes)

ணி காலை ஒன்பதரை. ஸ்வேதா இன்னமும் வந்திருக்கவில்லை

சந்தேகம் .மனதை அரித்துக்கொண்டிருக்க, அர்ச்சனாவின் அலுவலக எண்ணை அவள் அப்பாவிடம் வாங்கி, கைபேசியை அழுத்தினான் விவேக்.

'அர்ச்சனா ஆபீஸ் வரலியே' என்று வந்தது பதில்

'மிஸ்டர் வசந்த் வந்திருக்காரா?' கேட்டான் விவேக்.

'அவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடிச்சு சார்.  ஹாஸ்பிடல்லே இருக்கார்.'என்றது மறுமுனை.

மௌனமாய் கைப்பேசியை துண்டித்தான். அவன் மருத்துவமனையில் இருக்கிறான். அவனருகில் அமர்ந்திருக்கிறாளா இவள்?

அவளை அங்கிருந்து உடனே கிளப்பி விட வேண்டுமென்றே தோன்றியது விவேக்கிற்கு.

அங்கே வந்த அவள் அப்பாவிடம் மெல்ல கேட்டான் விவேக்,

'அர்ச்சனா ஏன் வரலியாம் அங்கிள்?

'ஏதோ ஆபீஸ் வேலைன்னு சொன்னாளே. என்றார் அப்பா.

இப்போதான் அவங்க ஆபிஸ்லே கேட்டேன். அங்கே வரலியாமே அவ என்றான் அவர் முகத்தை ஆராய்ந்துக்கொண்டே, யாரோ அவ ஃப்ரெண்ட்க்கு ஆக்சிடென்ட் ஆயிடிச்சாம். ஹாஸ்பிடல் போயிருப்பான்னு நினைக்கிறன்.

எந்த ஃப்ரெண்ட்? நிமிர்ந்தார் அப்பா.

தெரியலை. யாரோ வசந்தாமே? என்றபடியே எதுவுமே தெரியாதவனாய் நகர்ந்தான் விவேக்.

திகைத்துபோனார் அப்பா. அடுத்த நொடி அவள் எண்ணை அழுத்தினார்.

'எங்கேமா இருக்கே?

'ஆஃபிஸ்லே தான் பா' எதையுமே யோசித்து பேசும் மனமில்லாமல்  சொன்னாள் அர்ச்சனா.

'அவருக்குள்ளே தகித்தது. 'பொய் சொல்கிறாளா என் மகள்'?

'வேலையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நீ கிளம்பி வா முதல்லே' என்றார் சற்று காரமான குரலில்

மனமில்லை. வசந்தை இந்த நிலையில் விட்டு செல்லவதற்கு சத்தியமாய் மனமில்லை அர்ச்சனாவுக்கு.

'என்னையே நினைத்துக்கொண்டு, எனக்காகவே சுவாசித்துக்கொண்டிருக்கும் ஒருவன் நினைவில்லாமல் கிடக்கும் நேரத்தில், சந்தோஷமாக பிறந்தநாள் கொண்டாடும் அளவுக்கு நான் இன்னும் தரம் தாழ்ந்து விடவில்லை'

'இப்போ கண்டிப்பா முடியாதுபா.' என்றாள் உறுதியான குரலில்.

அவள் குரலில் இருந்த உறுதி அப்பாவை உலுக்கியது. அப்போ வரமாட்டேன்னு சொல்றே. அப்படிதானே?

'நான் அப்படி சொல்லலலைப்பா. இப்போ உடனே முடியாதுப்பா .ப்ளீஸ்பா' கெஞ்சியது அவள் குரல்.

'இப்போ நீ உடனே கிளம்பலேனா,  அப்பாவை பார்க்க எப்பவுமே வரவேண்டாம்'

'அப்பா...........' அவள் எதோ சொல்ல துவங்குவதற்குள்  துண்டித்து விட்டிருந்தார் அழைப்பை.

இனி எந்த சமாதானத்தையும் காதுக்கொடுத்து கேட்க மாட்டார் அப்பா. இப்போது போகா விட்டால் அவர் கோபம் பல நாட்கள் நீடிக்கும். தெரியும் அர்ச்சனாவுக்கு

கைபேசியை கீழே வைத்து விட்டு ,தன் கைகளுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு அமர்ந்தவளின் கண்முன்னால் வசந்தின் முகம் வந்தது. மனம் ஏனோ அழுந்தியது.

எப்படி அவனால் என் மீது அன்பை மட்டுமே பொழிய முடிகிறது?

'பெங்களூர் வந்த நிமிடம் துவங்கி நான் உன்னை எத்தனை காயப்படுத்திக்கொண்டிருக்கிறேன். இன்னமும் என்னை பார்த்து புன்னகைக்கிறாயே, நேற்று அந்த வலியிலும், என் கண்ணீரை துடைத்தாயே, பைத்தியக்காரா. உன்னை இந்த நிலையில் எப்படியடா விட்டு செல்வேன்.?

ணி காலை பத்தரையை நெருங்கிவிட்டிருந்தது. சென்னையில் அப்பாவின் மனம் அர்ச்சனாவை நினைத்து கொதித்துக்கொண்டிருந்தது.

அதே நேரத்தில் பெங்களூரில் அர்ச்சனாவின் மனம் வசந்தை நினைத்து துடித்துக்கொண்டிருந்தது. 'எப்படியாவது கண் விழித்து விட மாட்டனா வசந்த்?

ஏனோ அவனை பார்க்கவேண்டும் போலிருந்தது.

அறையை விட்டு வெளியே வந்தவளின் கண்ணில் மனோ  தென்படவில்லை.

வெளியே நின்ற நர்ஸிடம் எப்படியோ அனுமதி வாங்கிக்கொண்டு வசந்த் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள் அர்ச்சனா.

யாருமே இல்லாத அந்த சின்ன அறையில், கட்டில் மேலே, நெற்றியை சுற்றிக்கட்டுடன் கண்மூடிபடுத்துக்கிடந்தான் வசந்த். அவன் இடது கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.

'அவனை எப்போதும் புன்னகை நிறைந்த முகத்துடனே பார்த்து பழகிய அர்ச்சனாவுக்கு, அந்த நிலையில் பார்க்க மனம் ரொம்பவே வலித்தது.

'எழுந்திரு வசந்த் உன்னை இப்படி பார்க்க  ரொம்ப கஷ்டமா இருக்கு' மெல்ல சொன்னாள் அர்ச்சனா

அவனருகே அமர்ந்தவள், கண் இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்

அவனை சந்தித்த நாள் முதல் நடந்தவை எல்லாம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தன.

எந்த நிலையிலும், எல்லா நேரத்திலும் என்னை மனதார நேசித்திருக்கிறான் வசந்த் .நான் அவனுக்காக என்ன செய்திருக்கிறேன்? அந்த நேசத்தை அனுபவிக்க மட்டுமே செய்திருக்கிறேனா?

அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளின் மனம் மற்ற எல்லாவற்றையும் மறந்து அவனுக்காகவே தவித்துக்கொண்டிருந்தது. .

அவனது வலக்கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டாள் அர்ச்சனா. அந்த நிமிடம் மனதில் வசந்தை வேறெதுவுமே இல்லை. மனதார உச்சரித்தாள் அவன் பேரை வ..ச..ந்த்.

இதமான தென்றல் வருடுவதைப்போல் அவன் கையை மெல்ல அழுத்தித்கொடுத்தாள் அர்ச்சனா.

சில நொடிகள் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள், மெல்ல எழுந்தாள்.

அவளுக்குளிருந்த நிஜமான நேசம் அவளை செலுத்தியது. மனதிற்குள் வசந்தை தவிர வேறெதுவுமே இல்லாத நிலையில், அவனுக்கு அவள் கொடுத்த எல்லா காயத்திற்கும் மருந்தாய், அவன் அவள் மேலே செலுத்திய நேசத்திற்கெல்லாம் பதிலான சிறு துளியாய், அவள் மனதில் நிறைந்திருந்த நேசத்தின் இதமான வெளிப்பாடாய், அவன் நெற்றியை சுற்றியிருந்த  கட்டை சற்று விலக்கி,  அழுத்தமாய் இதழ் பதித்தாள் அர்ச்சனா.

அவள் மனம் மொத்தமாய் நிறைந்துவிட்டதை போலே உணர்ந்தாள்.

அதுவரை சும்மா இருந்த அவள் கண்கள் சரேலென்று நிரம்பி விட்டிருந்தன.

இதமான, மென்மையான குரலில் சொன்னாள் 'ப்ளீஸ் எனக்காக எழுந்திரு வசந்த்'

சில நொடிகள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவனிடத்தில் சின்னதாய் ஏதோ ஒரு அசைவு தெரிந்தது  அவளுக்கு.

இனி எழுந்துவிடுவான் கண்களை திறந்து விடுவான். சட்டென்று மனம் முழுவதும் பரவிய நம்பிக்கையில், கண்களை துடைத்துக்கொண்டு சட்டென்று வெளியே வந்துவிட்டிருந்தாள் அர்ச்சனா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.