(Reading time: 43 - 85 minutes)

ந்தியா பூமா வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஓடி விட்டது. பூமாவுடன்  சேர்ந்து ஓவியம் வரைய, அரட்டை அடிக்க, குணா சமையலை கலாய்க்க என்று முற்றிலும் மாறுபட்ட உலகம்.... சூர்யா வார விடுமுறையில் ஒரு நாள் பாஸ்டனில் இருந்து குடும்பத்துடன் அவர்களைப் பார்க்க வந்தான். இவர்களும் ஒரு முறை சூர்யா வீட்டிற்கு சென்றனர். கார்த்திக் போனில், ஸ்கைப்பில் தொடர்பில் இருந்தாலும் அவன் அருகாமையை  இவள் மனம் தேடியது....

ஒரு நாள் சரண் அவளிடம், கார்த்திக் சண்டை போட வந்தது, போலீஸ்சை அழைக்க முயலும் பொழுதே பூமாவிற்கு படபடப்பு வந்து மயங்கி விழுந்தது, அதைக் கண்டு கார்த்திக் பதறி, தன்னிடம் மன்னிப்பு கேட்டது என விலாவாரியாக சொன்னவன்,

“கார்த்திக் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறார்னு எனக்கும்  பூமாக்கும் புரிந்தது. ஆனா, உன் விருப்பத்தையும் தெரிய திட்டம் போட்டோம். அது ஒர்க் அவுட் ஆன அடுத்த நாளே கார்த்திக் போன் பண்ணி, அவ குணத்திற்கு நான் எந்த விதத்திலயும் தகுதி ஆனவன் இல்லை. எனக்காக அவகிட்ட பேசாதீங்கன்னு உடைந்து போய்  சொன்னார்.”  என்றான் சரண்...

“அப்படி என்னத்தை எழுதிட்டேன் அந்த லவ் லெட்டர்ல” என நினைத்தாள் அவள்...

சரணின் காதலி நேகா மகப்பேறு மருத்துவர்.... வார விடுமுறையில் தொண்டு செய்ய செல்லும் தன்னார்வ நிறுவனத்திற்கு சந்தியாவையும் அழைத்து  சென்றாள். அது பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி அளிக்கும் சேவை. நேகா அதைப் பற்றி பேசும்  பொழுதே கண் கலங்கி, தனக்கு நேர்ந்ததை சொல்ல மனம் திறந்தாள்.....அவள் வருத்தத்தை கேட்டு நேகா சிரித்தாள்.

“உனக்கு நடந்தது ஒன்னுமே இல்லை. இங்க ஐந்து, ஆறு வயசு குழந்தைங்க வாழ்க்கையே பாழாகி கிடக்கு. என்கிட்ட சிகிச்சைக்கு வர்றவங்களுக்கு நேர்ந்த கொடுமையெல்லாம் கேட்டா நீ தாங்க மாட்ட சந்தியா....நீ நல்ல பொண்ணு. உனக்கு பெரிய கஷ்டம் கடவுள் கொடுக்க மாட்டார். ஒருத்தன் உன்கிட்ட தப்பா நடக்க ஆரம்பித்தவுடனே தண்டித்து விட்டார் பார்த்தியா? அதோட விட்டாரா உன்னை ஆக்சிடென்ட்ல சிக்கல் இல்லாம காப்பாத்தி இருக்கார்...உனக்கு தெரியாது. விபத்தில் இழப்பு ஏற்பட்டா...நம்மை நம்பி இருக்கிறவங்க அதில் இருந்து மீள்வது கடினம்... ” என்ற பொழுது,

மனதில் கார்த்திக் தான் வந்தான். தாய் தந்தையரைக் கூட நினைக்கவில்லை...சொல்லி முடிக்கும் பொழுது நேகா உடைந்தாள்....அவள் தாய் தந்தையரை நினைத்து....அவளுக்கு சமாதானம் சொல்லி தேற்றினாள் சந்தியா.

”நம்ம கைமீறி நடப்பவைக்கு நாம பொறுப்பல்ல...ஆனா நமது கைகளுக்குள் உள்ள சந்தோஷத்திற்கு நாம தான் பொறுப்பு” என்று தானே முழுமையாக உணராத வாக்கியத்தை சொல்லி ஆறுதல் படுத்தினாள்.... சில விஷயங்கள் புத்திக்கு எட்டும்.....மனதிற்கு எட்டாது....காலமும், காட்சிகளும்  தான் புத்திக்கும் மனதிற்கும் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்யும்....

ந்தியாவிடம் பேசிய மறு நாளே அவளை தோழி ஒருவர் வீட்டிற்கு அழைத்து சென்றாள் நேகா. அமெரிக்க பெண்மணியான அவர் பேரன் பேத்திகளை எல்லாம் எடுத்து ஐம்பதுகளில் இருந்தார். பேச்சினிடையே அவரைப் பற்றி அறிந்து அதிசயத்தாள் சந்தியா.

அவரது விவரம் தெரியாத வயதில் அவரது உறவினராலே பாலியில் கொடுமைகளை அனுபவித்து வாழ்க்கையை வெறுத்து பல மன நோய்களுக்கு உள்ளாகி இருந்திருக்கிறார். மகளின் போக்கில் இருந்து மாற்றத்தை உணர்ந்து விசாரித்து உண்மை அறிந்த பெற்றோர்கள் ஆடிப் போய் விட்டனர். பின்னர், பல வருடங்கள்  அவர்கள் கொடுத்த ஊக்கம், பயிற்சி, அதன் பின் கடவுள் கொடுத்த நல்ல காதலன் இதனால் தொலைத்த வாழ்க்கை மீண்டது என்றார்.

சந்தியா அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமானாள். அவரும் அவள் ஆர்வத்தை உணர்ந்து சொன்னார்.

“ஒரு ப்ரிச்சனையில் இருந்து வெளியில் வர இரு வழிகள்... ஒன்று அதை மறந்து விடணும். இல்லாவிட்டால் துணிந்து அதோடு போராடி வெற்றி கொள்ள வேண்டும். நான் செய்தது இரண்டாம் வழி.”

“பாலியில் தொல்லையால் பாதிக்கப் பட்டோருக்கு ஆலோசனை அளிக்கும் வேலையை  தேர்ந்தெடுத்தேன். வேலையில் சேர்ந்த புதிதில்  என்னிடம் ஆலோசிக்க வருபவர்கள் தங்கள் துன்பங்களை சொல்லும் பொழுது எனக்கும்  அந்த கசப்பான நினைவுகள் வந்து கை கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். எதுவுமே செய்ய முடியாமல் திணறிப் போய் விடுவேன். ஆனால், அதை என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவரிடம் நம் உணர்ச்சிகளை வெளிக்காட்டிடவே கூடாது! அதனால் மிக மிக கடினப் பட்டு என்னை ஒருமுகப்படுத்துவேன். ஆனால், எனது வேலையில் அனுபவம் கிடைக்க கிடைக்க என் மனதும் பக்குவமடைந்து விட்டது. உன்னைப் பற்றி நேகா எல்லாம் சொல்லி விட்டாள். உனக்கு சில பயிற்சிகளை தருகிறேன். அதை செய்தாலே போதும். நீ இழந்த self esteemஐ மீட்பாய். பெண்கள் வலிமையானவர்கள்!” என்று தெம்பாக சொன்னார்.

அவரிடம் பேசியதே சந்தியாவிற்கு புது உற்சாகத்தை அளித்தது! அவர் வீட்டை விட்டு கிளம்பும் முன் அவளை தன்னோடு அணைத்து, “கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்”, என்று நெற்றியில் சிலவை போட்டு அனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன பயிற்சிகளில் ஒன்று கடந்த சில ஆண்டுகளில் அவளுக்கு நடத்த நல்லதையும், கெட்டதையும் எழுதுவது... வீட்டிற்கு திரும்பியவள் அவர் சொன்னது போல எழுதி பார்த்தாள். அதை எழுதி முடித்த பின்னர் உணர்ந்தாள்... அவளுக்கு நடந்தது அத்தனையும் நல்லதே! அந்த சம்பவத்தை தவிர!

“என் முருகன் எனக்கு நல்லதை தானே செய்வான்! அந்த கெட்டது கூட ஏதோ நல்லதிற்கோ!!” என்று முதல் முறையாக முருகனிடம் சண்டை பிடிக்காமல் சமாதானமாக பேசினாள். 

நாட்கள் உருண்டோடின. பூமாவிற்கு நிறை மாதம். வளைகாப்பு அவளுக்கு தெரியாமல் ஏற்பாடு செய்தனர்.... அதற்கு  நடனமாட  சரணும், சந்தியாவும் ஆடிப் பழக, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  நேகாவையும் அவர்களுடன் ஆட வைத்தனர்..... வளைகாப்பிற்கு திடீர் என வந்திறங்கி இன்ப அதிர்ச்சி அளித்தான் கார்த்திக்.

அவனைக் நேரில் கண்டதும் பூரிப்பில் மிதந்தாள். களையிழந்த முகத்தில் புது வரவாக மீசையும், குறுந்தாடியும்!  

பூமாவிற்கு வளையல் போட்ட பின், கார்த்திக்கும் மீராவும் சேர்ந்து “காலையில் தினமும்” பாடலைப் பாடினர். பின், மீரா “கண்ட நாள் முதல்” என்ற முருகன் பாடலை பாடினாள். சந்தியாவை தன் கூட பாட அழைத்தான்.. இருவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்தனர்...

என்னை பந்தாட பிறந்தவளே

இதயம் ரெண்டாக பிளந்தவளே

என அவன் பாட,

இனியவனே என் இனியவனே என்று ஆரம்பித்தவள்,

மூக்கு மீது மூக்கு வைத்து நெற்றி முட்டிவிட வாராய்

எனும் பொழுது அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அதற்கு மேல் பாட முடியவில்லை... அப்பொழுதும் “முழு பாட்டை நீ பாடி இருந்தா, சித்ரவதை தாங்காம பூமா அண்ணி குட்டி வெளிய ஓடி  வந்திருக்கும்” என சீண்டி சிரிக்க வைத்தான்..

நடனமாட ஆயத்தமான பொழுது, சரண் கார்த்திக்கையும் உடன் ஆட அழைக்க கார்த்திக்   உணர்ச்சி வசப்பட்டு ஆடி கால் சுளுக்கி கொண்டது....அவன் நொண்டி நடப்பதை பார்த்து  “ஆட்டு குட்டி முட்டையிட்டு” என்று முன்னர் அவன் கிண்டலடித்ததையே அவனுக்கு திருப்பி, சிரித்தாள் வெகு நேரம்! வெகு நாள் கழித்து!

அன்றிரவு தன்ராஜின் அனுமதியுடன் உணவகத்திற்கு என்று டிஸ்கோத்தேவிற்கு கூட்டி சென்றான். அதைக் கண்டு திடுக்கிட்டு,

“மதியம் தானே கால் சுளுக்கியது. எதுக்கு வீண் முயற்சி!”

என்றவளை   சட்டை செய்யாமல் தன்னுடன் நடனமாட அழைத்துச் சென்றான்.

“சகுனி, இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை....சென்னைக்கு வந்த மாதிரி  எனக்கு சமைத்து போடவாவது வந்துடுவன்னு  நினைத்தேன்... இரண்டு மாசம் சங்கட பட வைத்துட்ட”, என்றாள் கோபமாக. சுற்றியிருந்த கூச்சல் சத்தத்தையும் முறியடிக்கும் தொனியில். அதைக் கண்டு புன்னகைத்தவன்,

“வள்ளிக்கண்ணுவை விட்டுட்டு இருக்க முடியாது தான். இங்க வரலாம்னு நினைத்தப்போ, அப்பாவுக்கு கேன்சர் பரவுற அறிகுறின்னு  டாக்டர் குண்டை தூக்கி போட்டார். பயாப்சி எல்லாம் பார்த்து ஒன்னும் இல்லைன்ன பிறகு தான் உயிரே வந்தது!” என்றான் அவள் காதருகில் வந்து....சுற்றியிருந்த சத்தத்திலும் தெளிவாக கேட்கும் பொருட்டு.

அதைக் கேட்டவுடன் அதிர்ந்தவள் கூட்டத்திலிருந்து விலகி அங்கு ஓரத்தில் இருந்த ஒரு இருக்கைக்கு அழைத்து சென்று, சதாசிவத்திற்கு ஒன்றும் இல்லை என மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்ட பின்,  இதைப் பற்றி தன்னிடம் சொல்லவில்லை என மீண்டும் கோபப்பட,

“டாக்டர் சொன்னப்போ எனக்கு இருந்த கவலைக்கு உன் மடியில் படுத்து அழணும் போல தான் இருந்ததுடா!” என்றான் குரல் தழுதழுக்க

அவன் சொன்னதும் அவனை ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது அவளுக்கு!

“லூசாடா நீ....நினைத்ததை செய்திருக்க வேண்டியது தானே.....உன் கஷ்டத்தில் எனக்கும் பங்கிருக்கு” என்றாள் காட்டமாக.

அவளின் மாற்றத்தை ரசித்தவன் அவள் கன்னத்தை கிள்ளி, “ஹ்ம்ம்.....வள்ளிக் கண்ணு எத்தனை நாள் கழித்து கோபப்பட்டு இருக்கு! என் பேய் பார்ம்க்கு வர ஆரம்பித்து விட்டது.. ஒரு வாரம் இருந்து ரசித்து விட்டு போறேன்” என்றான் ரகசிய புன்னகையுடன்.

கார்த்திக், இந்தியா கிளம்புவதற்கு முந்தைய நாள் தீபாவளி. அன்று காலையில் சந்தியா குடும்பத்தார் கோவிலுக்கு சென்று  திரும்பும் வழியில் பூமாவிற்கு வலி வர, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டாள். மருத்துவமனையில் வலி தெரியாமல் பிரசவிக்க பூமாவிடம் ‘எபிடோரல்’ எடுக்கலாம் என அவளிடம் சொன்ன மருத்துவரிடம்,

“பிள்ளை இல்லாத வலியை விட பிள்ளை வலியை தாங்கிடுவேன்” என்று மறுத்து விட்டாள்.....பிரசவத்தை பார்க்க குணாவையும், லக்ஷ்மியையும்  அனுமதித்தனர்...உடன் நேகாவும் இருந்தாள்.... பூமா  வலியில் துடிப்பதை பார்க்க முடியாமல் லஷ்மிக்கு படபடப்பு வர அவர் வெளியில் வந்தார். சந்தியாவிற்கு இருப்பு கொள்ளவில்லை.

 “நீ பயந்துடுவ... வேண்டாம்” என்று சொன்னவரிடம் அடம்பிடித்து அனுமதி வாங்கி உள்ளே சென்று பார்த்தாள். முதல் முறையாக மகப்பேற்றை கண் முன்னே சிலிர்ப்புடன்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.