(Reading time: 13 - 25 minutes)

பேச வார்த்தைகளற்று போனவனாய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான் மனோ

துளியிலும் துளிக்கூட சுயநலமே இல்லாமல் அவள் மீது இப்படி ஒரு நேசமா?

மறுபடி ஒலித்தது மனோவின் கைப்பேசி. அர்ச்சனாதான் அழைத்திருந்தாள்.

அதன் திரையையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தவன், மறுபடி அழைப்பை துண்டித்து கைபேசியை கட்டிலின் மீது போட்டு விட்டு, பெருமூச்சுடன் தன் முகத்தை கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அமர்ந்தான்.

சில நிமிட மௌனத்திற்கு பிறகு சகஜ நிலைக்கு வந்தவனாய்  அவன் அருகே வந்தமர்ந்தான் வசந்த்.

'எனக்கு அடி பட்ட விஷயத்தை அனுக்கு சொன்னியாடா?

'சட்டென்று நிமிர்ந்தான் மனோ. 'இல்லையேடா. அது பதறிட்டு ஓடி வருமேன்னு யோசிச்சிட்டிருந்தேன்' இப்போ சொல்லவா?

'வேண்டாம். நானே டெல்லி கிளம்பறேன் .அனு என்னை பார்க்கணும் போலே இருக்குன்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கா. போய் அவளை பார்த்துட்டு, ஒரு பத்து, பதினைஞ்சு நாள் இருந்திட்டு வரேன் அப்படியே அங்கே ஐ ஐ டிலே, என் பி.எச் டி வேலையையும் கொஞ்சம் பார்த்தா மாதிரி இருக்கும்..'

அந்த யோசனை சரியென்றே தோன்றியது மனோவிற்கு. அவன் மனதிற்கு ஒரு மாறுதல் கிடைக்கும்.  

னம் நிலையில்லாமல் சுழன்றுக்கொண்டிருந்தது அர்ச்சனாவுக்கு. மனதில் இருந்த அழுத்ததில், அவள் அப்பா எங்கே என்று அவள் யோசிக்கவேயில்லை.

சற்று தள்ளியே இருந்தாலும் விவேக்கின் பார்வை அவள் மீதே இருந்தது. கைப்பேசியையே திரும்ப திரும்ப அழுத்திக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

திரும்ப திரும்ப வசந்துக்க்காகவே தவித்து கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.  மனம் பற்றி எரிந்தது.

பார்ட்டி நடக்கும் ஹாலை விட்டு வெளியேறி, ஹோடேலின் மாடியில் இருக்கும் அறைக்குள் நுழைந்த அர்ச்சனாவை  பின்தொடர்ந்து மேலே ஏறினான் விவேக்.

தன் கைப்பையை வெளியே வைத்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள் அர்ச்சனா.

அவள் உள்ளே நுழைந்ததும், அவள் கைப்பையை எடுத்தான் விவேக்.

'என்ன சொல்ல போகிறாராம் அந்த டாக்டர்? வேண்டாம் அவர் எதுவும் சொல்ல வேண்டாம்.

அவர் ஏதாவது சொன்னால் அவள் மனம் வசந்துக்காக இன்னும் கொஞ்சம் தவித்து உருகாதா?

வேண்டாம். அவள் மனம் வசந்தை விட்டு விலக வேண்டும். அவனை நெருங்கக்கூடாது.

அந்த கைப்பையின்  உள்ளே இருந்த டாக்டர் சிதம்பரம் கொடுத்த அந்த அட்டையை, எடுத்து, கிழித்து குப்பையில் போட்டு விட்டு, எதுவுமே நடவாதது போல் அந்த அறையை விட்டு வெளியேறினான் விவேக்..

முகத்தை கழுவி துடைத்துக்கொண்டு வெளியே வந்தவளின் மனம் அப்போதுதான் அவள் அப்பாவை நோக்கி திரும்பியது.

அப்பா எங்கே? கைப்பேசியை எடுத்து அவள் எண்ணை அழுத்தினாள் அர்ச்சனா. அழைப்பை ஏற்கவில்லை அவர்.

'எங்கே போனார் இவர்? யோசித்தபடியே கீழே இறங்கினாள் அர்ச்சனா.

அப்போது எதிர்பட்டாள் ஸ்வேதா.

'எங்கப்பா எங்கே ஸ்வேதா?

'நீங்க வந்ததுமே அவர் வீட்டுக்கு கிளம்பி போயிட்டார்' என்றாள் ஸ்வேதா. வசந்த்துக்கு அடி பட்ட விஷயம் அவருக்கு தெரிஞ்சு போச்சு. நீங்க காலையிலேயே கிளம்பி வராம வசந்த் கூடவே இருந்தது அவருக்கு ரொம்ப கோவம்.

சோர்ந்தே போனாள் அர்ச்சனா. 'இறைவா. நான் இப்போது அவரை எப்படி சமாதான படுத்துவது.?'

வீட்டிற்கு போய் கட்டிலில் சாய்ந்தார் அப்பா.

மனதால் சோர்ந்து போயிருந்தார் அப்பா. ஏனோ அவர் மகள் அவரை விட்டு தள்ளி தள்ளி போய்க்கொண்டிருப்பதைபோல் தோன்றியது அவருக்கு.

அர்ச்சனா அவருடைய ஒரே மகள். அவளுடைய ஐந்தாவது வயதில் அவள் அம்மா அவர்களை விட்டு போன பிறகு அவருக்கு எல்லாமே அர்ச்சனாதான்.

அவள் என் சுவாசம். அவள் என்னை விட்டு போய் விடக்கூடாது என்று நான் நினைப்பது பேராசையா? தன்னை தானே கேட்டுக்கொண்டார் அப்பா.

எங்கிருந்தோ திடீரென்று வந்த வசந்த் எப்படி அவளிடம் உரிமை கொண்டாடலாம்?

ஆரம்பத்திலிருந்தே அவனை அவருக்கு பிடிக்கவில்லை. அவனை மாப்பிள்ளையாய் என்றுமே நினைத்ததில்லை அவர். அவர்கள் நிச்சியதார்த்தமே நடக்க வேண்டாம் என்று தான் யோசித்தார்.

பழைய நினைவுகளில் அவர் மனம் மூழ்கியது.

னோ நிச்சியதார்த்தம் முடிந்து கிளம்பி கொண்டிருந்தார் அர்ச்சனாவின் அப்பா.

அப்போது அர்ச்சனா அருகில் இல்லை.

'உன் மாப்பிளைகிட்டே சொல்லிட்டு கிளம்புடா என்றார் மனோவின் அப்பா.

'இன்னும் நிச்சயதார்த்தமே நடக்கலை. இன்னும் நிறைய டைம் இருக்கு. நடுவிலே என்ன வேணும்னாலும் நடக்கலாம். அதுக்குள்ளே என்ன மாப்பிள்ளை? அவர் மனதில் இருந்தது சட்டென்று வெளியே வந்துவிட்டிருந்தது.

அங்கேதான் நின்றிருந்தனர் மனோவும் வசந்தும். வசந்தின் முகம் மெல்ல மாற, சற்று கொதித்து போனான் மனோ.

தொண்டையை சற்று செருமிக்கொண்ட மனோ அழுத்தமான குரலில் சொன்னான் 'ஆமாமாம். எனக்கு கூட நிச்சியதார்த்தம் மட்டும் தான் முடிஞ்சிருக்கு. இன்னும் கல்யாணத்துக்கு நிறைய டைம் இருக்கு. அதுக்குள்ளே கூட என்ன வேணும்னாலும் நடக்கலாம்.'

சற்று திடுக்கிட்டு போனார்  அர்ச்சனாவின் அப்பா. என்ன சொல்ல வருகிறான் மனோ. இந்த திருமணம் நின்றால் அந்த திருமணமும் நின்று விடுமென்றா?

அவரே முன்னின்று ஏற்பாடு செய்த திருமணம் நின்று போவதை விரும்பவில்லை அவர்.

அதன் பின்னர் ஸ்வேதாவின் அப்பாவுக்கு  பதில் சொல்ல இயலாது என்பதும் அவருக்கு தெரியும்.

வேறு வழயில்லாமல் அர்ச்சனாவின் நிச்சியதார்த்ததுக்கு ஏற்பாடு செய்தார் அப்பா. மிக எளிமையாக வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார் அப்பா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.