(Reading time: 9 - 18 minutes)

12. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா 

மனதிலே ஒரு பாட்டு

சுவாசிக்க கூட மறந்தவனாய் அப்படியே நின்றுவிட்டிருந்தான் விவேக். அவள் இப்படி வந்து நிற்பாள் என்று துளியும் நினைக்கவில்லை அவன்.

விரிந்திருந்த கண்களுக்குள் ஆத்திரமும்,கண்ணீரும் கலந்து நிற்க, அவள் பார்த்த பார்வை அவனை உலுக்கியது

'அவளை கல்யாணம் பண்ணி உன் கண்ணு முன்னாடியே அவ கூட வாழ்ந்து காட்டறேன்' அந்த வார்த்தைகள் அவள் இதயத்தை கூறு போட்டது போலிருந்தது.

வசந்தை காயப்படுத்தி, அவன் கண் முன்னால் என்னுடன் வாழ்வது இவன் லட்சியமா?  'ச்சே. இப்படி பட்ட நான்காம் தர வில்லனா இவன்?

மனம் மொத்தமாய் கொதித்து போக அவள் கைகெட்டும் தூரத்தில் நின்றிருந்தவனின் சட்டையை ஒரு நொடி கொத்தாய் பிடித்துவிட்டிருந்தாள் அர்ச்சனா.

வார்த்தைகள் அற்றுப்போனவனாய், அவள் கண்களை கூட சந்திக்க முடியாதவனாய், நின்றிருந்தவனின் முகத்தை பார்த்தவளின் உடலெங்கும் அறுவெறுப்பு பரவுவது போல் தோன்ற, உதடுகள் தாண்டி  வார்த்தைகள் வெறுப்புடன் வெடித்தன.

'ச்...சீ...... 'இவ்வளவு கேவலமான மனுஷனா நீங்க'?  உங்களை பார்க்கவே அறு....வெறுப்....பா இருக்கு.   

அவள் அந்த வார்த்தைகளை உச்சரித்த விதமும், அவள் கண்கள் காட்டிய வெறுப்புணர்ச்சியையும் தாங்கிக்கொள்ளவே முடியாதவனாய்

அர்... ச்ச.. னா ... ப்ப்...ளீ....ஸ் ..நான்...... குரல் தடுமாற பேசியவனின் எதிரில் கூட நிற்க விரும்பாதவளாய் ,அவனை விட்டு விலகி விறு விறுவென படியிறங்கி சென்றுவிட்டிருந்தாள் அர்ச்சனா.

மொத்தமாய் தோற்று விட்டிருந்தான் விவேக். அந்த நேரத்தில் கைப்பேசியை துண்டிக்க கூட மறந்திருந்தான்.

அர்ச்சனாவின் வார்த்தைகள் மறுமுனையிலிருந்த வசந்தின் காதில் தெளிதவாய் விழுந்திருந்தன.

கைப்பேசியின் திரையையே பார்த்துக்கொண்டிருந்த வசந்த், ஒரு பெருமூச்சுடன் அழைப்பை துண்டித்தான். அருகில் ,மனோ இல்லை. இருந்திருந்தால் மொத்தமாய் கொதித்து போயிருப்பான் என்று தோன்றியது.

'ச்சீ...... 'இவ்வளவு கேவலமான மனுஷனா நீங்க'?  உங்களை பார்க்கவே அறு....வெறுப்....பா இருக்கு'

அந்த வார்த்தைகள் விவேக்கை திரும்ப திரும்ப தாக்கி கொண்டிருந்தன. செயலற்றுப்போனவனாய் தரையில் அப்படியே அமர்ந்தான்.

அவன் இதயம் கதறிக்கொண்டிருந்தது 'என்னை வெறுத்து விடாதே என் தேவதையே'

அவளது வெறுப்பான பார்வையே திரும்ப திரும்ப அவன் கண்முன்னே வந்தது.

பல நூறு வார்த்தைகள் கொடுத்து விட முடியாத வலியை அவளுடைய ஒற்றை பார்வை அவனுள்ளே செலுத்திவிட்டிருந்தது.

கண்களை மூடிக்கொண்டு சுவற்றில் சாய்ந்துக்கொண்டான்.

'நான் செய்தது தவறுதான். அதற்கு காரணம் என் இடத்தை பறித்துக்கொண்டவன் மீதிருந்த பொறாமை. அவன் என்னை ஜெயித்து விடுவானோ என்ற தவிப்பு. அந்த தவிப்புக்கு காரணம் உன் மீதிருந்த நேசமடிப்பெண்ணே. நேசம்.

'பொய் இல்லை. அர்ச்சனா. என் நேசத்தில் ஒரு துளிக்கூட பொய் இல்லை.'

என்ன நினைத்துக்கொண்டிருப்பாள் என்னை பற்றி.? எவ்வளவு கேவலமான எண்ணங்கள் அவளுக்குள்ளே ஓடி கொண்டிருக்கும்.?

தன்னை மறந்து கத்த வேண்டும்போல் இருந்தது. அவனுக்கு 'அர்ச்சனா என் நேசம் பொய் இல்லை தயவுசெய்து புரிந்துக்கொள்.

'இழந்துவிட்டேனா. அவள் என் மீது வைத்திருந்த மரியாதையை இழந்துவிட்டேனா. அவள் என்னை பார்த்து செய்யும் அன்பான புன்னகையை மொத்தமாய் இழந்து விட்டேனா?

மறுபடியும் அவற்றை சம்பாதிக்கவே முடியாதா?

அவன் மனம் திரும்ப திரும்ப அதையே கேட்டுகொண்டிருந்தது.

'என்னை பார்த்து ஒரே ஒரு முறை புன்னகைத்துவிடு என் தேவதையே' மனம் அதையே சொல்லிக்கொண்டிருக்க அசைவில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான் விவேக்.

ர்ச்சனாவின் மனம் நிலையற்றுப்போய் கிடந்தது. கடந்த இருபத்து நான்கு மணிநேரத்துக்குள் அவள் கடந்து வந்த சம்பவங்கள் மனதை துண்டு துண்டாக்கி விட்டிருந்தன.

ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்ந்தாலொழிய உறக்கம் வராது என்று தெளிவாய் புரிந்தது அவளுக்கு.அருகில் ஸ்வேதா அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

மனம் பாரமாய் அழுத்தியது. தலை கனத்தது. மனம் சின்னதானதொரு அரவணைப்புக்காக ஏங்கியது.

இந்த  நொடியில் என் அம்மா இருந்திருந்தால் அவள் மடியில் சாய்ந்து உறங்கியிருப்பேனோ? மனம் சுழன்று அவள் கண்களில் கண்ணீர் சேர்ந்த நொடியில் ஒலித்தது அவள் கைப்பேசி.

ஏதோ ஒரு எண் ஒளிர்ந்தது.  யாராக இருக்கும் என்று யோசித்தபடியே,

'ஹலோ' என்றாள் அர்ச்சனா.

மறுமுனையிலிருந்து பதிலில்லை.

'ஹலோ. அர்ச்சனா பேசறேன்'

பதிலில்லை. மறுமுனையில்  யாருடைய சுவாசமோ கேட்டது.

மனதிற்குள் சட்டென்று ஏதோ ஒன்று குறுகுறுத்தது. 'வசந்தா அது?'

அழைப்பது வசந்தாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

ஏனோ அவனிடம் எதுவுமே பேசவோ எதை பற்றியும் ,கேட்கவோ தோன்றவில்லை அர்ச்சனாவுக்கு. கைப்பேசியை காதில் வைத்துக்கொண்டு ஜன்னலோரம் சென்று நின்று கொண்டாள்.

'திடீரென்று அவன் அருகில் வந்து நின்று விட்டதை போல் தோன்றியது. காரணமே இல்லாமல் மனம் திடீரென்று அமைதியாகிவிட்டதை போல் தோன்றியது. அந்த நிமிடம் நீண்டுக்கொண்டே போகவேண்டும் என்று தோன்றியது.

சில நிமிடங்கள் கழித்து வருடிக்கொடுக்கும் குரலில் அழைத்தான் வசந்த்  'அர்ச்...ச..னா'

அந்த அழைப்பில் அவள் இமைகள் தன்னாலே மூடிக்கொண்டன. நிதானமாய் சுவாசித்தாள்.

.'அர்ச்ச..னா'  என்றான் மறுபடியும்

'ம்' என்றாள்.

அவள் மனம் எத்தனை தளர்ந்து போயிருக்கும் உணர்ந்தவனாய் கேட்டான் 'தூங்கலியாடா  இன்னும்?

ம்ஹூம். தூக்கம் வரலை.

ஏன்? எல்லாரும் சேர்ந்து மண்டைக்குள்ளே மாவாட்டுராங்களா? சிரித்தான் வசந்த்.

'ம்' மெல்ல சிரித்தாள் அர்ச்சனா.

'இந்த பிரச்சனைக்கு நான் ஒரு ஸொல்யூஷன் சொல்லட்டுமா?

ம்  

நம்ம ஆபீஸ் ராஜேஷ் தெரியுமா உனக்கு? அவன் உன்னை பயங்கரமா லவ் பண்றான்னு நினைக்கிறேன்.

என்னது? சட்டென்று திகைத்து போனவளாய் கேட்டாள் அர்ச்சனா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.