(Reading time: 14 - 27 minutes)

16. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா

தே நேரத்தில் டில்லியின் வேறொரு சாலையில் ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்தார் அர்ச்சனாவின் அப்பா.

ஆட்டோ அந்த மருத்துவமனையை கடந்த போது ஏனோ அவருக்குள்ளே சுருக்கென்றது. அந்த மருத்துவமனை அர்ச்சனா மூன்று வருடத்துக்கு முன்னால் இரண்டு நாட்கள் தங்கி இருந்த மருத்துவமனை.

மனம் தன்னை அறியாமல் பழைய நினைவுகளுக்கு பயணித்தது.

மனதிலே ஒரு பாட்டு அர்ச்சனாவுக்கு அடிப்பட்ட அன்று காலை பதினோரு மணியிலிருந்து அவளது கைப்பேசிக்கு முயன்றுக்கொண்டிருந்தார் அப்பா. அழைப்புகள்  எதுவும் பயனளிக்காமல்  போனது.

கீழே விழுந்த வேகத்தில் அவளது கைப்பேசி தெறித்து உடைந்து போனதால் அது இயங்க வில்லை என்பது அப்பாவுக்கு தெரியவில்லை.'

இரண்டு மணி நேரமாக முயன்றும் பதில் இல்லாத நிலையில், மனதில் லேசாக பயம் பரவ துவங்க, அவளது அலுவலக தோழியை அழைத்தார் அப்பா.

என்னம்மா அர்ச்சனா எங்கே?

அவள் பேச பேச அப்பா சற்று பதறித்தான் போனார்.

இப்.....இப்போ எப்படி மா இருக்கா? நீங்க எல்லாரும் அ...வ அவ பக்கத்துலே தான் இருக்கீங்களா?

இல்லை அங்கிள் என்றாள் அவள். எங்கிருந்து வந்தாரோ? அவள் விழுந்த அடுத்த பத்தாவது நிமிஷத்துலே, உங்க மாப்பிள்ளை ஹீரோ மாதிரி வந்து அவளை தூக்கிட்டு போயிட்டார்.

அவர் அவளை பத்திரமா பார்த்துப்பார். உங்க பொண்ணுக்கு ரொம்ப நல்ல மாப்பிளையாய் பார்த்துட்டீங்க இனிமே நீங்க அவளை, அவளை பத்தின கவலை எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியாய் இருக்கலாம்.

அழைப்பை துண்டித்தவருக்கு மனம் பற்றிக்கொண்டு வந்தது.

'என் மகளுக்கு அடிப்பட்டதை என்னிடம் ஏன் சொல்லவில்லை அவன்.? இது போன்ற நேரத்தில் என் மகள் நான் அருகில் இருக்க வேண்டுமென்று நினைக்கமாட்டாளா?

அது எப்படி சில நிமிடங்களில் எல்லாருக்கும் மந்திரம் போட்டு விடுகிறானோ? 'எப்படி பேசுகிறாள் பார் அவள் தோழி? 'அவன் ஹீரோவாம் என் மகளை அவன் பார்த்துக்கொள்வானாம் நான் அவளை மறந்து விட வேண்டுமாம்

அவன் எண்ணை அழுத்தினார் அப்பா.

'சொல்லுங்க அங்கிள். நான் வசந்த் பேசறேன்'

என்னாச்சு அர்ச்சனாவுக்கு?

'காலிலே சின்ன பிராக்சர் அங்கிள் வலிதான் . கொஞ்சம்  ஜாஸ்தி'

நான் அவகிட்டே பேசணும்.

இல்லை அங்கிள். இப்பதான் தூங்கறா பாவம். எழுப்ப வேண்டாமே. எழுந்ததும் பேச சொல்றேன். என்றான் வசந்த்.

என் மகளிடம் பேச இவனிடம் அனுமதி கேட்க வேண்டி இருக்கிறதே! 'அவ போன் என்னாச்சு' என்றார் குரலில் படர்ந்த வெறுப்புடன்.

அது உடைஞ்சு போச்சு அங்கிள். சிம் கார்டு மட்டும் தான் இருக்கு. அவ நம்பருக்கு ரொம்ப நேரம்  ட்ரை பண்ணீங்களோ? சாரி அங்கிள். மார்னிங் இருந்த டென்ஷன்லே உங்களுக்கு சொல்ல மறந்துட்டேன்.

'ஏனோ அவன் வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் 'அங்கிள்' கூட அவருக்கு பிடிக்கவில்லை. கஷ்டப்பட்டு சகித்துக்கொண்டவராய் 'நான் உடனே கிளம்பி வரேன்' என்றார்.

அவசரப்பட்டு ஓடி வர வேண்டாம். நிதனாமா வாங்க அங்கிள். அர்ச்சனாவை நான் பார்த்துக்கறேன்

அது ஏனோ அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவருக்குள்ளே கொதிப்பையே ஏற்றியது.

வர் மருத்துவமனையை அடைந்த நேரம் அதிகாலை மணி ஐந்து. இரவு நேர பயணம் அவரை சோர்வாக்கி இருந்தது.

அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா. மருத்துவமனையிலேயே தான் இருந்தான் வசந்த்.

அவர் புறப்பட்ட செய்தியை அர்ச்சனாவுக்கு சொல்லிவிட்டு தான் புறப்பட்டார் அப்பா.

காலை ஏழு மணிக்கு கண்விழித்தாள் அர்ச்சனா. அவள் கட்டிலை விட்டு சற்று தள்ளி அமர்ந்திருந்தார் அப்பா. கண் விழித்த அடுத்த நொடி தன்னை தான் தேடுவாள் என்று எதிர்பார்த்திருந்த அப்பாவுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

அவரை கவனிக்கவில்லை அர்ச்சனா. கண் விழித்தவுடன் அவள் கண்கள் ஏனோ வசந்தைதான் தேடின.

சட்டென மற்றொரு புறத்தில் நின்றிருந்த அனுவை பார்த்துக்கேட்டாள் அர்ச்சனா 'உங்க அண்ணன் எங்கே அனு?'

அப்பாவினுள்ளே ஏதோ ஒன்று நொறுங்கியே போனது.

நான் வேண்டுமென்று என் மகள் நினைக்கவேயில்லையா? என் நினைவே அவளுக்கு வரவில்லையா?

அவள் குரல் கேட்டவனாய் '.இதோ வந்தேன் மகாராணி. வந்தேன்  என்றபடியே உள்ளே நுழைந்தான் வசந்த்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா. வசந்தை பார்த்தவுடன் அவள் முகம் மொத்தமாய் மலர்ந்து தான் போனது.

அவளேயறியாமல் அவளருகே வந்தமர்ந்தவனின் விரல்களை அவள் விரல்கள் தன்னாலே  பற்றிக்கொண்டன.

உதடுகளில் ஓடிய புன்னகையுடனே மெல்ல கண்களை நிமிர்த்தியவனின் கண்கள் அப்பாவின் கண்களை சந்திக்க அவருக்குள்ளே ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டிருந்தது. 'ஜெயிக்க துவங்கி விட்டான் வசந்த்.'

'உங்கப்பா வந்திருக்கார் பார்க்கலையா அர்ச்சனா?'  அவன் கேட்ட பின்தான் திரும்பி பார்த்தாள் அர்ச்சனா.

அப்..பா நீங்க எப்போ பா வந்தீ.....ங்க? நான் பார்க்கவேயில்லை .சற்று சிரமப்பட்டு எழுந்து அமர்ந்து புன்னகைத்தாள் அர்ச்சனா.

மகளின் புன்னகை அவருக்கு சற்று ஆறுதலாய் இருந்தது.

காலையிலேயே வந்திட்டேன் மா நான். நீ எப்படி மா இருக்கே.?

எனக்கு ஒண்ணுமில்லைபா. சின்ன பிராக்சர் தான். சரியாயிடும்பா.

'அனு வீட்டுக்கு கிளம்பிட்டிருக்கா அங்கிள். நீங்களும் வீட்டுக்கு போய் குளிச்சு, சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்திட்டு வாங்க. அர்ச்சனா கூட நான் இருக்கேன்.' என்றான் வசந்த்.

'ஒரு நிமிடம் என்னை என் மகளுடன் பேச விடுகிறானா பார்' பற்றி எரிந்தது அவருக்குள்ளே.

இல்லை நான் இங்கேயே இருக்கேனே எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லை.  நான் இல்லேன்னா அர்ச்சனா வருத்தப்படுவா.

அப்போது அர்ச்சனா சொன்ன  வார்த்தைகள் தான் அவரை மொத்தமாய் சாய்த்தன.

'எனக்கு வருத்தமெல்லாம் இல்லைப்பா. அதான் வசந்த் இருக்கார் இல்லையா. நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்திட்டு வாங்கப்பா'

ஏனோ வசந்த் அவளுடனே இருக்க வேண்டுமென்று தோன்றியிருக்க வேண்டும் அர்ச்சனாவுக்கு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.