(Reading time: 14 - 27 minutes)

17. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா

கைப்பேசியை காதில் வைத்த நொடியில் கேட்டாள் அர்ச்சனா 'கூப்பிட்டியா வசந்த்'?

தான் அவளை நினைத்த நேரத்தில் அவள் எப்படி அழைத்தாள் என்று புரியாமல் ஒரு நொடி வியந்துதான்  போனான் வசந்த்.

மனதிலே ஒரு பாட்டு என்னாச்சு வசந்த்......கூப்பிட்டியா? எதிர் முனையில் இருந்த மௌனதிற்கான காரணம் புரியாமல் மறுபடியும் கேட்டாள் அர்ச்சனா.

'வந்திடு அர்ச்சனா என்கிட்டே வந்திடு' வாய்விட்டு அவளிடம் சொல்லிவிட வேண்டுமென்று துடித்த மனதை ஏனோ கட்டுப்படுத்திக்கொண்டான் வசந்த்.

ம். ஆ.. ஆமாம் கூப்..பிட்டேன் குரல் ஏனோ தடுமாறியது.

'ஏன் வசந்த் இவ்வளவு டல்லா பேசறே?' கேட்டாள் அர்ச்சனா. அவன் குரல் இப்படி இருந்து அவள் பார்த்ததில்லை. அவனை ஏதோ ஒன்று வருத்துவது புரிந்தது அவளுக்கு.

ஒண்ணுமில்லைடா ஒரு புக் படிச்சிட்டிருந்தேன். அதுலே அப்படியே கொஞ்சம் இமோஷனல் ஆயிட்டேன் அவ்வளவுதான்.

அப்படியா? அப்படி என்ன  படிச்சிட்டிருந்தே? ஆர்வமாய் கேட்டாள் அர்ச்சனா.

நான் படிச்சதை அப்படியே சொல்லட்டுமா என்றவன்

என்னையும் அறியாமல் தான் அவன் தோள்களில் சாய்ந்தேன். வியந்து போனேன்.

அது எப்படி அந்த தோள்களில் இப்படி ஒரு நிம்மதி நிறைந்திருக்கிறது?

இன்னும் ஒரு மாதத்தில் எங்கள் திருமணம். நடக்கட்டும் அது நடக்கும் போது நடக்கட்டும்.

நான் அந்த மூன்று  நிமிடத்திற்குள்ளாகவே அவனுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து முடித்துவிட்டேன்.

நிறுத்தி நிதானமாய் உச்சரித்தான்..

அந்த வரிகள் அவள் காதுகளை சேர, பேச வார்த்தைகளற்று போய்  அப்படியே மௌனமானாள் அர்ச்சனா.

இது என்னதுன்னு ஞாபகம் இருக்கா அர்ச்சனா உனக்கு? நிதானமான குரலில் கேட்டான் வசந்த்.

மறக்க கூடியதா அவை? அந்த டைரியில் இருக்கும் ஒவ்வொரு வரியும் அவள் ரசித்து அனுபவித்து உணர்ந்து எழுதிய வரிகள் இல்லையா?

இன்னும் சில வரிகளை அதில் அப்படியே கலந்து விட்டவனாய் உச்சரித்தான் வசந்த்.

ஏனோ எதுவுமே பேசும் சக்தியில்லாமல் கைப்பேசியை காதில் வைத்த படியே அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. பழைய கணங்கள் அப்படியே கண்முன்னே நிழலாடியது போலிருந்தது.

சில நிமிடங்கள் கழித்து மெல்ல கேட்டான் வசந்த் .அரச்ச...னா. என்னடா சைலென்ட்டாயிட்டே?

இன்....னும் இ....இதையெல்லாம் வெச்சிருக்கியா வசந்த்? குரல் கலங்க கேட்டாள்.

'இதெல்லாம் என் பொக்கிஷம் அர்ச்சனா. நாம ரெண்டு பேரும் அனுபவிச்சு ரசிச்ச நிமிஷங்கள். எத்தனை வருஷமானாலும் என் கூடவேதான் இருக்கும்' மெல்ல சிரித்தான் வசந்த்

பழைய நினைவுகள் தந்த தாக்கத்தில் தன்னை மறந்து கேட்டு விட்டிருந்தாள் அர்ச்சனா. 'அந்த நிமிஷமெல்லாம் திரும்பி வந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்?. திரும்ப வரவே வராதா வசந்த்.?

ஏன் வராது? என்றான் வசந்த் சட்டென்று 'இப்போ, இப்போ இந்த நிமிஷம் 'ம்'ன்னு சொல்லு அர்ச்சனா. எல்லாம், எல்லாம் திரும்ப வந்திடும்'

அந்த நொடி வேறெதையுமே யோசிக்காமல் அர்ச்சனாவை மனதார நேசிக்கும் வசந்தாக மட்டுமே சொன்னான் அந்த வார்த்தைகளை.' என்கிட்டே வந்திடு அர்ச்சனா. அப்படியே ஓடி வந்திடு. நான் உன்னை கண்ணுக்குள்ளே வச்சு பார்த்துக்கறேன்

'அந்த வார்த்தைகளில் அப்படியே தடுமாறித்தான் போனாள் அர்ச்சனா.

வ...ச...ந்த். வசந்த், என்ன வசந்த் நீ?  நா...ன் எப்படி வசந்த்? ப்ளீஸ் வசந்த் எ...ன் என்னாலே' அவள் குரல் தடுமாறி உடைய எத்தனிக்க,

சட்டென சுதாரித்தான் வசந்த். 'ச்சே. அவள் மனம் நன்றாய் புரிந்திருந்தும் எப்படி என்னை மறந்து இப்படி சொல்லிட்டேன்.'? தனக்குள்ளே சொல்லிக்கொண்டவனாய் சொன்னான் வசந்த்,

'சரி சரி விடு அர்ச்சனா' என்றான் கொஞ்சம் எமோஷனலா இருந்தேன்ல அதான் ஏதோ பேசிட்டேன். நீ எதையும் மனசிலே வெச்சுக்காதே. எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு  .நிம்மதியா தூங்கு. நடக்கிறது நடக்கிற படி நடக்கட்டும்.

வசந்த் நீ...

அதான் சொல்றேன் இல்ல விடுடா. ஏதாவது பாட்டு கேட்டுட்டு அப்படியே தூங்கு. வேறெதையும் யோசிக்காதே. ப்ளீஸ் டா தூங்கு.

சில நொடிகள் எதையுமே பேசாமல் மௌனமாய் இருந்தவள், பெருமூச்சுடன் அழைப்பை துண்டித்தாள்.

அழைப்பை துண்டித்த பிறகுதான் அவள் கண்களில் நீர் சேர துவங்கியது. அவளையே கவனித்துக்கொண்டிருந்த அந்த ஒரு ஜோடி கண்களை கவனிக்காமல் தலையணையில் முகம் புதைத்து தன்னை மறந்து குலுங்க துவங்கினாள் அர்ச்சனா.

மூன்று வருடங்களுக்கு முன்னாலும் இப்படித்தானே அழைத்தான் வசந்த்? 'என் கூட வந்திடு அர்ச்சனா. மத்ததெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்'. இப்படிதான் அப்போதும் சொன்னான்.  அப்போது நான் செய்தது தவறா? சரியா?

னோவின் திருமணம் அப்போதுதான் முடிந்திருந்தது. மனோவையும்,ஸ்வேதாவையும் அழைத்துக்கொண்டு மற்றவர்கள் எல்லாரும் மனோ வீட்டிற்கு கிளம்பிய நேரத்தில்தான் மண்டபத்தில் நிகழ்ந்தது அது

அவளுடைய வாழ்கையை புரட்டி போட்ட அந்த வார்த்தைகளை வசந்தையும், அவளையும் பார்த்து நிதானமான குரலில் சொன்னார் அவர்.

அந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் அவள் மீது  அன்பை மட்டுமே பொழிந்தவர். அவர் வசந்தின் அப்பா.

அவர் அப்படி சொல்வாரென்று யாருமே எதிர்பார்க்கவில்லை அவர் சொன்ன வார்த்தைகள் இன்னமும் அப்படியே. நினைவில் இருக்கிறது அர்ச்சனாவுக்கு.

'என்னை மன்னிச்சிடுங்கப்பா ரெண்டு பேரும். உங்க கல்யாணம் நடக்காது. இந்த நிமிஷத்தோட எல்லாத்தையும் மறந்திடுங்க'.

சற்றும் எதிர்பார்க்காத அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை முழுவதுமாக புரிந்துக்கொள்ளவே இரண்டு நிமிடங்கள் பிடித்தது இருவருக்கும்.

அர்ச்சனாதான் அங்கே சில நொடிகள் நிலவிய அதிர்ச்சிக்கலந்த மௌனத்தை உடைத்து, நடுங்கும் குரலில் கேட்டாள்

'ஏன் பா? இப்படி சொல்றீங்க நான் ஏதாவது தப்பு செஞ்சிட்டேனா?

'உன்னால் தப்பே செய்ய முடியாதுமா' என்றார் கலங்கிய குரலில் எங்க வீட்டுக்கு நீ மருமகளா வர நாங்க கொடுத்து வைக்கலை அவ்வளவுதான்.

அப்பா.. நீங்க என்ன பேசறீங்கன்னு புரிஞ்சுதான் பேசறீங்களா? சற்று காரமான குரலில் கேட்டான் வசந்த்.

என்னை எதுவுமே கேட்காதே வசந்த். என்றார் வசந்தின் அப்பா. எதுக்கும் பதில் சொல்ற சக்தி எனக்கில்லை. நீ உடனே ஊருக்கு கிளம்பு.

நிறைய பேர்  சுற்றி இருந்த அந்த நேரத்தில் வசந்தால் எதுவுமே பேச முடியவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.