(Reading time: 14 - 27 minutes)

முகத்தில் எந்த உணர்வையுமே வெளிக்காட்டாமல் அப்படியே நின்றிருந்தார் அர்ச்சனாவின் அப்பா.

தவிப்புடன் தன் அப்பாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்த அர்ச்சனா சற்று திகைத்துதான்போனாள்.

ஏன் அப்பா அதிர்ச்சி அடையவில்லை?

அப்போதே இன்னும் சற்று யோசித்து பார்த்திருக்க வேண்டும் அர்ச்சனா. யோசிக்கவில்லை அவள்.

ஊருக்கு கிளம்பும் முன் எப்படியோ இரண்டு அப்பாக்களின் கண்களிருந்தும் தப்பித்து அவளை தனியே நகர்த்திக்கொண்டுபோய் சொன்னான் வசந்த்.

'ரெண்டு அப்பாக்கும் நடுவிலே ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். யார் மேலே தப்புன்னு தெரியலை அர்ச்சனா.

'எங்கப்பா ரொம்ப நல்லவர் வசந்த்' என்றாள் அர்ச்சனா.

சரிடா அப்படியே இருக்கட்டும். தப்பு எங்க அப்பாவோடதாகவே இருக்கட்டும் அதையெல்லாம் இப்போ ஆராய்ச்சி பண்ண நேரமில்லை அர்ச்சனா. பேசாம என் கூட கிளம்பு முதல்லே கல்யாணம் பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் நடக்கறது நடக்கட்டும்.

யாருக்கும் தெரியாம ஓடிப்போயிடறதா வசந்த்?

'தேவையில்லை' என்றான் அழுத்தமான குரலில் 'எல்லார்கிட்டேயும் சொல்லிட்டே போவோம். நம்மை யாராலும் தடுக்க முடியாது.

சில நிமிட யோசனைக்கு பிறகு 'சரி வசந்த் போகலாம்' என்றாள் அர்ச்சனா.

அவன் கையை பிடித்துக்கொண்டு அவனுடன் நடந்தாள் அர்ச்சனா.

எல்லார் முன்னிலையிலும் வந்து தன் அப்பாவை பார்த்து சொன்னான் வசந்த். ' ஸாரிப்பா.  என்ன பிரச்சனை எதனாலே கல்யாணத்தை நிறுத்திடீங்கன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா எந்த பிரச்சனையும்  எங்க ரெண்டு பேரையும் பிரிக்க நான் அனுமதிக்க மாட்டேன். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம். உங்க ரெண்டு பேர்   பிரச்சனையெல்லாம் தீர்ந்ததும் சொல்லுங்க  நாங்க திரும்பி வரோம்.

அவர் கோபப்படுவார் என்று அர்ச்சனா நினைத்ததற்கு மாறாக அவர் முகம் மலர்ந்து தான் போனது. 

எதுவுமே பேசவில்லை அவர்.

அர்ச்சனாவின் அப்பாவை பார்த்து 'வரேன் அங்கிள்' என்று சொல்லிவிட்டு அர்ச்சனாவின் கையை பிடித்துக்கொண்டு வசந்த் நடந்த நிமிடத்தில் அப்படியே மயங்கி சரிந்தார் அர்ச்சனாவின் அப்பா.

பதறிக்கொண்டு அவர் அருகே ஓடி வந்தாள் அர்ச்சனா. அவர் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது.

வேண்டாம் பழைய நினைவுகள் எதுவுமே வேண்டாம். ஏதாவது பாட்டை கேட்டுக்கொண்டு உறங்கலாம் மனதை திசைதிருப்பிக்கொள்ள முயன்று முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

மனம் வசந்தின் அப்பாவை நோக்கி சென்றது. என்ன வாயிற்று அவருக்கு?  மனோவிடம் நாளை கேட்டே ஆக வேண்டும். யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

காலை விடிந்ததும் குளித்து அவள் கீழே இறங்கிய போது மாடிப்படியில் அமர்ந்து அன்றைய நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தான்  விவேக்.

'குட் மார்னிங்' என்றான் அவள் கண்களை பார்த்து

சின்னதான புன்னகையுடன் 'குட் மார்னிங்' என்றாள் அர்ச்சனா.

இரவு முழுவதும் அவள்  சரியாய் உறங்கவில்லை என்பதை வீங்கி  இருந்த அவள் கண்கள் காட்டிக்கொடுத்தன

நாளிதழின் அடுத்த பக்கத்தை திருப்பியபடியே 'அப்புறம் என்ன சொல்றார் உங்க வசந்த்?' என்றான் விவேக்.

ஏன்? ஒண்ணும் சொல்லலியே? என்றாள் சட்டென.

ஒண்ணும் சொல்லலியா? அப்புறம் ஏன் நீ நைட் பூரா தூங்கலை? மெல்ல கண்களை நிமிர்த்தி அவள் முகத்தை பார்த்துக்கேட்டான் விவேக்.

'எனக்கு மனோ கிட்டே கொஞ்சம் பேசணும். பேசிட்டு ஆபீஸ் கிளம்பறேன்' கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மெல்ல நழுவினாள் அர்ச்சனா.

அவள் சென்ற திசையை பார்த்து மெல்ல சிரித்துக்கொண்டான் விவேக்.

னோ வீட்டிற்குள் நுழைந்தாள் அர்ச்சனா.

சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டிருந்த மனோ, அவள் ஸ்வேதாவுடன் பேசும் குரல் கேட்டும் திரும்பி பார்க்கவில்லை.

அவன் அலுவலகத்துக்கு கிளம்ப தன் பைக்கை கிளப்பிய போது அவன் அருகில் வந்து நின்றாள் அர்ச்சனா.

என்னை ஆபீஸ்லே ட்ராப் பண்றியா மனோ.?

பதில் பேசாமல் அவன் பைக்கை கிளப்ப அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள் அர்ச்சனா.

சிறிது தூரம் நகர்ந்ததும் மெல்ல சொன்னாள் அர்ச்சனா 'கங்ராட்ஸ் மனோ'

'பைக்கை செலுத்தியபடியே 'தேங்க்ஸ்'  என்றான் மனோ.

இப்பதான் ஸ்வேதா சொன்னா. உனக்கு இந்த சந்தோஷமான விஷயத்தை என்கிட்டே சொல்லணும்னு தோணலியா மனோ. அவ்வளவு வெறுப்பா என் மேலே?

'ஹேய் லூஸு' என்றான் மனோ. ஈவினிங் ஸ்வீட்டோட சொல்லலாம்னு இருந்தேன். அவ்வளவுதான். உன்னை வெறுத்துட்டு நான் எங்கே போயிட முடியும்.? ஆனா சத்தியமா சொல்றேன்,  வசந்த் விஷயத்திலே மட்டும் இந்த நிமிஷம் வரைக்கும் என்னாலே உன்னை மன்னிக்க முடியலை அர்ச்சனா. முடியவே இல்லை.

பதிலே சொல்லவில்லை அர்ச்சனா. அலுவலகத்துக்கு அருகில் வரும் வரை எதுவுமே பேசவில்லை.

பைக்கை விட்டு இறங்கியதும் அவன் முகத்தைப்பார்த்து கேட்டாள் அர்ச்சனா 'வசந்த் அப்பாக்கு என்னாச்சு மனோ.?'

பதில் சொல்லாமல் பைக்கை விட்டு கீழே இறங்கினான் மனோ.

பதில் சொல்லு மனோ.

வேண்டாம் அர்ச்சனா. நடந்ததை பத்தி பேசி ஒரு பயனும் இல்லை. இனிமே நடக்க வேண்டியதை பத்தி யோசி.

இல்லை மனோ, எங்க கல்யாணம் நின்னு போனதுதான் எல்லாத்துக்கும் காரணமா? நிஜமா யார் மேலே தப்பு? எனக்கு புரியலை.

'ப்ளீஸ் அர்ச்சனா. விட்டுடேன் பழசையெல்லாம் கிளறி எல்லாரும் காயப்பட்டு போறதை வசந்த் விரும்பலை. அதை அப்படியே விட்டுடு. அதுதான் எல்லாருக்கும் நல்லது.' என்றான் உறுதியான குரலில்

சிலையாய் அவனையே பார்த்துகொண்டு நின்றவளை நேராக பார்த்து சொன்னான் 'நான் மறுபடியும் சொல்றேன். உன் வாழ்கையை பத்தி முடிவெடுக்கும் போது தயவு செய்து உன் மனசாட்சிக்கு விரோதமில்லாமா முடிவெடு. அவ்வளவுதான். நான் கிளம்பறேன். பைக்கை கிளப்பிக்கொண்டு பறந்து விட்டிருந்தான் மனோ. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.