(Reading time: 14 - 27 minutes)

மாலை அலுவலகத்தை விட்டு அர்ச்சனா வெளியே வந்த போது நேரம் இரவு ஏழை தொட்டிருந்தது.

வெளியே காத்திருந்தான் விவேக். 'கார்லே ஏறு கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம்'

எங்கே?

எங்கேயாவது போலாம் வா.

அவள் மனதிற்கும் சின்னதாய் ஒரு மாற்றம் தேவை என தோன்ற காரில் ஏறினாள் அர்ச்சனா.

காரை செலுத்தியபடியே  மெல்ல துவங்கினான் விவேக் ' உன்னை இப்போ எதுக்கு வெளியே கூட்டிட்டு வந்தேன் தெரியுமா? நாம ரெண்டு பேரும் ஹனிமூன் எங்கே போலாம்ன்னு பேசி முடிவு பண்ணலாம்னு தான்.

'ஹனி மூனா? நாம ரெண்டு பேருமா? திடுக்கிட்டு போய் கண்கள் விரிய அவள் கேட்ட விதத்தில் மலர்ந்து சிரித்தே விட்டான் விவேக்.

ஆமாம் என்னை கல்யாணம் பண்ணிகிட்டா நாம ரெண்டு பேரும் தான் ஹனி மூன் போகணும் இல்லையா? அருகே இருந்தவளின் கண்களுக்குள் நேராக பார்த்து கேட்டான் விவேக்.

பதில் சொல்ல வில்லை அர்ச்சனா. கண்களை மெல்ல தாழ்த்திக்கொண்டாள்.

அவளது இறுக்கமான மௌனத்தின் காரணம் அவனுக்கு புரியாமல் இல்லை.

'உங்கப்பா  காலையிலே போன் பண்ணார்' என்றான் விவேக். எங்கப்பா, அம்மா அடுத்த வாரம் ஸ்வேதாவை பார்க்க வராங்க. அவங்க வந்ததும் நம்ம நிச்சியதார்த்தம்.

வியப்புடன் பார்த்தாள் அர்ச்சனா. 'காலையில் கூட என் அழைப்பை ஏற்கவில்லையே அப்பா. இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை அவர்.'

அவள் எண்ண ஓட்டத்துக்கு உடனே பதில் கிடைத்தது.' நிச்சியதார்த்தம் முடிஞ்சதும் உன்கிட்டே பேசறேன்னு சொன்னார் உங்கப்பா'

ஜன்னலுக்கு வெளியே பார்வையை திருப்பிக்கொண்டாள் அர்ச்சனா 'ஏன் என்னிடம் இப்போது பேசினால் என்னவாகிவிடுமாம்? அவர் பேசிவிட்டால் , நான் அவர் சொல்வதை கேட்க மாட்டேன் என்று நினைக்கிறாரா? என்னை  கட்டுப்பாட்டுக்குள்    வைத்துக்கொள்ளும் தந்திரமா இது?

அவர் மீது லேசான வருத்தம் பிறந்தது அவளுக்கு.

'என்ன அர்ச்சனா ஏதாவது பேசு' கலைத்தான் விவேக்.

சற்று தடுமாறி மெல்ல கேட்டாள் 'நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டீங்களா?

ஏன் அர்ச்சனா நான் ஓகே சொல்லலைன்னா நல்லதுன்னு  நினைக்கிறியா? நிதானமான குரலில்  கேட்டான் விவேக்.

பதில் சொல்லவில்லை அவள்.

அவனிடத்தில் ஒரு பெருமூச்சு எழுந்தது. வாடிப்போயிருந்த அவள் முகம் அவனை வருத்தியது. அவளை எதுதான் சந்தோஷப்படுத்தும் யோசித்தபடியே காரை செலுத்தினான் விவேக்.

கார் நேராக சென்று நின்றது ஒரு நகைக்கடையின் வாசலில்.

கண்ணை பறிக்கும் விளக்குகளினூடே ஜொலி ஜொலித்துக்கொண்டிருந்த அந்த பல மாடி நகைக்கடைக்குள் நுழைந்த போதும் அவள் முகம் மலரவில்லை.

'என்னென்ன வேணும். எல்லாத்தையும், எல்லாத்தையும் வாங்கிக்கோ அர்ச்சனா.' குரலில் சேர்ந்த உற்சாகத்துடன் அவளை மகிழ்ச்சியாகிவிடுவதே நோக்கமாய் சொன்னான் விவேக்.

அவள் கண்கள் எதன் மீதும் நிலைக்கவில்லை.

'எனக்கு எதுவும் வேண்டாமே வீட்டுக்கு போகலாம்.' என்றால் அவள்.

'எதுவுமே வேண்டாமா' வியப்பாய் கேட்டான் விவேக். நிஜமாவே உனக்கு என்னதான் பிடிக்கும்?.

அந்த நொடியில் அந்த குரல் கேட்டது. யாரோ யாரையோ அழைத்தார்கள் 'வசந்த்'

அந்த குரலில் ஏனோ சரேலென்று விரிந்து திரும்பி ஒரு நொடி அலைபாய்ந்து திரும்பின அவள் கண்கள்.

நிஜமாவே உனக்கு என்னதான் பிடிக்கும்? அவன் கேள்விக்கு சட்டென பதில் கிடைத்து விட்டது போல் தோன்றியது விவேக்கிற்கு.

விழி அகலாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வையை தவிர்த்தபடியே சொன்னாள்  'வீட்டுக்கு போலாமே'

பதில் சொல்லாமல் நின்றவனின் கண்களை கவர்ந்தன அந்த மோதிரங்கள்.

ஒவ்வொரு மோதிரத்திலும் வெள்ளை கற்களாலான ஆங்கில எழுத்துக்கள் பதிக்க பட்டிருந்த மோதிரங்கள். அதில் இரண்டு மோதிரங்களை கையில் எடுத்தான் விவேக்.

ஒன்றில் 'ஏ' பதிக்கப்பட்டிருந்தது. மற்றொன்றில் 'வி'

இது A FOR ARCHANA  சரி அப்போ இது  V FOR ? கண்களில் தேங்கிய தவிப்புடன் அவளை பார்த்து கேட்டான் விவேக்.

கண்களை மெல்ல தாழ்த்திக்கொண்டாள் அர்ச்சனா.

யோசித்தபடியே 'கையை நீட்டு இந்த மோதிரத்தை போட்டு பார்ப்போம்' என்றவன் ஏனோ சட்டென எண்ணத்தை மாற்றிக்கொண்டவனாய் இந்தா நீயே போட்டுப்பாரு என அவள் கையில் அதை கொடுத்துவிட்டிருந்தான்.

அந்த நேரத்தில் ஏனோ தனக்குள்ளே கேட்டுகொண்டேயிருந்தான் விவேக். V FOR விவேக் என்பதற்கு பதிலாக V FOR வசந்த் என்று பதில் வந்துவிட்டால் மகிழ்ந்து விடுவாளா?  மலர்ந்து சிரித்து விடுவாளா?

ரண்டு நாட்கள் கடந்திருந்தன. அன்று காலை தனது பி.எச்.டி வேலைகளுக்காக டில்லியின் ஐ ஐ டி வளாகத்தில் வலம் வந்துக்கொண்டிருந்தான் வசந்த்.

அங்கே கண்ணில் பட்ட ஒரு நண்பனுடன் பேசி விடைப்பெற்று திரும்பிய நொடியில் தான் அவரை பார்த்தான்.

இதயத்துக்குள் சுரீரென்றது அவனுக்கு. ஒரு நொடி அப்படியே நின்று விட்டிருந்தான் வசந்த். இவர் எப்படி இங்கே வந்தார்?

சில அடி தூரத்தில் தான் நின்றிருந்தார் அவர். கடந்த மூன்று வருடங்களில் அவர் தோற்றத்தில் பெரிதாக என்ற மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.

அவன்  வாழ்க்கையுடன் விளையாடி விட்டு எந்த மாற்றமும் உலா வந்துக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.

சில அடி தூரத்தில் தன்னை அழைத்து வந்து இறக்கி விட்ட அந்த ஆட்டோ டிரைவருடன் தெரியாத ஹிந்தியில் போராடிக்கொண்டிருந்தார் அவர்.  அர்ச்சனாவின் அப்பா.

சில நொடிகள் அப்படியே நின்றவன், பின் மெல்ல சிரித்துக்கொண்டான். அது எப்படி? எப்படி அது? இத்தனை அருகில் அந்த மனிதரை பார்த்துவிட்டு பேசாமல் போய்விடுவதாம்.?

சுவாசத்தை சீர்ப்படுத்திக்கொண்டு அவரை நோக்கி நடந்தான் வசந்த்.

தொடரும்

Manathile oru paattu episode # 16

Manathile oru paattu episode # 18

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.