(Reading time: 18 - 36 minutes)

ன் பையன் சின்ன வயசிலேயிருந்து ஆசை பட்டானேன்னுதான் நான் இதுக்கெல்லாம் சம்மதிச்சேன். இல்லேன்னா என் அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி வேற இடம் பார்த்திருப்பேன்.’ பேசிக்கொண்டே போனார் அவர்.

சுள் சுள்ளென வந்து விழுந்தன வார்த்தைகள். சற்று தடுமாறிப்போனவர், சமாளித்துக்கொண்டு சொன்னார்

‘எனக்கு அர்ச்சனா மேலே ஒரு சின்ன மனவருத்தம். ஒரு வாரம் பத்து நாளா அவ கூட நான் பேசலை. அந்த வருத்ததிலே இருப்பா.. இன்னும் ரெண்டு மூணு நாளிலே நான் அங்கே வரேன். நான் வந்தா எல்லாம் சரியாயிடும் என் பேச்சை மீற மாட்டா அவ ’ என்று சமாளித்து அழைப்பை துண்டிதார்.

விவேக் அப்பாவின் வார்த்தைகளால் இவர் மனதில் எழுந்திருந்த கோபம் அர்ச்சனா மீதே திரும்பியது.

என்ன செய்துக்கொண்டிருக்கிறாள் இவள். ஒரு வேளை வசந்த் எல்லாவற்றையும் சொல்லிவிட்டனா? அவள் மனம் மாறிவிட்டதா?

மூன்று  நாட்கள் கடந்திருந்தன. அன்று காலையிலிருந்தே மனோ முகத்தில் குழப்பம் படர்ந்திருந்தது.

திரும்ப, திரும்ப அழைத்து பார்த்தும் வசந்தின் கைப்பேசிக்கு இணைப்பு கிடைக்கவில்லை.

மனதில் எழுந்த யோசனையுடன், அனுவை அழைத்தான் மனோ.

வசந்த் எங்கே அனு?

அவள் பேச பேச அவன் குழப்பம் இன்னும் அதிகரித்தது.

எங்கே போயிருப்பான் அவன்? இப்படி என்னிடம் சொல்லாமல் எங்கும் செல்ல மாட்டனே? அப்படியே போனாலும் அவன் கைப்பேசி தொடர்பு கொள்ளும் நிலையிலேயே இருக்குமே? என்னவாயிற்று அவனுக்கு?

இரவு எட்டு மணிக்கு வந்து இறங்கிவிட்டிருந்தார் அர்ச்சனாவின் அப்பா.

அவர் கேட்டை திறந்துக்கொண்டு உள்ள நுழையவும், அர்ச்சனா மாடியிலிருந்து கீழே இறங்கி வரவும் சரியாய் இருந்தது.

‘அப்பா........’ முகம் நிறைய மகிழ்ச்சியுடன் தன்னை நோக்கி வந்த மகளை பார்த்து மலர்ந்து, புன்னகைத்திருக்க வேண்டாமா அவர்? செய்யவில்லை

உறவுகளும், ரத்தபந்தகளும் நம்மை விட்டு விலகும் சூழ்நிலை எப்போது திடீரென்று வருமென தெரியாத இந்த உலகில், அவர்கள் நம் அருகில் இருக்கும் நிமிடங்களை அவர்கள் அருமைகளை புரிந்து கொண்டு அனுபவித்து விட வேண்டாமா? அவர்கள் மீது அன்பை பொழிந்துவிடவேண்டாமா?. இந்த உண்மை புரியவில்லை அவருக்கு.

விவேக் அப்பாவின் வார்த்தைகள் இன்னமும் மனதை அழுத்திக்கொண்டிருக்க, தன்னுடைய கோபமும், வீம்பும் அவருக்கு பெரிதாக தெரிய  தலையை குனிந்துக்கொண்டு மனோ வீட்டினுள் சென்றார் அப்பா.

பளாரென்று கன்னத்தில் அறை வாங்கியது போல் உணர்ந்தாள் அர்ச்சனா. மனம் இரண்டு துண்டாய் உடைந்தது போலிருந்தது. ‘அப்படி என்ன தவறு செய்து விட்டேன் நான்?

பேசாமல் திரும்பி மாடியேறினாள் அர்ச்சனா.

சாப்பாட்டு மேஜையில் மொத்தமாய் எல்லாரும் அமர்ந்திருந்தனர். அர்ச்சனா மட்டும் வரவில்லை.

கைப்பேசியில் அழைத்தான் விவேக் ‘சாப்பிட  கீழே வரலியா நீ?

இல்லை..... பசியில்லை.

‘அதெல்லாம் இருக்கும். முதல்லே கீழே இறங்கிவா.

பத்து நிமிடம் கழித்து கீழே இறங்கி வந்தாள் அர்ச்சனா. இரண்டு அப்பாக்களின் கண்களும் அவளையே ஊடுருவிக்கொண்டிருந்தன. பேசாமல் மனோவின் அருகில் சென்று அமர்ந்தாள் அர்ச்சனா. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் விவேக்.

உன்னை என் மனதில் சிலையாக வடித்து வைத்ததுதான்  தவறோ?

அதனால் தான் என்னை பார்த்து புன்னகைக்க கூட மறுக்கிறாயோ?

அவன் முகத்தை பார்த்த அவன் அப்பா சட்டென அர்ச்சனாவின் அப்பாவை பார்த்து சொன்னார் ‘ஏன் உங்க பொண்ணு என் பையன் பக்கத்திலே உட்கார்ந்தா தேஞ்சு போயிடுவாளா?

சற்று திடுக்கிட்டு நிமிர்ந்தான் விவேக்.

கண்களை நிமிர்த்தி அவளை பார்த்தார் அவள் அப்பா. அவருடைய கனல் பார்வை அவளை செலுத்த, முகம் துவண்டு வாடிப்போய் சாவி கொடுக்கப்பட்ட பொம்மையாய் விவேக்கின் அருகில் சென்று அமர்ந்தாள் அர்ச்சனா.

அவள் முகவாட்டம் விவேக்கை மொத்தமாய் தாக்கியது.

ஒரு வார்த்தை பேசாமல் சாப்பிட துவங்கினாள் அர்ச்சனா. மெல்ல இமைகளை நிமிர்த்தி அவள் முகத்தை பார்த்தான் விவேக்.

சாப்பிட்டு கொண்டிருந்தவளின் கண்களில் நீர் சேர்ந்திருந்து. யாரும் பார்க்காத வண்ணம் அதை துடைத்துக்கொண்டு அவள் சாப்பிட,. மனதிற்குள் துடித்துபோனான் விவேக். அவள் கண்ணீர் அவனை என்னமோ செய்தது.

அரைகுறையாய் சாப்பிட்டு விட்டு கை கழுவிக்கொண்டு அவன் நகர்ந்த நொடியில், அங்கே கை கழுவ வந்த அர்ச்சனாவின் கண்ணில் பட்டது அவன் கையில் இருந்த அந்த வாட்ச்.

சில நாட்களுக்கு முன்னால் அர்ச்சனாவின் கனவில் வந்த வாட்ச்.

சிங்கபூரிலிருந்து கிளம்பிய நேரத்தில் தன் பெட்டிக்குள் வைத்த அந்த கை கடிகாரத்தை இன்று தான் அணிந்திருந்தான் விவேக்.

அதை பார்த்த மாத்திரத்திலேயே பகிரென்றது அர்ச்சனாவுக்கு. இந்த வாட்ச் ஏன் என்னை பின் தொடருகிறது? அப்படி என்றாள் என் அப்பாவுக்கு ஏதும் ஆகிவிடுமா?

தன் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்தவளின் மனதில் மற்ற எல்லா எண்ணங்களுக்கும் மேலாக இதுவே அவளை ஆக்கிரமித்திருந்தது. என் அப்பாவுக்கு ஏதாவது ஆகிவிடுமா.? மனம் எங்கும் பயம் பரவிக்கொண்டிருந்தது.

ஏன் அந்த கடிகாரம் திரும்ப திரும்ப என் கண்ணில் படுகிறது?

ன் அறைக்குள் சென்று, அமர்ந்தான் விவேக். அவள் கண்ணீர் மறுபடி மறுபடி நினைவுக்கு வந்தது.

மனதை திசைத்திருப்பிக்கொள்ள மேஜை மீதிருந்த மடிக்கணினியை உயிர்பித்து அதன் எதிரில் அமர்ந்தான்.. மனம் அதில் செல்லவில்லை

அன்று வசந்துடன் பேசிவிட்டு தலையணையில் முகம் புதைத்து அவள் குலுங்கிய நிமிடம், இன்று விசையுறு பொம்மையாய் அவன் அருகில் அவள் வந்தமர்ந்த நிமிடம், ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் எல்லாம், கண்முன்னே வந்து வந்து போனது.

கண்களை மூடிக்கொண்டு பின்னால் சாய்ந்தான். முதன் முதலில் அவள் திருமண பேச்சு துவங்கியபோது முதல் வாய்ப்பு எனக்குதானே வந்தது.. அப்போது என் துறையில் நான் முன்னேற வேண்டும் என்பதற்காக அவளை மறுத்தேன்.  அதன் பிறகு அவள் என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாள். இப்போது அவளை துரத்திப்பிடித்து என்னருகில் இழுப்பது என்ன நியாயம்?

அவளை கட்டாயபடுத்தி திருமணம் செய்துக்கொண்டு தினமும் அழவைத்துக்கொண்டிருப்பதா? வேண்டாம்.

உனக்காக நான் என் உயிரை சிந்துவதில் கூட நியாயம் இருக்கிறது.

எனக்காக நீ கண்ணீர் சிந்துவதில் எந்த நியாயமும் இல்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.