(Reading time: 18 - 35 minutes)

றுநாள் இரவு எட்டு மணி.

அலுவலகத்துக்கு சென்று திரும்பியிருந்தாள் அர்ச்சனா. காலையில் அப்பாவிடம் பேச நேரம் கிடைக்கவில்லை அவளுக்கு.

எல்லாரும் சாப்பிட அமர்ந்திருந்தனர். காலையிலிருந்து விவேக்கின் அப்பா அவரிடம் முகம் கொடுத்து பேசாதது அர்ச்சனாவின் அப்பாவை குழப்பிக்கொண்டிருந்தது.

அப்போது மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த அர்ச்சனாவிடம் 'உங்கப்பாகிட்டே இப்பவே பேசிடு ' என்றான் விவேக்.

எல்லார் முன்னாடியுமா?

'ஆ......மாம் பே....சு' என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு மேஜையில் சென்று அமர்ந்தான் விவேக்.

அப்பாவின் எதிரில் சென்று அமர்ந்தாள் அர்ச்சனா.

பேச வேண்டுமென்று மனம் தவித்துக்கொண்டிருந்த போதிலும் ஏனோ வார்த்தைகள் வெளியே வரவில்லை. 

நான் பேசுவதை அப்பா எப்படி எடுத்துக்கொள்வார்?  ரொம்பவும் காயப்பட்டு போவாரா? அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவேனா? குழப்பத்திலேயே அமர்ந்திருந்தவளை விவேக்கின் பார்வை செலுத்த, அவள் வாய்திறக்க முனைந்த நேரத்தில் ஒலித்தது அவள் கைப்பேசி.

டில்லியிலிருந்து வந்தது அந்த அழைப்பு. யாராக இருக்குமென்று யோசித்தபடியே கைப்பேசியை காதில் வைத்து 'ஹலோ' என்றாள் அர்ச்சனா

அர்ச்சனா? என்றது ஒரு கம்பீரமான குரல்.

யெஸ்...

நான் டாக்டர் சிதம்பரம் பேசறேன்மா.....

ஆங்...சட்டென நிமிர்ந்து அமர்ந்தாள் அர்ச்சனா. 'சொல்லுங்க அங்கிள் நான். அர்ச்சனா பேசறேன். யூ. எஸ் ட்ரிப் நல்லபடியா முடிஞ்சதா?

மெல்ல திரும்பி பார்த்தார் அவள் அப்பா. யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் இவள்?

இத்தனை பேர் முன்னிலையில் அந்த விஷயத்தை கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்தபடியே சில நொடிகள் சம்பிரதாயமான பேச்சை தொடர்ந்தாள் அர்ச்சனா.

ஆனால் டாக்டரே நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டிருந்தார். 'வசந்தோட அப்பாவை பத்தி கேட்கத்தான் போன் பண்ணி இருந்தியா மா?

அதற்கு மேல் தவிர்க்க முடியவில்லை அவளால் ம். ஆ...ஆமாம் அங்கிள். எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. சொல்லுங்க வசந்தோட அப்பாவுக்கு என்ன ஆச்சு?

அவள் அந்த வார்த்தையை உச்சரித்த நேரத்தில் அங்கே அமர்ந்திருந்த அத்தனை பேர் கண்களும்  சொல்லிவைத்தது போல் ஒரே நேரத்தில் விரிந்தன.

அதிர்ந்து, தவித்தே போனார் அர்ச்சனாவின் அப்பா. 'என்ன நடந்துக்கொண்டிருக்கிறது இங்கே? ஆனால் எதுவுமே செய்து விட முடியவில்லை அவரால். அப்படியே செயலற்றுப்போய் அமர்ந்திருந்தார்.

நடந்ததை சொல்ல துவங்கினார் சிதம்பரம்

கேட்டுக்கொண்டிருந்தவளின் முகம் மெல்ல மெல்ல மாறத்துவங்கியது.

அங்கே எல்லாரிடத்திலும் அப்படி ஒரு மௌனம் நிலவியது. .அங்கே அமர்திருந்தவர்களின், இதயத்துடிப்புகள் மொத்தமாய் அதிகரித்திருந்தன. எல்லாருடைய பார்வையும் அர்ச்சனாவின் அப்பாவின் மீதே இருந்தது.

யாருக்கு எந்த உண்மை  தெரியக்கூடாது என்று இத்தனை நாள் போராடினாரோ, அதே உண்மை அவர் கண்முன்னே அவளுக்கு வெட்ட வெளிச்சமாவது தெரிந்தும், எதுவுமே செய்ய முடியாமல் தோற்று போய் கிடந்தார் அவர். எல்லாமே அவர் கையை மீறிப்போய்கொண்டிருந்தது.

டாக்டரின் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொண்டே மெல்ல மெல்ல கண்களை நிமிர்த்தி அப்பாவை பார்த்தாள் அர்ச்சனா.

வேதனையும், ஏமாற்றமும் வலியும், கண்களில் நிரம்பி நிற்க அவள் பார்த்த அந்த ஒற்றை பார்வையில், கூனி, குறுகி துவண்டு போனார் அப்பா,

'நான் 'உங்கப்பாவை பத்தி உன்கிட்டேயே பேசினது, உன் மனசை ரொம்ப காயப்படுத்தி இருக்கும் அர்ச்சனா. அவரை நீ வெறுக்கணும்கிறது என் நோக்கம் இல்லை. உண்மை எது, நியாயம் எதுன்னு நீ புரிஞ்சிக்கணும். முக்கியமா வசந்தை நீ புரிஞ்சிக்கணும். அதுக்காகத்தான் அர்ச்சனா எல்லாத்தையும் சொன்னேன்.. நீ நிதானமா யோசிச்சு நல்ல முடிவா எடும்மா.' என்று முடித்தார் டாக்டர்.

'ச...சரி அங்கிள். ரொ,,, ரொம்ப தேங்.....க்ஸ் அங்கிள்'. என்று அழைப்பை  துண்டித்து விட்டு மெல்ல நிமிர்ந்தாள் அர்ச்சனா.

எல்லார் பார்வையும் அவர்கள் இருவர் மீதே நிலைதிருந்தது. அதிர்ச்சியின் எல்லையில் இருந்தாள் அர்ச்சனா. டாக்டரின் வார்த்தைகள் மூளைக்கு ஏறி, அதை முழுவதுமாக புரிந்து கொள்வதற்கே சில நிமிடங்கள் பிடித்தது அவளுக்கு.

அப்போதும் அப்பா மீது அவள்  வைத்திருக்கும் நம்பிக்கை குறையவில்லை. மெல்ல கண்களை நிமிர்த்தி அப்பாவை பார்த்தாள். அவர் தவறு செய்திருப்பாரா?

'அப்பா....' என்றாள் அர்ச்சனா.

முடியவில்லை அவரால். தான் பெற்ற மகளை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை அவரால்.

புரிந்தது அர்ச்சனாவுக்கு. அவருடைய முகத்தில் பரவியிருந்த தவிப்பும் அதிர்ச்சியுமே அர்ச்சனாவுக்கு எல்லாவற்றையும் உரைத்தது. அவள் தன் அப்பா மீது வைத்திருந்த நம்பிக்கை மொத்தமாய் பொய்த்து போனது தெளிவாய் புரிந்தது அர்ச்சனாவுக்கு.

என் அப்பா எனக்கு துரோகம் செய்துவிட்டாரா? அவள் உள்ளம் சுக்குநூறாய் போய்விட்டிருந்தது.

எல்லாரும் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தனர்.. நடந்தது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது என்று நன்றாய் புரிந்தது அவருக்கு. எல்லார் பார்வையும் அவரை மொய்த்தெடுக்க அவமானத்தால் கூசிப்போய் அமர்ந்திருந்தார் அப்பா.

அர்ச்சனாவின் கனவு அந்த இடத்தில் கிட்டத்தட்ட பலித்து போயிருந்தது. உடலாலே வாழ்ந்துக்கொண்டிருந்தாலும் மனதாலும், உணர்வாலும் இறந்து போயிருந்தார் அப்பா.

ஒற்றை வார்த்தை பேசவில்லை அவள். பேசாமல் எழுந்து நடந்து மாடிப்படி ஏறினாள்.

யாருமே எதுவுமே பேசவில்லை. அடுத்த சில நொடிகளில் ஒவ்வொருவராய் எழுந்து உள்ளே சென்றுவிட்டிருந்தனர்.

சிலையாகிப்போனவராய் அப்படியே அமர்ந்திருந்தார் அப்பா,

சில நிமிட யோசனைக்கு பிறகு தன் கைப்பேசியை எடுத்து வசந்தின் எண்ணை அழுத்தினான் மனோ.

இணைப்பு கிடைக்கவில்லை. 'ச்சே.' நொந்துக்கொண்டான் மனோ. எங்கே சென்று விட்டான் இவன்?

இந்த பெண் தனியாக மாடியில் என்ன செய்துக்கொண்டிருக்குமோ? யோசித்தபடியே மாடி ஏறினான் மனோ.

அதிர்ச்சியின் உருவமாய் கட்டிலில் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. அவள் அருகில் சென்று அமர்ந்தவன் 'என்னடா..' என்று துவங்க,

'ப்ளீஸ் மனோ. என்னை தனியா விடு.' என்றாள் அர்ச்சனா.

வேண்டாம் நீ தனியா இருக்க வேண்டாம். முதல்லே கீழே இறங்கி வா.

ப்ளீஸ் மனோ.... பயப்படாதே. நான் எதுவும் பண்ணிக்க மாட்டேன். எனக்கு எதுவும் ஆகாது.  அழுகை கூட வரலை எனக்கு.  என்னை தனியா விடு. நீ கீழே இறங்கி போ.'

சில நொடிகள் அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் மனோ.

'சொல்றேன் இல்ல. போ மனோ.' பெருமூச்சுடன் இறங்கி நடந்தான் மனோ. மறுபடியும் வசந்துடன் பேச முயன்றான் மனோ. இணைப்பு கிடைக்கவில்லை.

நான்கு நாட்களுக்கு முன் மனோவை அழைத்திருந்தான் வசந்த். அவன் பேச்சிலிருந்தே அவன் அப்பாவின் நினைவால்  மனதால் துவண்டு போயிருப்பது தெரிந்தது மனோவிற்கு.

நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான் மனோ. அவன் மனம் சற்று தெளிவடைந்த பின்னர் தான் அழைப்பை துண்டித்தான்.

அதன் பின் பேசவில்லை அவன். எங்கே போயிருப்பான் அவன்?. மனோவின் மனம் குழம்பி தவித்தது.

டேய் வசந்த்...............எங்கேடா இருக்கே? என்றான் வாய்விட்டு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.