02. என்னுயிரே உனக்காக - சகி
"அப்பா! போப்பா! நானும் உன்னோட ஊருக்கு வரேன்"-என்றான் ராகுல் தன் மழலைக் குரலில்.
"இல்லடா செல்லம்! அப்பா முக்கியமான வேலையா போறேன். நான் இன்னொரு நாள் கூட்டிட்டுப் போறேன்! "-என்றான் ரகு கெஞ்சும் குரலில்.
"ப்பே! எப்பப் பாரு நீயும், ஆதியும் என்ன மட்டும் விட்டுட்டுப் போயிடுங்க. "
அப்போது-
"என்ன என் பேச்சு அடி படுது?"-என்றவாறு உள்ளே நுழைந்தான் ஆதித்யா சரண். அவனைக் கண்டவுடன்,
"ஆதி! என்று ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டான் ராகுல்.
"என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?"
"போ! எப்பப் பாரு என்னை விட்டுவிட்டு நீங்க மட்டும் போங்க என் கூட பேசாதே! "
"அப்படியா?அய்யயோ! நீ கேட்டனு ஆங்கிரி பேட்ஸ் வீடியோ கேம்ஸ் வாங்கி வந்தேனே?ச்சே. . . போச்சா?"
"அப்படியா? நிஜமாகவா?"
"ஆமாடா செல்லம்! "
"போ எனக்கு வேணாம்! "
"ஏன்டா?"
"நீ என்கூட இருக்க மாட்ட, உன் கேம்ம நீயே வைச்சிக்கோ. "-சரண் ரகுவைப் பார்த்து, "என்ன பையன் வளர்த்து வைச்சிருக்க? எதை தந்தாலும் சமாதானம் ஆக மாட்றான். "-அவன் மெல்லியதாய் புன்னகைத்தான்.
"அது சரி உன் ரத்தம் தானே?"-ராகுல் பக்கம் திரும்பி, "சரி நான் என்ன பண்ணட்டும்?"
"நான் என்ன சொன்னாலும் என்னை இங்கே விட்டுட்டு தான் போகப் போறீங்க! போங்க. "-ராகுலின் முகம் மாறியது. அதைக் கண்ட சரண் செய்வதரியது ரகுவை பார்த்தான். ரகு மெல்ல ராகுல் பக்கத்தில் வந்தமர்ந்தான்.
"என்ன சார்! கோபமா?"-அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
"இதோ பாருடா செல்லம்! வாழ்க்கையில யாருமே யார் கூடவும் நிரந்தரமா வாழ முடியாது. ஒரு நேரம் இல்லனா ஒரு நேரம் பிரிவை நாம தாங்கி தான் ஆகணும். யாருமே யார் கூடவும் ஒண்ணா வாழ முடியாது. "
"அதனால தானாப்பா அம்மா என்னை விட்டுட்டு போயிட்டாங்க?"-என்றும் அவன் அதுப் போல கேட்காது இன்று அவன் கேட்டது இருவருக்கும் திகைப்பை அளித்தது. இருப்பினும் ரகு அவனை அணைத்துக் கொண்டு,
"இதோ பாருடா கண்ணா! மரணம் ஒருத்தரை விட்டு இன்னொருத்தரை நிரந்தரமா பிரிக்கிற விஷயம் இல்லை. அது ஒரு சின்ன இடைவேளை அவ்வளவு தான். கீதா நீ பிறக்கும் முன்னாடியே உன் மேல நிறைய பாசம் வைச்சிருந்தா! ஆனா, நீ பிறந்த பிறகு அதை தூரத்துல இருந்து உனக்கு தெரியாம காட்டுறா அவ்வளவு தான். நீ அழுதா அவளாள தாங்கிக்க முடியாது. அவளும் அழுவா! உனக்கு உன் அம்மா அழுதா பரவாயில்லையா?"
"நான் ஒண்ணும் அழலையே! "
"பின்ன?"
"கண்ணு வேர்க்குது! "
"ம். . . . . . வேர்க்கும்டா வேர்க்கும் இதுக்கு தான் நிறைய படம் பார்க்காதே-னு சொல்றது. உன்னை செல்லி தப்பில்லை உன்னை படம் பார்க்க கூட்டிட்டு போறான்ல அவனை சொல்லணும்! "-என்று தன் நண்பனின் பக்கம் திரும்பினான், சரண் ஏதோ யோசனையோடு நின்றிருந்தான்.
"ஆதி! "
"என்னடா?"
"என்னாச்சு?"
"ஒண்ணுமில்லை நான் கீழே இருக்கேன். நீ வா! "
"சரிடா"
"வா ராகுல் கேம் எடுத்து தரேன். "-என்று ராகுலையும் அழைத்து சென்றான். அவனின் அந்த நடவடிக்கைக்கான காரணம் ரகுவிற்கு தெரியாமல் இல்லை. பொதுவாக கூற வேண்டும் என்றால் அவன் கூறியது அனைத்தும் ராகுலுக்கு அல்ல சரணுக்கே என்பது அவர்கள் இருவரை தவிர யாருக்கும் தெரியாது. ரகு தயாராகி கீழே இறங்கி வந்தான். அங்கே ராகுலும், சரணும் விளையாடி கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் ரகுவிற்கு சிரிப்பு தான் வந்தது.
"இவன் இன்னும் திருந்தவே இல்லப்பா! "-என்று மனதில் எண்ணிக் கொண்டான். அவன் அவர்கள் அருகே வரும் போது, "ஹே! நான் ஜெயிச்சிட்டேன். "-என்று கத்தினான் ராகுல்.
"போ! நான் ஒத்துக்க மாட்டேன். மறுபடியும் விளையாடலாம் வா! "-அவனை ரகு இடைமறித்து,
"எப்பா! இந்தியன் ஏர்லைன்ஸ் ஓனர் நம்ம சொந்தகாரர் இல்லை. ஃப்லைட்க்கு நேரம் ஆயிடுச்சு கிளம்புடா! "
"போ! இரு ஊருக்கு போயிட்டு வந்து கவனிச்சுக்கிறேன். "-என்றான் சரண். அப்போது-
"பத்திரமா போயிட்டு வாங்க"-என்றார் ரகு வீட்டில் பணியாற்றும் சுந்தரேசன்.
"சரிண்ணே! ராகுலைப் பத்திரமா பார்த்துக்கோங்க. "
"சரிப்பா! "-ராகுலிடம் குனிந்து, "அடம் பிடிக்காம நல்ல பையனா இருக்கணும். "-என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் கையில் ஒரு அழகிய காப்பினை அணிவித்து, இன்னும் 2 மாசத்துல உன் பிறந்த நாள் வருதுல்ல, அப்பா உன் கூட இருப்பேனான்னு தெரியாது, அட்வாண்ஸ் ஹேப்பி பர்த் டேடா செல்லம்"-என்றான். அந்த காப்பினில், "மை ஹார்ட் இஸ் ஆல்வேஸ் வித் யூ"என்று எழுதியிருந்தது. ராகுல் அவன் கன்னத்தில் முத்தமிட்டான். அதைப் பார்த்த சரண், "நானும் இங்கே இருக்கேன். "என்றான். ராகுல் அவனிடம் ஓடிச் சென்று அவனை கட்டி அணைத்துக் கொண்டு அவனுக்கும் முத்தம் கொடுத்தான். இருவரும் காரில் ஏறி புறப்பட்டனர். இருவரின் மன நிலைகளும் அந்நேரம் ஒரே திசையில் வெவ்வேறு பாதையை நோக்கி பயணம் செய்தன.
சரணின் எண்ணம் முழுக்க அவன் சிறு வயதில் நடந்த சம்பவங்களில் மூழ்கியிருந்தது. சென்னை என்னும் மாநகரமானது, அவன் இன்பம், துன்பம், கோபம், நம்பிக்கை, வெற்றி, தோல்வி, ஏக்கம், துரோகம், காதல் போன்ற பலவற்றை பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட அற்புத பெட்டகமாகும். உண்மையை உரைக்க வேண்டுமென்றால், எதற்கும் அஞ்சாத அவன் நெஞ்சத்தில் ஒரு கலக்கம் குடிக்கொண்டிருந்தது. காரணம் என்ன?, அவன் அம்மாவா? அப்பாவா? அவன் தொலைத்த அன்பா? அவனின் தேடலா? மனதின் ரகசியமா?அவன் மனதை காயப்படுத்திய அம்பா??அது அவனுக்கே புலப்படவில்லை. ரகுவின் மனதிலோ ஒரே ஒன்று தான். அது, சரணின் அனைத்து சங்கிலிகளும் விரைவில் உடையப் போகிறது என்ற இன்பம். அவன் மனம் வேறு எதைப் பற்றியும் யோசிக்க விரும்பவில்லை. பல்வேறு யோசனைகளோடே இருவரும் விமானத்திலும் பயணம் செய்தனர்.
மனித வாழ்வினில் விந்தைகளை வைத்த இறைவனே நம்ப மாட்டான். அவன் மாயைகளையே வாழ்க்கையாக மாற்றிக் கொள்வான் என்ற உண்மையை! கண்களுக்கு புலப்படும் பல உண்மைகள் பொய்களே என்பது அவன் வகுத்த நாடகத்தின் நியதி!
இரவு வேளை இன்பமான நித்திரை கனவுகளோடு சில மணி நேர வாழ்வானது பலராலும் ரசிக்க தோணுகிறது. நினைவுகளோடு வாழும் வாழ்க்கையானது வெறுக்கப்படுகிறது.