(Reading time: 18 - 35 minutes)

தில்லியில் அந்த நேரத்தில் தன் அறையில் அமர்ந்திருந்தாள் சாந்தினி. கடந்த நான்கு ஐந்து நாட்களில் முப்பது முறை அந்த கடிதத்தை படித்திருந்தாள். அது அர்ச்சனா வசந்துக்கு கடைசியாய் எழுதிய கடிதம்.

அதன் வரிகள் அவளுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது. ஏதோ அவனிடம் நேரில் பேசுவது போலே எழுதி இருந்தாள் அர்ச்சனா.

என்னை மன்னிச்சிடு வசந்த். நான் தோத்து போயிட்டேன். இத்தனை வருஷம் எனக்காகவே வாழ்ந்த எங்க அப்பாவை விட்டிட்டு வர என்னால் முடியலை. என் அப்பா மேலே எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு வசந்த், அவர் தப்பு செஞ்சிருக்க மாட்டார். முக்கியமா எனக்கு அவர் தப்பு செய்யவே மாட்டார்.

தப்பெல்லாம் உன் மேலே தான் வசந்த். மனோ நிச்சியதார்த்ததிலே அந்த ஹோடேல்லே எல்லார் முன்னாடியும் உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னேனே அந்த நிமிஷமே எனக்கு தாலி கட்டி இருக்கலாமில்லே? தில்லியிலே உன்னை விட்டுட்டு போக மாட்டேன்னு அழுதேனே அப்பவாவது தாலி கட்டி இருக்கலாமில்லே? எல்லா வாய்ப்பையும் நீ தவற விட்டுட்டே.. பார் இப்போ நான் அழுதிட்டு இருக்கேன்.

எல்லாம் முடிஞ்சு போச்சு. போதும் வசந்த். இனி எல்லாம் போதும். வேறொரு பெண்ணை பார்த்து சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. சந்தோஷமா இரு. அதுதான் எனக்கு சந்தோஷம். என்னை பத்தி நினைக்காதே. என்னை மறந்திடு. என்னை தூக்கி போட்டுட்டு நிம்மதியாய் இரு.

                        அர்ச்சனா

அந்த கடிதத்தை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர்கள் இப்போது பிரிந்திருக்கிறார்கள் என்று மட்டும் நன்றாய் புரிந்தது அவளுக்கு.

தப்பெல்லாம் உன் மேலே தான் வசந்த். மனோ நிச்சியதார்ததிலே அந்த ஹோடேல்லே எல்லார் முன்னாடியும் உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னேனே அந்த நிமிஷமே எனக்கு தாலி கட்டி இருக்கலாமில்ல...........

அந்த வரிகள் அவளை என்னமோ செய்தன. உள்ளுக்குளே தவித்துகொண்டிருந்தாள் சாந்தினி.

நான்கு நாட்களுக்கு முன்னால் நடந்த அந்த சம்பவமும் சாந்தினியை குழப்பிக்கொண்டிருந்தது.

இரவு உணவிற்கு வசந்த் கீழே இறங்கி வராததால் உணவை எடுத்துக்கொண்டு மாடியேறினாள் அனு. மாடிப்படியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள் சாந்தினி. மாடியில் அவர்கள் பேசுவது தெளிவாய் கேட்டது அவளுக்கு.

'எனக்கு வேண்டாம்டா. பசியில்லை.' என்றான் வசந்த்.

'ஏன்? மத்தியானமும் சரியா சாப்பிடலை நீ. அர்ச்சனா ஞாபகமா? அவ தான் உன்னை நினைக்கறதே இல்லையே அப்புறம் ஏன் நீ மட்டும் இப்படி பைத்தியக்காரனா இருக்கே. அவளுக்கு சீக்கிரமே நிச்சியதார்த்தம்ன்னு மனோ அண்ணன்  காலையிலே  பேசும்போது சொன்னார். தூக்கி போடுண்ணா அவளை.

பதில் சொல்லவில்லை வசந்த். அர்ச்சனாவுக்கு நிச்சியதார்த்தமா? அதிர்ந்து போனாள் சாந்தினி.

ஊருக்கு வந்ததிலேருந்து இந்த ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறே. இந்த போட்டோவையே பார்த்திட்டிருக்கே. முதல்லே இந்த போட்டோவை தூக்கி போடு. ஏதோ ஒரு வேகத்திலும், அர்ச்சனா மீதிருந்த கோபத்திலும்  கண்ணிமைக்கும் அந்த புகைப்படத்தை கையில் எடுத்து தூக்கி போட  அது இரண்டு துண்டாகிப்போயிருந்தது.

அனு..... அதிர்ந்து ஒலித்த வசந்தின் குரல் கேட்டது சாந்தினிக்கு.

சற்று திடுக்கிட்டு போன அனு, ஏதோ பேச வாயெடுக்க ,

'நீ எதுவும் பேச வேண்டாம் கீழே போ ....' என்றான்  சற்று உயர்ந்த குரலில்

இல்லண்ணா.....

முதல்லே கீழே போ.....

பேசாமல் கீழே சென்று விட்டாள் அனு.

சில நிமிடங்கள் கழித்து முதுகில் மாட்டபட்டிருந்த பையுடன் கீழறங்கி வந்தான் வசந்த்.

தன் தவறை உணர்ந்தவளாய் சொன்னாள்  எங்கண்ணா கிளம்பிட்டே. என் பேர்லே ரொம்ப கோவமா? 'அய்யோ சாரிண்ணா. நான் ஏதோ கோபத்திலே....... அந்த போட்டோவோட காபி இருந்தா கொடு நான் வேற ரெடி பண்ணி கொடுத்திடறேன். ப்ளீஸ்ண்ணா. என் மேலே கோபப்படாதே.

மெல்ல புன்னகைதான் வசந்த். அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சாந்தினி. இந்த நேரத்திலும் எப்படி புன்னகைக்க முடிகிறது அவனால்?

கோவமெல்லாம் இல்லைடா என்றான் வசந்த். கொஞ்சம் மனசு சரியில்லை அவ்வளவுதான். ஒரு வாரம் எங்கேயாவது போயிட்டு வரேன்.

எங்கேண்ணா போறே?

சும்மா அப்படி எங்கேயாவது. கவலை படாதே ஒரு வாரத்திலே வந்திடுவேன். டோன்ட் வொர்ரி. அவள் கன்னத்தை தட்டி விட்டு நடந்தான் வசந்த்.

திகைத்துப்போய் அவன் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள் அனு. அந்த நிமிடத்திலிருந்து சாந்தினியின் மனம் இன்னமும் அதிகமாய் தவித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிச்சியதார்த்தம் நடக்க கூடாது. எப்படியாவது பெங்களூர் சென்று அர்ச்சனாவை சந்தித்து விட முடியாதா? அவர்கள் இருவரும் சேர்வதற்கு ஏதாவது செய்து விட முடியாதா?

ன் அறையில் படுத்துக்கிடந்தாள் அர்ச்சனா.  அவள் மனம் நிலையில்லாமல் சுழன்றுக்கொண்டிருந்தது.

என்னை ஏமாற்றி விட்டாரா என் அப்பா?  இத்தனை பெரிய துரோகம் செய்து விட்டாரா? ஏன்? ஏன்? ஏன்? இப்படி செய்தார் என் அப்பா.

அவர் என்னை அடித்திருந்தால் கூட அந்த வலி சில நிமிடங்களில் மறைந்திருக்கும். என்னை வார்த்தையால் சுட்டிருந்தால் கூட அந்த வலி சில நாட்களில் மறைந்திருக்கும். ஆனால் இந்த வலியை, என் நம்பிக்கை பொடிப்பொடியாய் போன வலியை எப்படி தாங்கிக்கொள்வேன்?.

வசந்தின் முகம் கண்முன்னே வந்தது போலே இருந்தது.

என் அப்பாவை பற்றிய அந்த கனவுக்கே நான் அத்தனை தவித்தேனே. உன் அப்பாவை இழந்து விட்ட பிறகும் என்னை பார்த்து சலனமே இல்லாமல் புன்னகைத்தாயே, வசந்த். உனக்கு என் மீது அத்தனை நேசமா?  உன் நேசத்தை அனுபவிக்கும் தகுதி எனக்கிருக்கிறதா? இல்லை நிச்சியமாக இல்லை.

சொல்லவில்லையே. நடந்தது எதையுமே என்னிடம் சொல்லவில்லையே அவன். நான் காயப்பட்டுவிடகூடாது என்பதால் தானே?

ஆனால் நான் என்ன செய்தேன்.? என் அப்பாவின் மீதிருந்த நம்பிக்கையில், அவருக்காக அவனை எத்தனை காயப்படுத்தியிருப்பேன்.

‘உன்னை எனக்கு பிடிக்கலை’ அவன் மனதை எப்படி கூறு போட்டிருக்கும் அந்த வார்த்தைகள்.

தகுதியே இல்லை எனக்கு. அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தகுதி கூட இல்லை எனக்கு.

அவள் மனம் மரத்துப்போயிருந்தது. கண்ணீர் கூட வெளியே வரவில்லை. அசைவின்றி படுத்துகிடந்தாள் அர்ச்சனா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.