03. என்னுயிரே உனக்காக - சகி
அழகான ரம்யமான பொழுது,மாலை வேளையில் மயக்கும் மதியின் எழில் முகம் காண்போரை கிறங்க வைக்கிறது.
"கவலைப்படாதே! தேவா!சரண் சரியாடுவான்."
"அவனா?கனவு தான் காண வேண்டும் மகேந்திரா!"
"இல்லடா!சரண் ரொம்ப நல்லவன் தான், இடையில நடந்த சில விஷயம் அவனை தற்காலிகமாக மாத்திருக்கு அவ்வளவு தான்."
"என்னை சமாதானம் பண்ணிடலாம்.ஆனா,அவனை முடியலையே!"-அவர் தன்னையே நொந்துக் கொண்டார்.
"கவலைப்படாதேடா!சரண் உன்னை விலக்க காரணம் சாரதா.அவ உன்னை எவ்வளவு நேசிச்சான்னு எனக்கு தான் தெரியும்.அவ இதை விரும்ப மாட்டாடா! சரணை அவ மாத்துவா கவலைப்படாதே."
"பார்ப்போம்."
அவர் பேசுவதில் இருந்து அவரின் வருத்ததை உணர்ந்துக் கொண்டார் மகேந்திரன்.காலம் என்பது காயத்திற்கு மருந்து போடும்.ஆனால்,வடுவை விட்டு வைத்திடும்.வடு ஆற வேண்டும் என்றால்,சதை கூடுவதை தவிர வேறு வழியில்லை.ஆனால்,சதையாய் இருக்க வேண்டியவனே,கூட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கின்றான்.திடீரென்று ஏதோ யோசித்தவராய்,"நான் சரண்கிட்ட பேசிட்டா தேவா?"
"விளையாடுறீயா மகேந்திரா? அவனா மற்றவங்க பேச்சை கேட்கிறவனா அவன்?"
"அப்படினா?மது பேசட்டுமே!"
"............"
"மதுக்கும்,சரணுக்கும் இடையில என்ன சண்டையோ தெரியலை.ஆனா,மது சொன்னா சரண் கேட்பான்!"
"முதல்ல....அவங்க சண்டை முடியட்டும் பார்ப்போம்."
விசித்ரமான மனிதர்கள்,முத்துக்களை விட்டு கூழாங்களை தேடி தொலைகின்றனர்.கண்களால் பிரகாசமாக மின்னக்கூடிய எல்லாமே முத்துக்களே என்ற எண்ணம் கொண்டுள்ளனர்.
ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் ஆதித்யா சரண்.தன் அன்னையின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டே மெத்தையில் சாய்ந்திருந்தான்.அவன் அன்னையின் சிரிப்பினில் தான் எவ்வளவு அழகு! எந்த கோபத்தையும்,ஆவேசத்தையும் அடக்கும் அம்சமான முகமல்லவா?கல்லையும் கரைக்கும் சக்தி உண்டல்லவா?அவன் கைகள் எதையோ அழுத்தமாக பிடித்திருந்தது.அது என்ன?அதை பிடித்த அவன் கைகளில் சிறிது நடுக்கம்.இது என்ன கற்பனையில் கூட பயத்தின் சாயல் கூட படாத அவனிடம் நடுக்கமா?ஆம்.....நடுக்கம் தான், காரணம்.......அது அவன் அன்னையின் வளையல்.அவன் அன்னை இறக்கும் முன்பு அவனிடம் எந்த காரணத்திற்காகவோ அளித்த வளையல். அந்த அறை முழுவதும் அவன் அன்னை சாரதாவின் நினைவுகளே இருந்தன.மெல்லிய ஒலி கேட்டு மயக்கம் கலைந்தான்.அவன் அறை கதவு திறக்கப்பட்ட ஒலி தான் அது.சரணின் கவனம் கதவருகே சென்றது.ரகு உள்ளே நுழைந்தான்.
"ஆதி...நீ இன்னும் தூங்கலை?"
"தூக்கம் வரலை..."
"ஏன்டா?"
"தெரியலை..."-ரகு அவனுக்கு ஆறுதலாய் அவனருகில் அமர்ந்தான்.
"அம்மா...ஞாபகம் வந்திடுச்சா?"-ஆதித்யாவிடம் பதில் இல்லை.
"இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே இருக்கப் போற?"
"ஏன்?"
"உனக்கு ஒரு வாழ்க்கை இருக்குடா!"
"அதான் வாழ்ந்துட்டு இருக்கேனே!"-அவன் பேச்சில் ஒரு கசப்பு இருந்தது.
"இது இல்லை.உன் வாழ்க்கையை நீ கெடுத்து வச்சிருக்க...12 வருஷத்துக்கு முன்னாடி இருந்த என் ஆதி இல்லை இது?"
"அந்த கதையை பேச வேண்டாம்."
"சூழ்நிலை வந்திருக்கு ஆதி...எனக்கு இன்று ஒரு முடிவு சொல்லு....உன் வாழ்க்கையில காதல்,கல்யாணம் இதுப்பற்றி எதாவது யோசிச்சிருக்கியா?"
"எனக்கு அதுக்கு நேரம் இருந்ததில்லை."
"ம்....இப்போ யோசி."
"அதுக்கு அவசியம் இல்லை."
"ஏன்??"
"என் வாழ்க்கையை யார் கூடவும் பங்கு போட நான் தயாராயில்லை."
"அதான்...ஏன்?"
"இந்த உலகத்துல காதல் இல்லை.எல்லாம் பொய்.நீ சொல்ற காதல்,கத்திரிக்காய் எல்லாம் துரோகம்.அதுவும்,சாதாரண துரோகம் இல்லை,நம்பிக்கை துரோகம்."
"ஆதி..?"
"உண்மை தான் ரகு..."
"அப்போ...மதுவை நீ காதலிச்சது கூட துரோகமா?"
"................."
"சொல்லுடா"
"மதுன்னு எனக்கு யாரையும் தெரியாது."
"ஆதி?"
"இது மேல எதையும் கேட்காதே."
"நீ இப்போ நான் சொன்னாலும்,கேட்க போறதில்லை.விடு...!தூங்கு."
"கொஞ்சம் நேரம் கழித்து தூங்குறேன்."
"சரி..."-என்று அவன் கிளம்பினான்.
"ரகு."
"ம்..."
"என் காதல் துரோகம் கிடையாதுடா..!"
"தெரியும்."-என்று மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்தான் அவன்.அவன் சென்ற பின்,மீண்டும் மெத்தையில் சாய்ந்தப்படி யோசிக்கலானான்.அவன் கண்களுக்குள் சிறு வயதில் அவளோடிருந்த நேரங்களுள் ஒன்றை நினைவுப் படுத்தியது.