(Reading time: 12 - 23 minutes)

05. என்னுயிரே உனக்காக - சகி

ந்தி நேர ஆதவன் மெல்ல தன் இன்றைய கடமையை உலகின் மற்றொரு திசைக்கு ஆற்ற மயங்கி கொண்டிருந்தான்.காலையில் பவித்ராவிடம் அவ்வளவு வீராப்பாய் பேசிவிட்டு வந்த போதிலும், அவனுக்கு தான் கூற இருக்கும் பதிலை எண்ணி சற்று கலங்கி இருந்தாள் மதுபாலா.

Ennuyire unakkaga

"மது....மது..."-என்று ஐந்தாவது முறையாக அழைத்தாள் ஸ்ரேயா, அவள் மருத்துவமனையில் பணிப்புரியும் ஒரு மருத்துவர்.

"சொல்லு...சொல்லு ஸ்ரேயா!"

"ஹே...என்ன யோசிக்கிற? ஐந்தாவது முறையா கூப்பிடுறேன்.காலையில இருந்து நீ சரியே இல்லை.என்னாச்சு? "

"இல்லை...ஒண்ணுமில்லை."

"என்னமோ நீ சரியில்லை.சாயந்திரம் எங்கேயோ போகணும்னு சொன்ன...!"

"ஞாபகம் இருக்கு!"அவள் பேச்சு அவளுக்கு ஏனோ சரியாகப்படவில்லை.திடீரென்று அந்த மருத்துவமனை பரபரப்பானது.

"என்னாச்சு? என்ன சத்தம்? "

"பார்க்கிறேன் மது!"-என்று வெளியே சென்றவள் பரபரப்புடன் உள்ளே நுழைந்தாள்.

"மது...சீக்கிரம் வா!ஒரு ஆக்ஸிடன்ட் கேஸ்."

"என்ன? சீரியஸா? "

"ஆமா..."

"உடனே ஐ.சி.யூ.க்கு கூட்டிட்டு போங்க..."-என்று விரைந்து வெளியே வந்தவளுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

"இவன் என்ன இங்கே பண்ணுறான்? "-என்று எண்ணிக்கொண்டே அங்கே நின்று கொண்டிருந்த ரகுவிடம் சென்றாள்.

"ரகு...நீ என்ன இங்கே பண்ணுற? யாருக்கு ஆக்ஸிடன்ட்? "

"மது..."-அவன் பேச்சு குழறியது.

"இரு.....நான் போய் பார்க்கிறேன்!"-என்று ஐ.சி.யூ.வார்டுக்குள் நுழைந்தவளுக்கு மேலும் அதிர்ச்சி.அவளை அறியாமல்,

"ஆதி..."-என்று உரைத்தாள்.ஆம்...!விபத்து நேர்ந்தது ஆதித்யா சரணுக்கே!அவள் மனம் பதறியது.சரணுக்கு தலையில் பலத்த காயம்!இரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.அவளுக்கு இருதயமே வெடித்துவிடும் போல இருந்தது.

"மது...என்ன பார்க்கிற? சீக்கிரம் ரத்தம் நிறைய போகுது."-என்ற ஸ்ரேயாவின் குரலில் கலைந்தவள், சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தாள்.சரணின் நெற்றியில் வழிந்தோடிய ரத்தத்தை துடைத்தாள், எனினும் ரத்தப்போக்கு நிற்கவில்லை.மிகுந்த சிரமத்திற்கு பிறகு, ரத்தப்போக்கு நின்றது.

"இவர் உடம்புல, ரத்தம் குறைந்து இருக்கே!உடனே, எந்த குரூப்னு செக் பண்ணுங்க.."-என்று ஸ்ரேயா பக்கத்தில் இருந்த செவிலியருக்கு ஆணை பிறப்பிக்க, மதுபாலாவை அறியாமல் அவள் வாயிலிருந்து,

"ஓ-பாசிட்டிவ்."-என்று பதில் வந்தது.இரு நொடி ஸ்ரேயா ஸ்த்தம்பித்து மதுவைப் பார்த்தாள்.

"அவருக்கு ரத்தம் ஏத்துங்க!"-என்ற மதுவின் வார்த்தைக்கு தலை குனிந்தாள் அந்த செவிலி.

"ஸாரி...மேடம்...நம்மகிட்ட அந்த குரூப் ஸ்டாக் இல்லை."

"வாட்? ஒரு நர்ஸ் பேசுற பேச்சா இது? என்கிட்ட முதல்ல சொல்றதில்லை..? "

"ஸாரி...மேடம்."

"என்ன ஸாரி? "-அவள் கடிந்துக் கொண்டிருக்கும் போது,

"மது...பல்ஸ் குறையுது மது..."-எச்சரித்தாள் ஸ்ரேயா.மதுபாலாவிற்கு மூச்சே நின்றுவிட்டது.பின், ஏதோ நினைவு வந்தவளாய்,

"என் பிளட்டை அவர் உடம்புக்கு மாற்றுங்க.."-அவள் கூறியது சற்றே அனைவருக்கும் திகைப்பை வரவழைத்தது.

"சீக்கிரம்....நேரமில்லை.நானும் ஓ-பாசிட்டிவ் தான்."-அவளின் ஆணைக்கு இணங்கி எல்லாம் நடந்தேறியது.சரியாக, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், உயிர் பிழைத்தான் சரண்.ஆனால், நினைவு திரும்பவில்லை.மதுவிற்கு சுயநினைவே இல்லை.வார்ட்டை விட்டு வெளியே வந்தாள்.

"து...ஆதிக்கு? "

"ஆக்ஸிடண்ட் எப்படி ஆச்சு ரகு? "-ரகு சிறிது நேரம் மௌனம் சாதித்தான்.பின்,

"காலையில இருந்தே....அவன் கோபத்துல இருந்தான்.யார் கூடவும் சரியா பேசலை.2 மணிநேரத்திற்கு முன்னாடி கொஞ்ச தூரம் கார்ல போயிட்டு வந்திடுறேன்னு போனான்.காலையில இருந்த கோபத்தை எல்லாம் கார் மேல காட்டிருக்கான்.எதிர்ல லாரி வந்து...."-அதன் மேல் அவனால் ஒன்றும் கூற முடியவில்லை.மதுவிற்கு அவனது, கோபத்திற்கு காரணம் தானோ!என்று தோன்றியது.அவளது மனநிலையை படித்தவனாய், ரகு,

"இன்னிக்கு சாரதா அம்மாவோட பிறந்த நாள்."-என்று உரைத்தான்.அவளுக்கு புரிந்தது.சரணின் சினத்திற்கு காரணம், அவன் தாய் அவனோடு இல்லாததே!அவன் அன்னை அவனோடு இருந்த பட்சத்தில், அவர் பிறந்தநாளை அவன் எப்படி கொண்டாடுவான் என்று அவளுக்கு தெரியாமல் இல்லை.

"உங்க நண்பனுக்கு ஒண்ணுமாகலை.மயக்கத்துல இருக்காரு!6 மணி நேரம் கழித்து தான் மயக்கம் தெளியும்.வார்டு மாற்றின பிறகு போய் பார்க்கலாம்."

"மது....சரண் விஷயமா உன்கிட்ட பேசணும்."

"இது...ஹாஸ்பிட்டல்."

"ஆனா, நான் உன்கிட்ட ஒரு உண்மையை சொல்லணும்."

"சரி..என் ரூம்க்கு வா...ரகு!"-இருவரும் சென்றனர்.

"சொல்லு..."

"நான் சொல்றதை கேளு....கோபப்படாதே!சரண் உன்கிட்ட தப்பான அர்த்ததுல எதுவும் பேசலைம்மா!"

"என்ன? "-அவளுக்கு கோபம் தலைக்கேறியது.

"என்கிட்ட அவன் தப்பா பேசலையா? ஓ.....உங்க நண்பன் தானே!அவன் தப்பே பண்ணி இருந்தாலும் நீங்க சரின்னு தானே சொல்லுவீங்க.நீயுமா? அவன் தப்பை நியாயப்படுத்துற ரகு? "-அவள் பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான் ரகு.பின்,

"இதுதான் பெரியவங்க ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்லுவாங்க.நான் சொல்றதை கேளு...அன்னிக்கு அவன் உன்னை சந்தேகப்பட்டான் தான்.ஆனால், அந்த சந்தேகம்...நீ அவனை விட்டுட்டு மஹாதேவன் அங்கிள் பக்கம் போயிட்டியோன்னு தான்!"

"என்ன? "

"ஆமா....உனக்கே தெரியும் அவனுக்கு ஈகோ அதிகம்ன்னு அவன் வேறன்னு கேட்தற்கான அர்த்தம், அவன் தோல்வி தானோன்னு நினைச்சிட்டான்.அவன் தவறான அர்த்ததுல எதுவும் பேசலை.நாம தான் குறிப்பிட்டு நீ தான் தவறா எடுத்திருக்க!"-அவள் ஆடியே விட்டாள்.

"ரகு? "

"இந்த விஷயத்தை நேற்று தான் சொன்னான்.அவன் இத்தனை வருஷமா உன்கிட்ட பேசாததிற்கு காரணம், நீ அவனை விட்டுட்டு போயிட்டன்னு அவன் முடிவே கட்டிட்டான்.ஆனாலும், அவனால, உன்னை பார்க்கும் போது அவனை கன்ட்ரோல் பண்ண முடியலை.ஆதி...இன்னும் உன்னை மறக்கலைம்மா!நான் சொல்லிட்டேன்.வரேன்."-அவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

துபாலா தன் வாழ்வில் முதன் முறையாக ஒரு தவறு இழைத்து விட்டோம் என்று வருந்தினாள்....இது யோசனையாய் மாறி அவளை அரித்தது.நேரம் போனதே அவள் கண்களுக்கு தெரியவில்லை.அவளது சிந்தனைகளை எல்லாம் கலைக்கும் வகையில், அவளது கைப்பேசி அழைத்தது.அவள் யார் அழைப்பது என்று கூட பார்க்கவில்லை.

"ஹலோ!"

"மது...என்னடா? மணி பத்தாகுது...இன்னும் வீட்டுக்கு வரலை? "

"அக்கா...அது...வந்து....ஆதிக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சிக்கா"-என்று அனைத்தையும் சுருங்க கூறினாள்.

"என்னம்மா? இப்போ பரவாயில்லையா? நான் அப்பாவை வர சொல்லட்டா? "

"இல்லக்கா...ரகு இருக்கான்.நான் காலையில வரைக்கும் இங்கேயே இருக்கேன்க்கா..!"-அவள் கூறியதைக் கேட்டு பவித்ராவிற்கு அந்த வருத்தத்திலும், ஆனந்தம் பொங்கியது.

"சரிடா...பார்த்துக்கோ!எதாவதுன்னா போன் பண்ணுடா!வச்சிடுறேன்."-இணைப்பு துண்டிக்கப்பட்டது.மதுபாலாவிற்கு இருப்பு கொள்ளவில்லை.சரணை பார்க்க வேண்டும், அவனிடம் மனசுவிட்டு பேச வேண்டும், அவன் மார்பில் சாய்ந்து அழ வேண்டும், அவனிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றெல்லாம் தோன்றியது.அதற்கு, மேல் அவள் அங்கே இருக்கவில்லை.சரண் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டிற்கு சென்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.