(Reading time: 5 - 10 minutes)

01. கனியாதோ காதலென்பது! - Anna Sweety

நிரல்யா தன் ஃபிளாட்டில் நுழைந்ததும் செய்த முதல் வேலை தொலைகாட்சியை உயிர்பித்ததுதான். தொலைகாட்சிக்கு எதிரே இருந்த ஃபோம் சோஃபாவில் புதைந்தவண்ணம் நீல ஜீன்ஸ்க்கு ஏற்றவாறு அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் மேலாடைக்கு மேலாக அலங்காரமாக உடுத்தியிருந்த வெண்ணிற நெட்டட் ஷ்ரகை மட்டும் கழற்றிவிட்டு கேன்வாஷை கழற்ற ஆரம்பித்தாள்.

ஏதோ ஒரு ஹெலிகாப்டர் அத்து மீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக ரேடார் தெரிவிக்கிறதாம். ஆனால் அதன் பின் அந்த ஹெலிகாப்டர் எங்கிருக்கிறது என்ற தகவலே இல்லையாம். அதுதான் அப்போதைய பரபரப்பு செய்தி.

தொலைகாட்சியில் ஹெலிகாப்டர் சத்தமிட்டவாறு பறந்து கொண்டிருந்தது. ஏதோ இவள் வீட்டிலேயே பறப்பது போன்ற பிரமை.

kaniyatho kathal enbathe

கலீரென கண்ணாடி உடையும் சத்தம் பின்புறம். திரும்பி பார்த்தால் வரவேற்பறையின் பால்கனிக்கு செல்லும் கண்ணாடி கதவினை உடைத்துகொண்டு கனத்த துப்பாக்கியுடன் படு வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தான் ஒருவன்.

இவள் கத்த தொடங்கும் முன்பே இவளது இரு கைகளையும் தன் ஒரு கையால் பின்னுக்கு இழுத்து மறுகையால் இவள் வாயில் பெரிய துணி பந்தை திணித்தான்.

இவள் திமிறல் யானையின் முன்பு எறும்பின் முயற்சியாயிற்று.

தர தரவென இழுத்துகொண்டு பால்கனி வழியாக வெளியே வந்தவன் அங்கு தொங்கிக்கொண்டிருந்த கயிறை பிடிக்க, கயிறு பறக்க தொடங்கியது. ஆம், அது ஹெலிகாப்டரிலிருந்து தொங்கி கொண்டிருந்ததே!

நொடியில் விஷயம் புரிந்துவிட்டது. அந்த ரகசிய ஹெலிகாப்டர் ...... இவளைத்தான் கடத்த வந்தது போலும்.

வந்தவன் அசுர பலத்துடன் இருந்தான். இவளை சுமந்தபடி ஹெலிகாப்டரினுள் ஏறிவிட்டானே! அந்த சினூக் வகை ஹெலிகாப்டரினுள் நடுவில் ஒரு கம்பிதூண் இருந்தது. அதில் இவளை கொண்டுகட்டினான் அந்த தாடிகாரன்.

முகமே அடையாளம் தெரியாதபடி மூடி மறைத்திருந்தது காடாய் வளர்ந்து மார்புவரை நீண்டிருந்த தாடி. அடையாளம் வைத்துகொள்ள நினைத்தாலும் முடியாதோ?

ராணுவ வீரன் உடைபோல் ஒரு ஃபேன்ட்ஸும் கையில்லா பனியனும் அணிந்திருந்தான் அவன். கைகள் முறுகி இருந்தன.

வளை கட்டிவிட்டு காக்பிட் நோக்கி நடக்க தொடங்கியவன் சட்டென திரும்பி மீண்டும் இவளிடமாக வந்தவன், ஒரு இளிப்புடன் இவளை நோக்கி இரு கரங்களை நீட்டியபடி இவள் மீது சாய்ந்தான்.

உயிரே போய்விட்டது நிரல்யாவிற்கு! அதுவரை அவளுக்கு ஆபத்தைவிட முதலில் புரிந்தது அதிர்ச்சியே.

இப்பொழுது முடிந்தவரை பலம் கொண்டமட்டும் திமிறியபடி போராட தொடங்கினாள். கைகளும் கால்களும் விலங்கிடபட்டிருக்க, வாய் அடைக்கபட்டிருக்க, என்ன போராட?

ஆனாலும் போராடினாள். அருவருப்பு, பயம், பீதி எல்லாம் திரள, தான் மிகவும் தைரியமான பெண் என்ற கர்வம் கரைய கண்ணீரோடும் ஜெபத்தோடும் மரண ஓலமிட்டாள். அது சிறு முக்கல் ஒலியாக வெளிபட்டது.

உதவி எங்கிருந்து வர முடியும்?

ந்நேரம் காக்பிட்டிலிருந்து ஒருவன் வெளியே வந்தான். இந்த முதல் தடியனை போன்றே உடையணிந்து, அதே தாடியுடனும், முறுக்கேறிய உடலுடனும் வந்தான் அவன்.

ஐயோ! தெய்வமே! இரண்டாவது மிருகமுமா?

வந்தவன், இவள் எதிர்பாராத விதமாக, இவளை வேட்டையாட விரும்பிய மிருகத்தின் தலையை சுட்டான். அவன் சரிய தொடங்க, அடுத்த குண்டு அவன் மார்பில் தஞ்சம் புகுந்தது. ‘ஹக்’ என்ற ஒலியுடன் அவன் விரைத்தான்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது அனைத்தும். சிறுவயதில் கண் முன் தன் தாய் இறப்பதை பார்த்திருக்கிறாள் நிரல்யா. ஆனால் அது இயற்கை மரணம். அதன் பின் பார்க்கும் மரணம் இதுதான்.

எவ்வளவோ கொடியவனாக செத்தவன் நடந்து கொண்டிருந்தபோதும் அவன் மரணத்தை பார்க்கும்போது ஒன்றும் ரசிக்கும்படியாக இல்லை. கண்களை மூடிக்கொண்டாள் நிரல்யா. கண்களிலிருந்து அருவியாய் நீர். கடந்த சில நிமிடங்களில் அவள் வாழ்வில்தான் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது?

திடுமென இவள் வாயிலிருந்த துணி பிடுங்கப்பட, எதிரே அந்த இரண்டாம் மிரு..... தாடிகாரன், தண்ணீரை நீட்டியபடி. அவள் கைகளும் விடுவிக்கபட்டிருந்தது அப்பொழுதுதான் புரிந்தது. ஆனால் கால்கள் இன்னும் விலங்கிடப்பட்டுதான் இருந்தது.

தண்ணீரை வாங்கி பருகினாள். இதற்குள் இந்த இரண்டாம் தாடிகாரன் முதலாமவனின் மேலுடையை களைந்தவன், அதை இவளிடமாக நீட்டினான். இவள் கால் விலங்கை சாவியிட்டு திறந்தான்.

ஒரு வார்த்தை பேசவில்லை அவன்.

அவன் கண்கள்..... அப்படி ஒரு கண்களை ஆளுமை நிறைந்த, கூர்மையான, கருணை கடலாய், உயிர் கவரும், இராஜ கண்களை இவள் இதுவரை பார்த்ததே இல்லை. அந்த கண்கள் ஆயிரம் பேசின. இவளை உடை மாற்ற சொன்னதும் அந்த கண்கள்தான். அவனை நம்ப அறிவுறித்தியதும் அதே கண்கள்தான்.

அவன் மீண்டும் உள்ளே செல்ல சரசரவென தன் உடையை களைந்து அந்த முதல் மிருகத்தின் உடைக்கு மாறினாள். இடுப்பில் நிற்கமாட்டேன் என்ற ஃபேன்ட்ஸை பெல்டால் இருக்கினாள். மேலாடையின் கழுத்துபகுதி இவள் பயந்ததுபோல் கீழிறங்கி இல்லாதது இவளுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் கைகளுக்கான ஓட்டைதான் மிகவும் பெரியது. வழிந்து தொங்கியது ஆடை.

ரு கணைப்பொலியுடன் மீண்டும் காக்பிட்டினிலிருந்து வெளியே வந்தான் அவன். வருவதை அறிவிக்கிறானாம். வெல் மேனர்டு டெரரிஸ்ட்!

வந்து இவளை பார்த்தவன், மீண்டுமாக உள்ளே சென்றுவிட்டு வந்தான். கையில் ஒரு சட்டை. அதை வாங்கி அணிந்து கொண்டவள் நன்றி சொல்ல இயல்பாக வாயை திறக்க, மின்னல் வேகத்தில் இவள் வாயை பொத்தினான்.

அவன் முரட்டு கரத்திற்கும், இவள் பற்களுக்கும் இடையே மாட்டி கிழிந்தது இவள் மேல் உதடு.

சட்டென அருகில் கிடந்த துணி, அதாவது அதுவரை அவள் வாயை அடைத்திருந்த துணியை எடுத்து இவள் வாய்க்குள் திணித்தான். கைகளும் கால்களும் மீண்டும் விலங்கிடப்பட்டன. இவன் என்ன செய்கிறான்?

அந்த மிருகத்தை கொன்றதும் தீவிரவாதிகளின் திட்டபடிதானா? இவளுக்கு உதவுவதற்காக இல்லையா? ஒரே பார்வையில் இவளை எப்படி ஏமாற்றிவிட்டான்? முறைத்தாள் அவனை. அவளால் அப்பொழுதைக்கு முடிந்த ஒரே விஷயம்.

ஒரு லிக்கர் பாட்டிலுடன் வந்தான் அவன்.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:752}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.