(Reading time: 22 - 43 minutes)

02. கனியாதோ காதலென்பது! - Anna Sweety

லிக்கர் பாட்டிலை திறந்து பிணத்தின் மேல் ஊற்றினான் மிக கவனமாக, சிந்தாமல் சிதறாமல். அடுத்ததாக, இவள் களைந்து வைத்திருந்த ஜீன்ஸின் கால் பகுதிகளை நீளவாக்கில் வெட்டினான். இடுப்பு பகுதியில் அடுத்த வெட்டு. அதை விழுந்து கிடந்த சடலத்திற்கு அணிவித்தான். அதேபோல் இவளது மேலாடையும் தேவையான வெட்டுகளுக்குப்பின் விரைத்திருந்தவனுக்கு பொருத்தப்பட்டது. ‘இதுக்கெல்லமா ட்ரெயினிங் தர்றாங்க?’

அவனது அனைத்து செயல்களின் மேலும் அப்படி ஒரு ஆளுமை இருந்தது அவனுக்கு. எதையும் சிந்திக்க நேரம் எடுப்பதாகவும் தெரியவில்லை.

மீண்டும் சிறுது லிக்கரை அந்த சடலத்தின் மேல் ஊற்றியவன், இறந்தவனை இழுத்துச் சென்று ஒரு ஓரமாக வைத்துவிட்டு, காக்பிட்டிற்குள் சென்றான்.

Kaniyatho kathal enbathu

இங்கு பின் பகுதி கதவு திறந்தது. அதன் வழியே பிணத்தை இழுத்து வெளியே எரிந்தவன் கையிலிருந்த துப்பாக்கியால் கடல் நோக்கி விழுந்துகொண்டிருந்த சடலத்தை நோக்கி சுட்டான். அது பிணத்திற்கு எரியூட்டியது.

கடலுக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறோம் என இவளுக்கு புரியும்படியாக அவள் கண்களுக்கு திறந்த கதவு வழியாக தெரிந்ததெல்லாம் கடல், கடல் மட்டும்தான்.

மீண்டும் காக்பிட்டிற்குள் அவன் செல்ல கடந்தது சில மணி நேரம்.

தன் நிலையை நினைத்து பயமாக, வேதனையாக, குழப்பமாக, இருந்தது நிரல்யாவிற்கு. அவளது தந்தை நாடாளும் பிரதமராக இருப்பதனால் இவள் கொடுக்க வேண்டிய விலை என்ன?

சிறு வயதில் தாயை இழந்து, படு தீவிர அரசியல்வாதியான தந்தையின் ஒரே மகளாக வளர்ந்தவள் நிரல்யா. பல நேரங்களில் தனிமையே துணை.

சங்கத் தமிழ் பெயர் என்ற காரணத்திற்காக மட்டும்தான் இவள் தாய் இவளுக்கு நிரல்யா என பெயரிட்டது. ஆனால் இவளுக்கோ பெயரின் பொருளைப்போல எல்லாவற்றிலும் பெர்பெக்க்ஷன் வேண்டும். தவறுகளை வெறுப்பவள். அதே நேரம் இரக்க சுபாவமும் அதிகம்.

அந்த குணாதிசயங்கள் தவறேதும் செய்யாமல் இப் புவியில் வாழ்ந்துகாட்டி, தவறு செய்யும் மனிதர்களின் மன்னிப்பிற்காய் தான் மடிந்து, மீண்டுமாய் உயிர்த்த யேசுவிடம் இழுத்தது அவளை.

பல இன, மத, மொழி மக்கள் வாழும் தேசத்தை, ஆளும் ஆட்சியாளன் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவையும் பின்பற்றகூடாது என்பது இவளது தந்தையின் கொள்கை. அவர் ஆத்திகரா, நாத்திகரா என்றுகூட இவள் உட்பட யாருக்கும் தெரியாது.

எதையும் இவள் மீது திணிப்பது அவர் சுபாவம் அல்ல. அதனால் இவள் கடவுள் நம்பிக்கையை அவர் மறுக்கவுமில்லை, வெறுக்கவுமில்லை. ஆனால் இவளது கடவுள் நம்பிக்கை, அவரது அரசியல் கொள்கை வாரிசாக மகள் வரமாட்டாள் என உணர்த்தியதால் ஒரு சிறு மன தாங்கல் அவருள்.

அந்த மனதாங்கல் கசப்புணர்ச்சியாய் மாறிவிட கூடாதென, தன் இருப்பிடத்தை கல்லூரி படிப்பிற்கென தந்தையருகிலிருந்து, இப்படி கடலருகிலிருக்கும் மாநகருக்கு மாற்றி வந்திருந்தாள் நிரல்யா.

ஒரு மொத்த அப்பார்ட்மெண்டும் இவளது. பாதுகாப்பின் நிமித்தம் இரண்டாம் தளம் மட்டும் இவளது வீடாக பயன்பட்டது. மற்றவை பாதுகாப்பு ஏற்பாட்டிற்கென ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் கடத்தப்பட்டாயிற்று! இனி ..........மரணமா?

மரண பயம் துளியும் கிடையாது நிரல்யாவிற்கு. ஆனால்.......... மரணத்திற்கு முன்பாக வரும் மற்ற சித்ரவதைகள்?........தெய்வமே!

தே நேரம் பின்புற கதவும் திறந்தது. அவன் வந்தான். இவளது கை விலங்குகளை அவிழ்த்தவன் இவள் கண்களை பார்த்தான். அவனை நம்ப சொன்னது அந்த கண்கள். திறந்திருந்த திறப்பின் வாசலுக்கு வந்தனர் இருவரும். பாராசூட் மாட்டியிருந்தான் அவன். இவளிடம் எதுவுமில்லை.

அடுத்தது என்ன? கடலில் குதிக்க போகின்றனர் இருவரும். கண்களில் மிரட்சி நிரல்யாவிற்கு. மெல்ல அவள் தோளை தட்டினான் அவன். ஒரு மனிதனால் அத்தகைய ஆறுதலை உணர்வது அதுவே முதல்முறை அவளுக்கு. கண்களை மூடிக்கொண்டாள்.

சட்டென அவளை தன்னோடு சேர்த்தணைத்தபடி குதித்துவிட்டான் அவன். பயம், திகில், குழப்பம், கூச்சம் எல்லாவற்றையும் தாண்டி அப்படி விழுவது சுகானுபவமாக இருந்தது அவளுக்கு.

அம்மாவின் அணைப்பில் இருப்பதாய் உணர்வு.

மெல்ல ஆடியபடி கடலில் விழுந்தனர் இருவரும். அவளையும் பிடித்தபடி நீந்தி கரையேறினான் அவன்.

அடர் புதரும், சகதியும், காடுமாய் இருந்தது அவ்விடம். கஷ்டப்பட்டு தட்டு தடுமாறி நடந்தாள் அவள்.

புதர்களையும் மரங்களையும் தாண்டி தடவியபடிச் செல்ல திடீரென கண்ணில் பட்டது அந்த வீடு. ஒரு வீட்டை அந்த இடத்தில் ஆறாம் அறிவுள்ள எந்த ஜந்தும் எதிர்பார்க்க வழியே இல்லை.

அருமையான மறைவிடம். எதிரியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால் உள்ளுக்குள் பயம் தந்தி வாசித்தது. அட்ரீனல் சுரப்பி அதன் வேலையை காட்டியது.

‘உள்ளே எத்தனை பேர்? இவளை எங்கே கொண்டு மாட்டிவிட போகிறான்?

பெரிய கட்டை அல்லது கல் எதையாவது எடுத்து இவன் பின் தலையில் போட்டால் என்ன?’ கண்கள் துளாவின....ஒரு நொடிதான். ‘இவனை அடித்துப்போட்டால் உள்ளே இருப்பவர்களிடமிருந்து இவளை காப்பது யாராம்? ஒருவேளை இவன் உதவகூடும். இவனும் செத்துவிட்டால் இவளுக்கு உதவிக்கென்று நிச்சயமாக யாருமில்லை. என்ன செய்ய? அடிக்கவா? வேண்டாமா?’

மூடன் வன்முறையை நம்புகிறான் என்று படித்தது ஞாபகம் வந்தது. அசையாமல் சில கணம் நின்றவள் அவனை பின்தொடர்ந்தாள்.

கதவருகில் சென்றவன், தன் இட நெஞ்சில் வலகை வைத்தபடி வானத்தை பார்த்தான் ஒருநொடி. ‘ஓ ப்ரேயர் டைம்!!!!!’ என இவள் நினைத்து முடிக்கும் முன் கதவை திறந்து உள்ளே சென்றவன் முன்னறையிலிருந்த மூவருக்கும் ஆளுக்கு இரண்டு வீதமாக குண்டுகளை தானம் வழங்கினான். பாரபட்சமின்றி அனைவரின் மூளைகளையும். இதயங்களையும் சத்தமின்றி துளைத்திருந்தன அவை.

நடந்ததை இவள் முழுவதுமாக புரிந்து கொள்ளும் முன் இவளை இழுத்தபடி உள்ளறையை நோக்கி நகர்ந்தான். அங்கிருந்த ஆட்கள், தெரிய தொடங்கிய நேனொ செகண்டின் தொடக்கதில் சரிந்து விழுந்தனர். அதே! அதே! தலையும் இடமார்பும். இரு நொடி முடியும் முன் மொத்தம் ஆறு சடலங்கள்.

நிச்சயமாக உள்ளே இருந்தவர்கள் போல் இவளும் இதை எதிர்பார்க்கவே இல்லை. ‘கொல்வதென்பது இவனுக்கு குல்ஃபி சாப்பிடுற மாதிரியா?’ காதுகளை இரு கைகளாலும் பொத்தியபடி, சுவரோடு பல்லிபோல் ஒண்டினாள். கண்ணிலிருந்து தாரை தாரையாய் நீர்.

அவனோ இவள் ஒருத்தி இருப்பதை சட்டை செய்யவே இல்லை. பின் கதவை திறந்து வைத்தவன் படுவேகமாக ஒவ்வொரு சடலாமாக கொண்டு சென்று அங்கிருந்த கறுப்பு நிற பேரல்களில் அடைத்து மூடினான். இந்த இடம் இவனுக்கு அத்துபடிபோல்!

பின்பு இவளிடமாக வந்தவன், அரண்டு பார்த்திருந்தவள் எதிர்பாரா விதமாக, இவள் இரு கைகளை பின்னால் வைத்து கட்டியவன், கால்களையும் கட்டி ஒரு அறையின் தரையில் உருட்டினான். ‘என்ன செய்து கொண்டிருக்கிறான் அவன்?’

‘இரட்ஷகனா? இராட்ஷசனா?’

ப்பொழுதுதான் அவளுக்கு உறைத்தது அதுவரை அவள் தன் வாய் கட்டை தன் கைகளால் அவிழ்க்கவே இல்லை என. ‘என்ன நடக்கிறது தனக்குள்?’ ‘ம், அவன் தொடுறப்ப அம்மா ஞாபகம் வந்துச்சு உனக்கு.’ குத்திக்காட்டியது மூளை.

அதைவிட பெரிதாக குழப்பியது அவனின் நடவடிக்கைகள். அடுத்திருந்த அறையில் அங்கிருந்த கணிணியை அவன் குடைவது இவளுக்கு ஏதோ ஒரு கோணத்தில் தெரிந்தது.

மங்கலான வெளிச்சம். எவ்வளவு நேரம் சென்றதோ? பகல் முடிந்து இரவானது.

“சி. டி ஒன் ஹியர், சி. டி ஒன் ஹியர் ஃப்ரம் சி ஓ, ஃப்ரம் சி ஓ, ஓவர் ஓவர்.....”

அவன் சத்தம்தான்! வெகு நேரத்திற்கு பின் மரண அமைதிபோலிருந்த அந்த சூழலில் உயிரின் அடையாளமாக கேட்டது அக்குரல். காதை தீட்டிகொண்டு அவன் பேசுவதை கவனித்தாள். பல புதிர் முடிச்சும் அவிழ்ந்தாலும் குழப்பம் முழுமையாக நீங்கவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.